Published:Updated:

`முதல்வரா... துணை முதல்வரா?!'- புதிய ஃபார்முலாவில் கறார் காட்டும் தாக்கரே குடும்பம்

ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போது சிவசேனா தயவில்லாமல் பா.ஜ.க-வால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிவிட்டன. எதிர்பார்த்தது போலவே `சவுக்கிதார்கள் - மண்ணின் மைந்தர்கள்' கூட்டணி ஆட்சி பீடத்தைக் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வென்றுள்ளன. கூட்டணி ஆட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தாலும் இப்போது புதுசிக்கல் எழுந்துள்ளது.

ஆட்சியை எப்படிப் பங்கு பிரிப்பது என்பதுதான் அந்தச் சிக்கல். தொகுதிப் பங்கீட்டின்போதே இதுதொடர்பாக சிக்கல் எழுந்தது. 288 தொகுதிகளில் 144 தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று சிவசேனா முரண்டுபிடிக்க, பி.ஜே.பி-யோ `நாங்களே அதிக இடங்களில் போட்டியிடுவோம்' என்று முறுக்கிக் கொண்டது.

பட்நாவிஸ் - உத்தவ் தாக்கரே
பட்நாவிஸ் - உத்தவ் தாக்கரே

ஒருவழியாக அமித் ஷா சமரசத்தால் பிரச்னை முடிவுக்கு வர, பா.ஜ.க தனித்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் 164 தொகுதிகளில் களம்கண்டது. சிவசேனாவோ 124 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ஜ.க-வின் எண்ணத்துக்கு தேர்தல் முடிவுகள் முட்டுக்கட்டை போட்டதுடன் தற்போது சிவசேனாவுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், சிவசேனா தயவில்லாமல் பா.ஜ.க-வால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வருங்கால சி.எம் வேட்பாளர்?- 53 வருட வரலாற்றில் முதல் முறையாகத் தேர்தல் களம் காணும் தாக்கரே வாரிசு

தேர்தலுக்கு முன்பே இருகட்சிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் சிவசேனா ஆட்சியில் பங்கு கேட்பதைவிட முதல்வர் மற்றும் துணைமுதல்வர் பதவிகளைக் குறிவைத்தே காய் நகர்த்தியது. சிவசேனாவின் மூத்த புதல்வர் ஜூனியர் தாக்கரே எனும் ஆதித்யா தாக்கரேவை முதல்வர் ஆக்குவதற்கு ஏதுவாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அப்போது பி.ஜே.பி தரப்பிலோ, `பட்நாவிஸ் முதல்வராக இருக்கட்டும், உங்களுக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுக்கப்படும்' என்று உறுதிகொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த உறுதியை அடுத்தே தாக்கரே குடும்ப அரசியல் வரலாற்றில் முதல் ஆளாக தேர்தல் களம்கண்டு வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் ஆதித்யா.

ஆதித்யா தாக்கரே
ஆதித்யா தாக்கரே

சிவசேனாவின் கோட்டையான வொர்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரைவிட 65,000 அதிக வாக்குகள் பெற்று வெற்றிகண்டுள்ளார். இவரின் வெற்றியை வெகுவாக மெச்சியுள்ள உத்தவ் தாக்கரே, செய்தியாளர்களைச் சந்தித்தார். ``அமித் ஷா என் வீட்டுக்குவந்தபோதே முடிவு செய்யப்பட்டதுதான் 50:50 பார்முலா. இதை இப்போது பா.ஜ.க-வுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். 50:50 பார்முலாவை செயல்படுத்த இதுவே சரியான தருணம்.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாங்கள் பா.ஜ.க-வைவிட குறைவான இடங்களிலேயே போட்டியிட்டோம். ஒப்புக்கொள்கிறோம். ஆனால், ஒவ்வொரு முறையும் பா.ஜ.க-வுக்கு இடம் அளிக்க முடியாது. என் கட்சியையும் வளர்ப்பதற்கு நான் அனுமதிக்க வேண்டும். முதலில் ஆட்சியில் எப்படிப் பங்கு என்பதைப் பற்றி பா.ஜ.க-வுடன் பேசுவோம். அமித் ஷா உடனும் பேசுவோம். அதன்பிறகு முதல்வர் பதவி குறித்து முடிவெடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

சிவசேனாவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆதித்யாவுக்கு முதல்வர் பதவியைப் பெறுவதற்கே இப்படிப் பேசி வருகிறார்கள். இதனால் பா.ஜ.க-வுக்கு முதல்வர் பதவி கிடைப்பதில் சற்று சிரமம்தான் என்கின்றன மும்பை ஊடகங்கள்.

சரத் பவார்
சரத் பவார்

இதற்கிடையே, காங்கிரஸ் கூட்டணி இந்தமுறை கணிசமான இடங்களைப் பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக உருமாறியுள்ளது. கடந்த தேர்தகளில் துவண்டு கிடந்த தேசியவாத காங்கிரஸ் இந்தமுறை எழுச்சி கண்டு 54 இடங்களையும் காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸ் கூட்டணிக்கே 101 இடங்கள் கிடைத்துள்ளன. இதனால் பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை சரிப்பட்டு வரவில்லை என்றால் சிவசேனா காங்கிரஸ் கூட்டணி உடன் ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது எனப் பேச்சும் எழுந்துள்ளது.

ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்துள்ள சிவசேனா முக்கிய பிரமுகர், ``பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்தே தேர்தலில் களம்கண்டோம். தொடர்ந்து அந்தக் கூட்டணியில் முன்னேறுவோம். காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பில்லை" எனக் கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த நடக்கவிருக்கும் காட்சிகள் அரசியல் அரங்கை அதிரவைக்க வாய்ப்பிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு