Published:Updated:

``தளபதி ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் முதல்வர்...” - சொல்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்

தங்க தமிழ்ச்செல்வன்

``வேலுமணி, தங்கமணி, பழனிசாமி, பன்னீர்செல்வம் எல்லோரும் தான் செலவுசெய்ததாகச் சொல்கிறார்கள். அவர்களால் ஜெயிக்க முடிந்ததா? ” - தங்க தமிழ்ச்செல்வன்

``தளபதி ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் முதல்வர்...” - சொல்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்

``வேலுமணி, தங்கமணி, பழனிசாமி, பன்னீர்செல்வம் எல்லோரும் தான் செலவுசெய்ததாகச் சொல்கிறார்கள். அவர்களால் ஜெயிக்க முடிந்ததா? ” - தங்க தமிழ்ச்செல்வன்

Published:Updated:
தங்க தமிழ்ச்செல்வன்

``விரைவில் அ.தி.மு.க பிளவுபடும்” என்று 2021-ல் ஜூ.வி-க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், அ.தி.மு.க-வில் நீண்டகாலம் பயணித்து, இன்று தி.மு.க-வில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் தங்க தமிழ்ச்செல்வன். அது இன்று நடந்திருக்கிறது. இது குறித்தும், சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் அரசியல் எதிர்காலம்; தி.மு.க உட்கட்சித் தேர்தல் போன்ற விஷயங்களையும் தனக்கே உரிய பாணியில் அதிரடி கலந்து கலகலப்பாகப் பகிர்ந்துகொண்டார்.

"திராவிட மாடல் பயிற்சிப் பாசறையின் இன்றைய அவசியம் என்ன?”

``திராவிடம் என்றால் என்ன என்பது இளைஞர்களுக்குத் தெரிய வேண்டும். ஒருகாலத்தில் சம்ஸ்கிருதம் படித்தால்தான் பள்ளிக்கே போக முடியும். வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்றைக்கு அந்த நிலை இல்லை. அதையெல்லாம் ஒழித்து எல்லா மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சம உரிமை, சமூகநீதிக்கான உறுதிமொழியைத் தந்தது திராவிடம். அந்த உழைப்பு இப்போது இருக்கிற இளைஞர்களுக்கும் தெரிய வேண்டும். அதற்கான முயற்சியாக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அருமைச் சகோதரர் உதயநிதி ஏற்பாடு செய்து, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் இந்த எழுச்சிப் பாசறைக் கூட்டத்தை நடத்திவருகிறார்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்சி சிவா
திருச்சி சிவா

``இத்தனை ஆண்டுக்காலம் இல்லாமல், பா.ஜ.க வளர்ந்துவரும் சூழலில் அதற்கு பயந்தா அல்லது காலத்தின் தேவைக்காகவா?"

``ஒரு கட்சிக்குப் போட்டியாக கொண்டுவர வேண்டும் என்பது தி.மு.க-வின் எண்ணம் கிடையாது. எங்கள் இயக்கத்துக்கு இளம்பெண்கள், இளைஞர்கள் வர வேண்டும். அவர்கள் திராவிடம் என்றால் என்ன என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு, ஸ்ட்ராங்கான கேடராகப் பயணிக்க வேண்டும் என்பது எழுச்சிப் பாசறையின் நோக்கம். ஒன்றிய அரசை எதிர்க்கக்கூடிய வல்லமை தி.மு.க-வுக்குத்தான் இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதற்காகத்தான் இந்த முயற்சி."

``ஆனால், தி.மு.க., மத்திய அரசை பார்த்து பயந்துவிட்டதா என்று கேட்கக்கூடிய அளவுக்குத்தான் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்கின்றன. மம்தா, சந்திர சேகர் ராவ் போன்றோர் வெளிப்படையாக பிரதமரையும், மத்திய அரசையும் எதிர்க்கிறார்கள். ஆட்சி பொறுப்பேற்ற பிறஜ்ய் அந்த எதிர்ப்பு தி.மு.க-விடம் என்னவானது என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே..?”

