கர்நாடகா மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம், 2 கி.மீ-க்கு, 100 ரூபாய் வசூலித்ததால், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்கள்மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மாநில அரசு ஊபர், ஓலா, ரேபிடோ ஆகியவற்றின் சில சேவைகளை `சட்டவிரோதம்' என்று அறிவித்தது.

பின்னர், ஜி.எஸ்.டி-யைத் தவிர்த்து, அரசு நிர்ணயித்த விலையில் 10 சதவிகிதக் கூடுதல் கட்டணத்துடன் ஆட்டோ சேவைகளை இயக்க கர்நாடக உயர் நீதிமன்றம் அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது. நவம்பர் 25-ம் தேதியன்று, பயணிகள் செய்யும் ஒவ்வொரு சவாரிக்கும், சவாரி செய்யும் நிறுவனங்களிடமிருந்து ஐந்து சதவிகித வசதிக் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில், மின்சார வண்டிகளை இயக்கும் BLU ஸ்மார்ட் மொபிலிட்டி டெக் நிறுவனத்துக்கு போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை உரிமத்தை வழங்கியது.
இந்த நிலையில், ஓலாவை இயக்கும் ANI டெக்னாலஜீஸின் உரிமம் ஜூன் 2021-ல் காலாவதியானது. அதேபோல ஊபர் நிறுவனத்தின் உரிமம், டிசம்பர் 2021-ல் காலாவதியானது. இதனால், உரிமத்தைப் புதுப்பிக்க மாநிலப் போக்குவரத்து ஆணையத்திடம் குறிப்பிட்ட நிறுவனங்கள் முயன்றிருக்கின்றன. அதற்கு, மாநிலப் போக்குவரத்து ஆணையம் மறுத்துவிட்டது.

இது தொடர்பாக கர்நாடகா மாநில போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் எஸ்.என்.சித்தராமப்பா, ``கர்நாடகாவின் ஆன்-டிமாண்ட் டிரான்ஸ்போர்ட்டேஷன் டெக்னாலஜி அக்ரிகேட்டர் ரூல்ஸ் (Karnataka On- demand Transportation Technology Aggregators Rules) 20-ன் கீழுள்ள விதிகளை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். அதிலுள்ள விதிகளில், டாக்ஸி செயலிகளான ஓலா, ஊபர் நிறுவனங்கள் கட்டுப்பாட்டு அறை அமைப்பது, ஜி.பி.எஸ் நிறுவுதல், அச்சிடப்பட்ட டிஜிட்டல் மீட்டர்கள், பேனிக் பட்டன்கள் மற்றும் ஓட்டுநர் விவரங்களைக் காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய போக்குவரத்து ஆணையம் ஊபருக்கு 45 நாள்களும், ஓலாவுக்கு 30 நாள்களும் அவகாசம் அளித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த விதிகளைப் பின்பற்றிய பிறகு நாங்கள் அவர்களின் உரிமங்களைப் புதுப்பிப்போம்.
ஓலா நிறுவனத்துக்கு பெங்களூரு கோரமங்களாவில் கட்டுப்பாட்டு அறை இருக்கிறது. புதிய உரிமம் பெறுவதற்கு முன்பு அதிகாரிகள் இந்த வசதியை ஆய்வு செய்வார்கள். தற்போது இந்தூரில் கட்டுப்பாட்டு அறையை வைத்திருக்கும் ஊபர் நிறுவனத்துக்கு பெங்களூரில் கட்டுப்பாட்டு அறையை அமைக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.