Election bannerElection banner
Published:Updated:

உதயநிதி போட்டி: வாரிசு அரசியலா? - அதிமுக-வின் விமர்சனமும், திமுக-வின் விளக்கமும்!

உதயநிதி ஸ்டாலினுக்கு வைக்கப்பட்டுள்ள கட்அவுட்
உதயநிதி ஸ்டாலினுக்கு வைக்கப்பட்டுள்ள கட்அவுட்

``சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவிருப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாரிசு அரசியலை திமுக தொடர்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டன.’’

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனுத் தாக்கல் செய்த கொஞ்ச நேரத்திலேயே, `அவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உதயநிதிக்கு சீட் வழங்கப்போவதில்லை. வேட்பாளர் நேர்காணலில் பங்கு பெறவே விருப்ப மனு அளித்தார் உதயநிதி’ என்ற வதந்தியும் பரவத் தொடங்கிவிட்டது. வதந்திகள் இப்படிப் பரவினாலும் ``தி.மு.க-வில் இருக்கும் இரண்டாம்கட்டத் தலைவர்களின் பிள்ளைகளும் விருப்ப மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு சீட் இல்லை என்று நேரடியாக மறுக்க முடியாததாலேயே இந்தப் பேச்சை ஸ்டாலின் திட்டமிட்டு கிளப்பிவிட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, முதன்முறையாக தேர்தலில் போட்டியிடப் போகும் உதயநிதி மீது தொடர்ந்து வெளிச்சம் பட வேண்டும் என்ற நோக்கத்திலும் இது பரப்பப்பட்டது” என்று எதிர்க்கட்சியினரும் அரசியல் விமர்சனம் செய்துவந்தனர். நேற்று வெளியான வேட்பாளர் பட்டியலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடுவார் என்ற அறிவிப்பு எதிர்க்கட்சியினரின் விமர்சனத்தை உண்மையாக்கிவிட்டது.

உதயநிதி நேர்காணல்
உதயநிதி நேர்காணல்

மேலும் பேராசிரியர் க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன், டி.ஆர்.பாலு மகன் ராஜா, ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமார், பி.டி.ஆர் மகன் தியாகராஜன், பொய்யாமொழி மகன் அன்பில் மகேஷ், தங்கபாண்டியன் மகன் தென்னரசு, ஆலடி அருணா மகள் பூங்கோதை, பெரியசாமி மகள் கீதா ஜீவன், நாகநாதன் மகன் எழிலன், சேடப்பட்டியார் மகன் மணிமாறன், காதர்பாட்சா மகன் முத்துராமலிங்கம், ஜெ.அன்பழகன் தம்பி கருணாநிதி, கே.பி.பி.சாமி தம்பி சங்கர், பெரியண்ணன் மகன் இன்பசேகரன், காஞ்சிபுரம் அண்ணாமலை பேரன் எழிலரசன் என தி.மு.க வேட்பாளர் பட்டியலில் மிகப்பெரிய வாரிசுப் பட்டாளங்களே இணைந்திருக்கின்றன.

`வென்றது கிச்சன் கேபினெட்!’ - உதயநிதிக்கு சீட் கிடைத்தது எப்படி?

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவிருப்பது குறித்தும், தி.மு.க மீதான வாரிசு அரசியல் விமர்சனம் குறித்தும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை சத்யனிடம் பேசினோம்... ``தி.மு.க-வைப் பொறுத்தவரை வாரிசு அரசியல் செய்யும் கட்சி என்று சொல்வதைவிட, குடும்ப அரசியலைச் செய்யும் கட்சி என்றுதான் சொல்ல வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என தி.மு.க சந்திக்கும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் தி.மு.க தலைவரின் மருமகனுக்கு இத்தனை, தங்கச்சிக்கு இத்தனை, மனைவிக்கு இத்தனை தொகுதிகள் என்று பிரித்துக்கொண்ட பின்னர்தான் கூட்டணி உள்ளிட்ட அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையே நடக்கும். அதுமட்டுமல்ல, அதிகாரப் படிநிலைகளின் அடிப்படையில்தான் தி.மு.க-வில் சீட்டுகளும் ஒதுக்கப்படுகின்றன.