"பாரதப் பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்து ரூ.32,000 கோடிக்குத் திட்டம் தொடங்கிவைத்தார். அந்தக் கூட்டத்தில் எந்த மாநில முதல்வரும் கேட்காத கேள்வியை தமிழ்நாடு முதல்வர் அண்ணன் தளபதி கேட்டார். ஜி.எஸ்.டி வரி பாக்கி, தேசியக் கல்விக் கொள்கை, நீட் தேர்வு... போன்ற விவகாரங்களை நேரடியாக மேடையில் முன்வைத்தார். சிறப்பாக ஆட்சி நடத்துவதோடு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் உரிமையை பாரதப் பிரதமரிடம் முறையிட்டார். இதைவிட வேறு எப்படிச் செயல்பட வேண்டும்?"

மோடி, ஸ்டாலின்
மோடி, ஸ்டாலின்

" `முதல்வர் ஆட்சியைப் பார்த்துக்கொண்டு, கட்சியை விட்டுவிட்டார்' என்று கட்சியினரே புலம்புகிறார்களே...?"

"பெரிய கட்சி தி.மு.க. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கிறது. தளபதி எல்லா விஷயங்களையும் பொறுமையாகக் கையாண்டு, எதிலும் தவறு, பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும்போது சிலர் 'எனக்கு அது கிடைக்கலை, இது கிடைக்கலை' என்று சொல்வது இயல்பு. ஆட்சி, கட்சி இரண்டுமே சிறப்பாக இருக்கின்றன.”

"இருந்தும்... தி.மு.க உட்கட்சித் தேர்தலில் குழப்பம் நீடிக்கிறது, இதனால் அறிவாலையத்துக்கு பலரும் படையெடுக்கிறார்கள் என்கிறார்களே?"

"நடவடிக்கையோ, செயல்பாடோ இல்லாமல் இருக்கிற சிலரின் பொறுப்புகளை எடுப்பது இயற்கையான ஒன்று. அவர்களில் சிலர் அறிவாலயத்துக்கு வருவதும், சில கோரிக்கைகளைத் தலைமைக் கழகத்தில் வைப்பதும் உண்மை. நிர்வாக வசதிக்காக சில ஒன்றியங்கள், மாவட்டச் செயலாளர் பரிந்துரையின் பெயரில் பிரிக்கப்படுகின்றன. அவர்கள் ஆய்வுசெய்து பெரிய ஒன்றியமாக இருப்பின் `பத்து, பத்து ஊராட்சிகளாக இருந்தால் பிரித்துக்கொள்ளுங்கள்’ என்கிறார்கள். அப்படிப் பிரிக்கும்போது சில பிரச்னைகள் இருக்கும். இது தொடர்பாக தலைமைக் கழகத்தில் கட்சிக்காரர்களோடு பேசுவது இயல்பான ஒன்று. இது எல்லாக் கட்சிகளிலும் இருக்கும்."

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

``அ.தி.மு.க-வில் பயணித்திருக்கிறீர்கள். இன்று அங்கு நடக்கும் விவகாரங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``நான் தி.மு.க-வுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்போது அ.தி.மு.க-வை விமர்சிப்பது நன்றாக இருக்காது. இருந்தாலும் சொல்கிறேன். தலைமைப் பண்பு அம்மாவுக்குப் பிறகு அங்கு யாரிடமும் இல்லை. ஆட்சி அதிகாரம் கிடைத்தால் எந்தத் திறமையும் இல்லாதவன்கூட அதிகாரம் பண்ண முடியும். ஆட்சி போன பிறகு மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அடுத்தடுத்து தோல்வி. கட்சியை ஸ்டடி பண்ண முடியவில்லை. காரணம் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் உட்பட அங்கே யாரிடமும் உண்மை இல்லை. அந்த அம்மாவிடம் நடித்து நடித்தே காலத்தை ஓட்டியவர்களால், இப்போது சுயமாக நடக்கக்கூட முடியவில்லை. ஓ.பி.எஸ்-ஸின் சொந்த மாவட்டத்திலேயே எல்லோரும் எடப்பாடி பக்கம் போகிறார்கள். மக்களையும் தொண்டனையும் விட்டுவிட்டு ஓ.பி.எஸ் குடும்பம் மட்டும் செல்வச் செழிப்பாக இருக்கிறது. எனவே, 'யாருக்கும் பிரயோஜனம் இல்லை பன்னீர் செல்வத்தால்' என்று இ.பி.எஸ் பக்கம் போகிறார்கள். இதுதான் இன்றைய நிலை. தலைமைப் பண்போடு யாரும் கட்சியை வளர்க்க நினைக்கவில்லை. எடப்பாடி பணத்தை விடுகிறார். எல்லோரும் போகிறார்கள். இதுதான் செய்தி."

