Published:Updated:

டிராக்டர் பேரணி: சர்ச்சைக்குரிய ட்வீட்கள்... மத்திய அரசு கோரிய 97% கணக்குகளை முடக்கிய ட்விட்டர்

ட்விட்டர் - விவசாயிகள் போராட்டம்
ட்விட்டர் - விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு கோரியிருந்த 97 சதவிகித ட்விட்டர் கணக்குகளை முடக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, கடந்த நவம்பர் மாதம் முதல் தலைநகர் டெல்லியில் பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது, செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்த சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கான காவலர்கள் காயமடைந்தனர். இந்தக் கலவரத்தை அடுத்து, விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாகப் பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்விட்டரில் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துவருகிறார்கள். இதில், அரசுக்கு எதிராகவும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் ட்வீட் செய்த 1,178 ட்விட்டர் கணக்குகளை முடக்கும்படி, மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திடம் கோரிக்கைவைத்திருந்தது. இந்தக் கணக்குகள் பாகிஸ்தான், தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் என்றும், தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்றும் அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்தக் கோரியையைப் பரிசீலனை செய்த அந்நிறுவனம் 500 கணக்குகளை மட்டும் இடைநீக்கம் செய்தது. கருத்து சுதந்திரத்தைக் கருத்தில்கொண்டு மற்ற கணக்குகளை முடக்க முடியாது என்று ட்விட்டர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தச் செயல்பாட்டால், ட்விட்டர் நிறுவனத்தின் மீது மத்திய அரசு கடும் அதிருப்தி அடைந்திருக்கிறது.

மத்திய அரசு #ModiPlanningFarmerGenocide என்ற ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்திருந்த 257 கணக்குகளை நீக்கக் கோரியிருந்த நிலையில், வெறும் 126 கணக்குகளை மட்டுமே நீக்கியிருந்தது. `மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உடனடியாகப் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் விவாதத்துக்கே இடமில்லை. இது இந்த நாட்டின் சட்டம், இந்த உத்தரவில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ளுங்கள்’ என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

விவசாயிகள் போராட்டம்: ட்விட்டர் Vs மத்திய அரசு... என்ன நடக்கிறது?

மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றாததால், அதிகாரிகள் கைதுசெய்யப்பட வாய்ப்பிருப்பதாகக்கூட தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், மத்திய அரசுடன் ட்விட்டர் நிறுவனம் காணொலி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் அமெரிக்காவில் நடந்த கேபிடால் கலவரங்களையும், ஜனவரி 26-ம் தேதி செங்கோட்டையில் நடந்த கலவரங்களையும் வேறு வேறுவிதமாகக் கையாளுகிறது என்றும், கிரெட்டா தன்பர்கின் பதிவைச் சுட்டிக்காட்டியும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பேசியிருந்ததாகக் கூறப்படுகிறது.

ட்விட்டர் CEO ஜாக் டார்ஸி
ட்விட்டர் CEO ஜாக் டார்ஸி
Francois Mori

பாகிஸ்தான், தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் என்று மத்திய அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட 1,178 கணக்குகளும் முடக்கப்பட்டதாகவும், சர்ச்சைக்குரிய ஹேஸ்டேக் தொடர்பாகப் பதிவிட்ட 257 நபர்களின் கணக்கில் 220 கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் சரியான விளக்கம் கொடுத்திருப்பதாகவும் ட்விட்டர் நிறுவனம் தரப்பில் விளக்கம் கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கணக்குகளில் சி.பி.எம் தலைவர் முகமது சலீம் (alsalimdotcomrade) மற்றும் பிரபல ஊடகமான கேரவன் பத்திரிகை (cthecaravanindia) கணக்கு ஆகியவை செயல்படுகின்றன.

மோடி அரசுடன் வலுக்கும் மோதல்... ட்விட்டர் அதிகாரிகள் கைதா?!

ட்விட்டர் நிறுவனம் சாதகமான முடிவை எடுத்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருப்பதாகவும், அதன் வெளிப்பாடாக இந்த முடிவு இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசு முடக்க வேண்டும் எனக் கோரியிருந்த கணக்குகளில் 97 சதவிகித கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு