கட்டுரைகள்
Published:Updated:

இரட்டை இலைச் சின்னம்... முடங்குமா, தப்பிக்குமா?

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. 95% நிர்வாகிகளும், 62 எம்.எல்.ஏ-க்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வு-க்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்குமா, கிடைக்காதா என்பதே அரசியல் வட்டாரத்தில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி!

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வெ.ரா திருமகன் மரணத்தால் காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா போட்டியிட விரும்பினாலும், தாங்கள் நேரடியாகப் போட்டியிட்டால்தான் வெற்றியை வசப்படுத்தலாம் என்று நேரடியாகக் களமிறங்க முடிவு செய்திருக்கிறது அ.தி.மு.க. ஆனால், அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்காது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது.

இது குறித்து எடப்பாடி தரப்பில் இருக்கும் சீனியர் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. 95% நிர்வாகிகளும், 62 எம்.எல்.ஏ-க்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். அதேபோல, ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழு அ.தி.மு.க-வின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் நடைபெற்றது என்பதை வாதத்தின் அடிப்படையிலும், எழுத்துபூர்வமாகவும் நீதிபதி முன் வைத்திருக்கிறோம். தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், தீர்ப்பு எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வரலாம். அதுவும் எங்களுக்குச் சாதகமாகவே வர அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படித் தீர்ப்பு வரும் பட்சத்தில், பொதுக்குழுவையும், அதில் எடுக்கப்பட்ட ஓ.பி.எஸ் நீக்கம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதன்படி, சின்னத்துக்கு ஓ.பி.எஸ் உரிமை கொண்டாட முடியாது.

இரட்டை இலைச் சின்னம்... முடங்குமா, தப்பிக்குமா?

ஒருவேளை பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வருவது தாமதமானாலும், சின்னம் எங்களுக்கே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, `ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருக்கிறது. இதை எதிர்த்துத்தான் ஓ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக் கிறது. இதை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எந்த இடைக் காலத் தடையையும் விதிக்கவில்லை. சின்னத்தைப் பொருத்தவரை பெரும்பான்மை இருக்கும் பக்கத்துக்குத் தான் ஒதுக்கப்படும். எங்களுக்குப் பெரும் பான்மை இருப்பதற்கான ஆதாரங்கள் அனைத் தையும் ஆணையத்தில் சமர்ப்பித்துவிட்டோம். எனவே, சின்னம் எங்களுக்குக் கிடைப்பது நிச்சயம்’’ என்றார்கள் அதீத நம்பிக்கையில்.

இது ஒருபுறமிருக்க, சின்னத்தை முடக்கத் தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கும் பன்னீர் முகாம் வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘எடப்பாடி தரப்புக்குச் சின்னம் கிடைக்க வாய்ப்பே இல்லை. பெரும்பான்மை என்பதெல்லாம் சுத்தப் பொய். கடந்த 2017-ம் ஆண்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சின்னம் யாருக்குச் சொந்தம் என்று சசிகலாவுக்கும், ஓ.பி.எஸ்-ஸுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் இரு தரப்பும் வாதங்களை வைத்தன. சுமார் ஐந்து மணி நேரம் வாதங்களைக் கேட்ட ஆணையம், பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதில் சர்ச்சை நீடிப்பதைக் காரணம் காட்டி, இடைத்தேர்தலுக்குச் சின்னத்தை முடக்கியது. அப்போதும் ஓ.பி.எஸ்-ஸிடம் பெரிய அளவில் ஆள் பலம் இல்லையே... அதேபோல ஒரு நிலைமைதான் தற்போதும் ஏற்பட்டிருக்கிறது. இந்த முறை பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதால், சின்னத்தை யாருமே கோர முடியாது. கூடவே, சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு கொடுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். அதன்படி, அ.தி.மு.க என்ற பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்த முடியாதபடி, தேர்தல் ஆணையம் மூலமாக முடக்கத் திட்டமிட்டு வருகிறோம்’’ என்கிறார்கள்.

இரட்டை இலைச் சின்னம்... முடங்குமா, தப்பிக்குமா?

கடந்தகால வரலாற்றில் அ.தி.மு.க-வின் உட்கட்சிப் பிரச்னைகளுக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரிதீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. எனவே, தற்போது சின்னம் முடங்குமா, முடங்காதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!