பன்னீர் - எடப்பாடி
பன்னீர் - எடப்பாடி

"மற்றொரு பக்கம் டி.டி.வி., சசிகலா `அ.தி.மு.க-வின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் வருவார்கள்' என்கிறார்களே?"

"அவர்களுக்கான அரசியல் எதிர்காலம் என்பது எனக்குத் தெரிந்து இல்லை. மக்கள் இனி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எல்லாமே ஆலோசனை இல்லாத, தவறான முடிவு. பா.ஜ.க-வை எதிர்த்து அவர்களால் அரசியல் பண்ண முடியாது. பா.ஜ.க-வுக்கு அடிபணிந்துதான் போக வேண்டும். இதுதான் நிலைமை."

சசிகலா , தினகரன்
சசிகலா , தினகரன்

``அதிகார தொனியில் இ.பி.எஸ்., ஜனநாயகரீதியாக ஓ.பி.எஸ் போராடுகிறார் என்கிறார்களே"

"இதற்கு நான் பதில் சொல்லவேண்டியதில்லை. மக்களுக்கும், அந்தக் கட்சியில் இருப்பவர்களுக்கும் தெரியுமே..!"

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``தி.மு.க-வில் இணைந்த மாற்றுக் கட்சியினர் இன்று பல பொறுப்புகளில் இருக்கிறார்கள், செல்வாக்கும் செலுத்திவருகின்றனர். உங்களுக்குத் தேர்தல் தோல்வியால் அது சாத்தியமில்லாமல் போனதா அல்லது அரசியல் காரணம் வேறு ஏதேனும் உண்டா?”

“செந்தில் பாலாஜியைச் சொல்றீங்க... (சிரிக்கிறார்.) மக்கள், கட்சியினரிடம் எப்படி அணுக வேண்டுமோ அப்படி அணுகி எல்லா அமைச்சர்களும் சிறப்பாக, பொறுப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதில் செந்தில் பாலாஜியும் ஒருவர். கட்சிரீதியாக அவர் மாவட்டப் பொறுப்பாளர். உள்ளாட்சியில் நூறு சதவிகிதம் வெற்றிபெற்றோம். இதுவரை இல்லாமல் பெரியகுளம், போடி, தேனி, கம்பம், சின்னமனூர், கூடலூர் ஆகிய ஆறு நகராட்சிகளில் வென்றிருக்கிறோம். 22 பேரூராட்சிகளில் 21 பேரூராட்சிகளை எடுத்திருக்கிறோம். இது பெரிய விஷயம்தானே... அ.தி.மு.க கோட்டை என்று சொல்லக்கூடிய இடங்களையெல்லாம் உடைத்திருக்கிறோம். உடைத்ததற்குக் காரணம், எங்கள் உழைப்பு மட்டும் கிடையாது, தமிழ்நாடு முதல்வர் அண்ணன் தளபதியின் செயல்பாடு, திட்டங்கள். மக்களுக்குப் பிடித்திருக்கிறது. உதயசூரியனை வரவேற்கிறார்கள்.”

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

``அப்படியிருந்தும் தி.மு.க-மீது ‘செய்தி அரசியலாகத்தான் இருக்கிறது, செயல் அரசியல் இல்லை’ என்று விமர்சனம் முன்வைக்கப்படுக்கிறதே...”

“21 மாநகராட்சிகளில் தி.மு.க ஜெயிக்கிறது என்றால் செயல்பாடு இல்லாமல் எப்படி?”

``அதற்கும் பணம் செலவழிக்கப்பட்டது என்பது வாதமாக இருக்கிறதே?”

“வேலுமணி, தங்கமணி, பழனிசாமி, பன்னீர்செல்வம் எல்லோரும்தான் செலவு செய்ததாகச் சொல்கிறார்கள். அவர்களால் ஜெயிக்க முடிந்ததா... பணம் எல்லாத்துக்கும் பதில் சொல்லாது. நம் உழைப்பை, திட்டங்களைக் காட்ட வேண்டும்.”

ஓ.பி.எஸ் - தங்க தமிழ்ச்செல்வன்
ஓ.பி.எஸ் - தங்க தமிழ்ச்செல்வன்

``ஓ.பி.எஸ்-ஸை ஓரங்கட்டி, அங்கு கட்சியை வளர்க்கச் சரியான ஆள் நீங்கள்தான் என்று இ.பி.எஸ் தரப்பு தங்களிடம் பேசினார்களாமே?”

``அப்படியெல்லாம் இல்லை... இப்போது சரியான தலைமைப் பண்பு, மனிதாபிமானம் உள்ள தலைவரிடம் இருப்பதில் பெருமைப்படுகிறேன். பதவிக்காகவோ, பணத்துக்காகவோ தங்க தமிழ்ச்செல்வன் என்றைக்கும் போக மாட்டான். இங்கு நல்ல மதிப்பு, மரியாதை கொடுக்கிறார். ஒரு மாவட்டச் செயலாளர் பொறுப்பு. அழகாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். இதைப் பொறுத்துக்கொள்ளாமல் கண்ணை உறுத்த, என்னைப் பற்றித் தவறான செய்தி பரப்புகிறார்கள். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறேன்.”

“வருங்கால திமுக, உதயநிதியின் வருங்காலம் உங்கள் மதிப்பீடு?”

“வருங்கால தி.மு.க., உதயநிதி தி.மு.க என்பதெல்லாம் இரண்டாவது. எனக்குத் தெரிந்து தளபதியின் உழைப்பைப் பார்க்கும்போது தொடர்ந்து தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெறும். தளபதிதான் முதலமைச்சராக வருவார். அவருக்குப் பின்னால் நிச்சயம் உதயநிதிதான் வருவார்.”

உதயநிதி
உதயநிதி

“தி.மு.க-வில் உதயநிதி தவிர திறமையான வேறு ஆட்கள் இல்லையா?”

``வேறு ஆட்கள் இருக்கிறார்கள்... இன்று இளைஞரணிச் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அதோடு மக்களுக்கும் தெரிந்த முகமாக இருக்கிறார்.”

``எத்தனையோ அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தெரிந்த முகமாக தி.மு.க-வின் அடையாளமாக இருக்கிறார்கள்தானே...”

“இருக்கட்டும்... வாரிசு அரசியலைவைத்து தவறு செய்தால் அதை மக்கள் வெறுப்பார்கள். வாரிசு அரசியல் மூலமாக மக்களுக்கு நல்லது செய்தால் அமோகமாக வரவேற்பார்கள். உதயநிதியின் செயலுக்கு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி ஓர் எடுத்துக்காட்டு. தெருத் தெருவாகப் போய் நடந்து திட்டங்களைப் பார்க்கிறார். அங்கு அமோக வரவேற்பு இருக்கிறது. சீக்கிரம் தமிழ்நாடு முழுவதும் அந்த வரவேற்பு இருக்கும். சட்டமன்ற உறுப்பினர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.”

உதயநிதி, ஸ்டாலின்
உதயநிதி, ஸ்டாலின்

“மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அப்படி இல்லையா?”

``இருக்கிறார்கள்... வாரிசு அரசியல் என்பதற்காகச் சொல்கிறேன். அவர் வீட்டில் இல்லை. ஜெயித்த ஆள் மக்களோடு மக்களாக இருந்து நல்ல பொறுப்பாளராக இருக்கிறார் என்பதைத் தெரியப்படுத்துகிறேன். அடுத்த முதல்வர்... என்பது இரண்டாவது. எனக்குத் தெரிந்து தொடர்ந்து தளபதிதான் முதல்வராக இருப்பார். அவருக்குப் பின்னாடி பார்ப்போம். அதை ஏன் இப்பவே போட்டுக் கிண்டுகிறார்கள்... தான் அடுத்த முதல்வர், அமைச்சர் என்பதையெல்லாம் என்கரேஜ் பண்ணக்கூடிய நிலையிலும் உதயநிதி இல்லை. ரொம்பப் பக்குவமாக, கண்டிப்பாக இருக்கிறார். தவறு நடக்கக் கூடாது என்பதில் 100% உறுதியாக இருக்கிறார்.”