கோவை சத்யன்
கோவை சத்யன்

அதனால்தான் உதயநிதிக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு கட்சியில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோரின் வாரிசுகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இவர்களும் தி.மு.க-வின் குறுநில மன்னர்கள்தான் என்றாலும், பொருளாதாரப் பின்புலமும், கட்சிக்குள் இவர்களுக்கு இருக்கும் அதிகாரமும் மற்றவர்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்பதால் மறுக்கப்பட்டிருக்கும். அப்படியிருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு சீட் கொடுக்கப்பட்டதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. 350 கோடி ரூபாய் கொடுத்து ஐபேக் என்ற டீமை அழைத்து வந்தது ஸ்டாலின் ஆட்சி அமைக்க இல்லை. ஸ்டாலினின் திரை மறைவிலிருந்து உதயநிதி ஆட்சி செய்யத்தான்” என்றார்.

உதயநிதிக்கு சேப்பாக்கம் - தொகுதி ஒதுக்கப்பட்டது தொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்... ``உதயநிதி போட்டியிட வேண்டும் என்பது மக்களின், தொண்டர்களின் விருப்பம். தலைவர் ஸ்டாலின் அரசியலுக்கு வரும்போதுகூட 1984-லிருந்து கடந்த ஆண்டு வரை இந்த விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் ஸ்டாலின்மீது வைத்தார்கள். ஆனால், தொடர்ந்து ஸ்டாலின் தந்த மிகப்பெரிய வெற்றிகளைப் பார்த்து `வாரிசு அரசியல் என்ற விமர்சனம் ஸ்டாலினுக்குப் பொருந்தாது. அவர் நீண்டநாள் அரசியல் இருக்கிறார்’ என்று மாற்றிப் பேசினார்கள். இதேதான் தம்பி உதயநிதி விஷயத்தில் நடக்கும். கட்சியில் சேர்ந்ததும் உதயநிதிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

அடிப்படை உறுப்பினராகக் கட்சியில் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். இளைஞர் அணிச் செயலாளராக பதவி ஏற்றதும் கிட்டத்தட்ட 30 லட்சம் இளைஞர்களை அதில் இணைத்து திறம்பட செயல்பட்டுவருகிறார். இப்படிக் கட்சிக்காகத் தொடர்ந்து உழைக்கும் ஒருவருக்குக் கிடைத்த அங்கீகாரத்தை தலைவரின் மகன் என்பதற்காகத்தான் அவருக்கு வழங்கப்பட்டது என்று சுருக்குவது அவரது உழைப்பைக் குறைத்து மதிப்பிடுவதுபோல இல்லையா?

தொடர்ந்து ஓர் அமைப்பு 20 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் இருக்குமேயானால் அதில் அடுத்தடுத்த தலைமுறையினர் வரத்தான் செய்வார்கள். தி.மு.க தொடர்ந்து 60 ஆண்டுக்காலமாக ஆட்சியில் அல்லது எதிர்க்கட்சி வரிசையில் தமிழக அரசியலில் இடம்பிடித்து வந்திருக்கிறது. தி.மு.க-வில் தலைமுறை தலைமுறையாகத் தொண்டர்கள் தங்களை இணைத்துக்கொண்டு செயலாற்றுகிறார்கள். இப்படித் தொடர்ந்து இயங்கிவரும் ஓர் இயக்கத்தில் போட்டியிட வாய்ப்புபெற்ற ஒவ்வொருவரும் தொண்டர்களின் வாரிசுகள்தான். அப்படியிருக்கும்போது தலைவரின் பிள்ளை என்பதற்காக உதயநிதி ஸ்டாலினை மட்டும் தனித்து விமர்சனத்துக்கு உள்ளாக்குவது எந்தவகையில் சரி? வாரிசு அரசியல் என்ற விவாதத்தில் தி.மு.க பற்றிப் பேசவே அ.தி.மு.க-வினருக்குத் தகுதியில்லை. தி.மு.க தலைவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது இருக்கிறதா? தலைமையின் மீது கொள்கை, தத்துவார்த்தம், ஆட்சி, அரசியல் பொதுவாழ்க்கை தூய்மையின் மீது விமர்சனம் வைக்க முடியவில்லை. அதனால் இந்தப் பழைய நையாண்டியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

உதயநிதி பேசும்போது....
உதயநிதி பேசும்போது....
நா.ராஜமுருகன்

ஓர் இடத்துக்கு வருவதற்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். அதன்படி அரசியலில் திறமையோ தகுதியோ இருக்கும் அனைவரையும் மக்கள் வரவேற்பார்கள். அதில்தான் தி.மு.க நிற்கிறது” என விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு