Published:Updated:

நாகை: `எத்தனை அடக்குமுறை வந்தாலும் பயணம் தொடரும்..!’ - மீண்டும் கைதான உதயநிதி

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

படகிலிருந்து இறங்கியவுடன் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்து, நாகையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறைவைத்தனர்.

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த ஊரான நாகை மாவட்டம், திருக்குவளையில் கருணாநியின்  நினைவு இல்லம் இருக்கிறது. இங்கிருந்து எதிர்வரும்  2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பிரசாரப் பயணத்தை 20-ம் தேதி மாலை  தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ``தி.மு.க., மிசாவின் கொடுமைகளை சந்தித்த கட்சி. இந்த அடிமை ஆட்சியின் சலசலப்புக்கு அஞ்சாது.  எத்தனை அடக்குமுறை வந்தாலும் பயணம் தொடரும். கொரோனாவிலும் கொள்ளையடித்த ஆட்சி இந்த அ.தி.மு.க ஆட்சி.  அடுத்து மலரப்போவது தி.மு.க ஆட்சிதான். 

இப்போதுள்ள அமைச்சர்கள் கொள்ளையடித்த ஊழல் பட்டியல் தலைவர் கையில் இருக்கிறது. அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அராஜக, அநியாய அ.தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நாம் உறுதியாக இருக்க வேண்டும்" என்று பேசி முடித்து கீழே இறங்கியவுடன், போலீஸார் அவரைக் கைதுசெய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் மதிவாணன், கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க பிரமுகர்கள் மீதும் வழக்கு பதிந்து, அதன் பிறகு விடுதலை செய்தனர்.

இந்தநிலையில், இன்று காலை வேளாங்கண்ணியிலிருந்து பிரசாரப் பயணத்தைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலினுடன்  முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு போன்ற சீனியர்களும கலந்துகொண்டனர். வழிநெடுகிலும் தி.மு.க-வினர்  உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று உலக மீனவர் தினம் என்பதால், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்துக்குச்  சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் ஒரு விசைப்படகில் ஏறி  சிறிது தூரம் கடலில் சென்று வந்தார். அங்கு தஞ்சை சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா தலைமையிலான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். படகிலிருந்து இறங்கியவுடன் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்து, நாகையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறைவைத்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கைதாகி வேனில் இருந்தபடியே பேசிய உதயநிதி ஸ்டாலின்,``தி.மு.க-வின் பிரசாரப் பயணத்தைக் கண்டு அ.தி.மு.க அரசு பயந்து இந்த நடவடிக்கையை எடுக்கிறது. நேற்று கைதுசெய்தார்கள்; இன்றும் கைதுசெய்கிறார்கள். பீகாரில் தேர்தல் நடந்தது. மோடி, அமித் ஷா போன்றோர்  ஆயிரக்கணக்கானோர் மக்கள்  மத்தியில் பேசினார்கள். எடப்பாடி பழனிசாமி மாவட்டம்தோறும பேசுகிறார். ஆனால் தி.மு.க-வுக்கு மட்டும்தான் அனுமதி  மறுக்கிறார்கள். இதைக் கண்டு அஞ்ச மாட்டோம். எத்தனை அடக்குமுறை வந்தாலும் எங்கள் பயணம் தொடரும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு