Published:Updated:

இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக எழுப்பும் சந்தேகத்துக்கு திமுக-வின் பதில் என்ன?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்டாலின், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

``வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக, திட்டமிட்டுத்தான் திமுக இரண்டு கட்டமாக தேர்தலை நடத்துகிறது’’ எனக் கடுமையான விமர்சனங்களை அதிமுக-வினர் முன்வைத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட, தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்துக் களம் காணப்போவதாக அறிவித்துள்ளன. கூட்டணிக் கட்சிகளுடன் பேசி சுமுக முடிவு எடுக்க மாவட்டச் செயலாளர்கலையும் பொறுப்பாளர்களையும் திமுக அறிவுறுத்தியிருக்கிறது. இந்தநிலையில், தேர்தல் இரண்டு கட்டமாக நடப்பது குறித்து ஒரு முக்கியக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது அதிமுக.

கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில், திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தல் குறித்து, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று அறிவிப்பை வெளியிட்டார். அதில்,

``தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும். இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 15-ம் தேதி தொடங்கும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 22 -ம் தேதி. வேட்புமனுக்கள் பரிசீலனை செப். 23 -ம் தேதியும், வேட்புமனுவைத் திரும்பப் பெற செப். 25-ம் தேதியும் கடைசி தினம். வாக்குப்பதிவு இரு கட்டங்களாக நடைபெறும். அதன்படி அக்டோபர் மாதம் 6 -ம் தேதி முதற்கட்ட தேர்தலும், அக்டோபர் 9-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறும்.

மாநில தேர்தல் ஆணையம் - உள்ளாட்சித் தேர்தல்
மாநில தேர்தல் ஆணையம் - உள்ளாட்சித் தேர்தல்
விகடன்

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் மாதம் 12 -ம் தேதி நடைபெறும். இந்தத் தேர்தலில் நான்குவிதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். ஏற்கெனவே நடந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது விடுபட்ட 789 இடங்களுக்கான தேர்தல் 9-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள்'' என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்றும், தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு மாநில போலீஸுக்கு பதில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களைப் பயன்படுத்த வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாநில தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக, திட்டமிட்டுத்தான் திமுக இரண்டு கட்டமாகத் தேர்தலை நடத்துகிறது’’ எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது குறித்து ஜெயக்குமார் விரிவாகப் பேசும்போது,

``1972-ல் தொடங்கி பல மகத்தான வெற்றிகளை அதிமுக பெற்றிருக்கிறது. அதனால் தேர்தலைச் சந்திப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. திமுக-வினர் தேர்தல் காலத்தில் பல பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, தற்போது அதை நிறைவேற்ற முடியாமல் திணறிவருகின்றனர். நீட் விஷயத்தில் மாணவர்களுக்குத் தெளிவான விளக்கங்களைச் சொல்லாமல், பல அசம்பாவிதங்கள் நடந்துவருகின்றன. இந்தநிலையில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தால் வெற்றிபெற முடியாதோ என்கிற பயத்தில், முறைகேடுகள் செய்வதற்காகவே இரண்டு கட்டங்களாகத் தேர்தலை நடத்துகிறார்கள். எங்கள் ஆட்சிக் காலத்தில், 27 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தினோம். அதனால் இரண்டுகட்டமாக தேர்தல் நடத்தினோம். ஒன்பது மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக நடத்தவேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் குறித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்படவே இல்லை. அப்போதே இது குறித்துத் தெரிவித்திருந்தால் சாதக, பாதகங்களை தேர்தல் ஆணையரிடம் சொல்லியிருப்போம். அப்போது சொல்லாமல் தவிர்த்ததை, எங்களின் வெற்றியைப் பறிப்பதற்கான சூழ்ச்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். தேர்தல் ஆணையம் மீதே எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது. 2006-ம் ஆண்டு நடந்த மாநகராட்சித் தேர்தலில் திமுக என்னென்ன அராஜகங்களைச் செய்தது என்பதை மக்கள் அறிவார்கள். சென்னையில் எண்பதுக்கும் மேற்பட்ட வார்டுகளில் மறு தேர்தல் நடந்தது. அதையெல்லாம் கணக்கில்கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். மூன்றடுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதேவேளையில், திமுக எத்தகைய அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிட்டாலும் அதை எதிர்கொள்வதற்கு அதிமுக தயாராகவே இருக்கிறது'' என்றார் அவர்.

உள்ளாட்சித் தேர்தல்: சூடுபிடிக்கும்  களம்... 9 மாவட்டங்களில் வெற்றிவாய்ப்பு யாருக்கு அதிகம்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், அதிமுக-வின் குற்றச்சாட்டுகள் குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், ``இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது நடைமுறையில் சாத்தியம்தான். ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்ததை மூன்று, நான்கு கட்டங்களாகச் சிதைத்தது அதிமுக-தான். இதைப் பற்றிப் பேச அதிமுக-வுக்கு எந்த அருகதையும் கிடையாது'' என கருத்து தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது குறித்து விரிவாகப் பேசும் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,

``அதிமுக-வினரின் தோல்வி பயம்தான் இப்படியெல்லாம் அவர்களைப் பேசச் சொல்கிறது. அவர்களின் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த காலகட்டத்திலேயே திமுகதான் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றது. உண்மைநிலை இப்படியிருக்க, எங்களின்மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்திக்கொண்டிருக்கிறார்கள். 1991-ல் ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலையே நடத்தவில்லை. காரணம், உள்ளாட்சித் தேர்தல் என்றாலே திமுக-தான் வெற்றிவாகை சூடும் என்று அவருக்குத் தெரியும். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 1996-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்துதான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினோம். அதிலும் மகத்தான வெற்றியைப் பெற்றோம். 2001 சென்னை மேயர் தேர்தலில் எங்கள் தலைவர் ஸ்டாலினைத் தோற்கடிக்க அதிமுக-வினர் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை நாடறியும். லயோலா கல்லூரியில் எவ்வளவு நேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்தார்கள், அதிகாரிகளை மிரட்டினார்கள்... இவர்கள், எங்களைப் பற்றிக் குற்றம் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தற்போது, தேர்தல் நடக்கப்போகும் ஒன்பது மாவட்டங்களில், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் தெற்குப் பகுதியில் இருக்கின்றன. மற்ற மாவட்டங்களும் அருகருகே இல்லை. அதனால்தான் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதிலும், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்டக் கவுன்சிலர்கள் மட்டும்தான் கட்சி சார்பாக நிற்பார்கள். பஞ்சாயத்து அளவில் சுயேச்சைகள்தான் நிற்பார்கள். இதில் நாங்கள் என்ன செய்துவிடப்போகிறோம் சொல்லுங்கள்... பா.ம.க தனித்து நிற்கப் போகிறோம் என அறிவித்துவிட்டது. பா.ஜ.க-வும் தேர்தல் வரைக்கும் கூட்டணியில் தொடர்வார்களா எனத் தெரியவில்லை. அதனால், ஏற்பட்ட தோல்வி பயத்தால்தான் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க மிகவும் நேர்மையாகத் தேர்தலை நடத்தும். சட்டமன்றம் நடந்ததைப்போல, ஜனநாயகத்தோடும் மாண்போடும் உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு