Published:Updated:

`தைரியமிருந்தால் ஆட்சியைக் கலைத்துப் பாருங்கள்!’ - பா.ஜ.க-வுக்குச் சவால்விட்ட உத்தவ் தாக்கரே

`அரசாங்கத்தின் மீதும், எங்கள் குடும்பத்தின் மீதும், ஆதித்யாவின் மீதும் நிறைய களங்கம் கற்பிக்கிறார்கள். இருப்பினும், எங்கள் கை சுத்தமாக இருப்பதால் நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை’ - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டு, முதல்வர் பதவியை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பா.ஜ.க - சிவசேனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டதையடுத்து, நீண்டகாலக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. பா.ஜ.க கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறியது. அதன் பிறகு பா.ஜ.க-வும், சிவசேனாவும் எதிரும் புதிருமாகவே இருந்துவருகின்றன.

பால் தாக்கரே சிவசேனாவின் தலைவராக இருந்தவரை, ஒவ்வோர் ஆண்டும் தசராவை ஒட்டி தாதரிலுள்ள சிவாஜி பார்க்கில் பிரமாண்ட பேரணியில் உரை நிகழ்த்துவது வழக்கம். அவரது மறைவுக்கு பிறகு உத்தவ் தாக்கரே, தொடர்ந்து உரை நிகழ்த்திவருகிறார். இந்தநிலையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் நெறிமுறைகளைக் கருத்தில்கொண்டு குறைந்த பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு மும்பை சிவாஜி பார்க்கிலுள்ள வீர் சவார்க்கர் உள் அரங்கத்தில், தசரா நிகழ்ச்சி நடைபெற்றது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே, ``நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. துணிவிருந்தால் எங்கள் ஆட்சியைக் கவிழ்த்துப் பாருங்கள்" என்று பா.ஜ.க-வுக்கு நேரடியாக சவால் விடுத்தார்.

அவர் பேசுகையில், ``உலக நாடுகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றில் சிக்கித் தவித்துவரும் நேரத்தில், இந்தியாவில் மட்டும் விசித்திரமான விஷயம் ஒன்று நடந்துவருகிறது. அதாவது, பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பதில் மட்டுமே அந்தக் கட்சி கவனம் செலுத்திவருகிறது. மத்தியில் முழு அதிகாரத்துடன் பாஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, பா.ஜ.க-வின் கட்டுப்பாடற்ற நிலை காரணமாக நாடு குழப்பத்தின் விளிம்பில் இருக்கிறது.

நான் முதல்வராகப் பதவியேற்றதிலிருந்து இன்றுவரை, எங்கள் ஆட்சியைக் கலைக்க தேதி குறித்துவிட்டதாகப் பல்வேறு தேதிகளைக் கேள்விப்பட்டுவருகிறேன். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை. உங்களுக்குத் தைரியமிருந்தால் எங்கள் ஆட்சியைக் கலைத்துப் பாருங்கள்.

``பா.ஜ.க-வினர் நட்பாகப் பேசிப் பழகுவார்கள். அதேசமயம் நண்பர்களின் முதுகில் குத்தவும் தயங்க மாட்டார்கள். பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு நிதிஷ் குமாரும் இதே பிரச்னையை சந்திக்கப்போகிறார்’’ என்றார்.

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மகாராஷ்டிராவில் கோயில்கள் திறக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நிலைப்பாடு குறித்து அம்மாநிலா கவர்னர் கோஷ்யாரி கேள்வியெழுப்பினார். இது தொடர்பாக முதல்வர் - கவர்னர் இடையே மோதல் போக்கு இருந்துவருகிறது.

`சிவசேனா, சோனியா சேனாவாக மாறிவிட்டது!’ - கொதித்த கங்கனா ரணாவத்

தசரா உரையில் இதைக் குறிப்பிட்டுப் பேசிய உத்தவ் தாக்கரே, ``நாங்கள் இன்னும் கோயில்களைத் திறக்கவில்லை என்பதால் இந்துத்துவா குறித்து எங்களிடம் கேட்கின்றனர். மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சியைத் தடைசெய்துவிட்டு, கோவாவில் தடை செய்யவில்லை. இதுவா உங்கள் இந்துத்துவா? வெறும் கோயில்களைத் திறப்பது மட்டுமே இந்துத்துவா அல்ல. இந்துத்துவா என்றால் என்ன என்பதைப் பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், `கோயில்களைத் திறந்து பூஜை செய்வது மட்டும் இந்துத்துவா அல்ல' என அழகாக விளக்கியிருக்கிறார். எனவே, அங்கிருந்து தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அணியும் கறுப்பு தொப்பிக்குக் கீழே, மூளை இருந்தால் மோகன் பகவத் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள்" என்றார் தாக்கரே.

பீகார் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க-வின் வாக்குறுதியைச் சுட்டிக்காட்டிப் பேசிய உத்தவ் தாக்கரே, ``நீங்கள் பீகாரில் இலவசமாக கொரோனா தடுப்பூசி கொடுப்பது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படியென்றால் நாட்டின் மற்ற பகுதிகள் பாகிஸ்தானா அல்லது வங்காளதேசமா?" என்று கேள்வி எழுப்பினார்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கைக் குறிப்பிட்டுப் பேசிய உத்தவ், ``பீகார் மாநில மகனின் நீதிக்காக அழுபவர்கள், மகாராஷ்டிராவின் மகனையும் (ஆதித்யா தாக்கரே), மும்பை காவல்துறையையும் அவதூறாகப் பேசி படுகொலை செய்துவருகிறார்கள்.

அரசாங்கத்தின் மீதும், எங்கள் குடும்பத்தின் மீதும், ஆதித்யாவின் மீதும் களங்கம் கற்பிக்கின்றனர். இருப்பினும், எங்கள் கை சுத்தமாக இருப்பதால், நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை’’ என்று குறிப்பிட்டார்.

ஜூன் மாதம் முதல் மகாராஷ்டிரா மாநிலம் பல இயற்கைப் பேரழிவுகளைச் சந்தித்தபோதிலும், மத்தியில் ஆளும் மோடி அரசு மாநிலத்துக்கு நிதி உதவி செய்யவில்லை என்றும், 38,000 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். நாட்டின் அனைத்து மாநில முதல்வர்களும் கட்சி வேறுபாடுகளைக் களைந்து, ஜி.எஸ்.டி குறித்து விரிவான மறு ஆய்வு மேற்கொள்ள, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜி.எஸ்.டி குறித்துப் பேசிய உத்தவ் தாக்கரே, ``அவர்கள் ஜி.எஸ்.டி-யை அறிமுகப்படுத்தும்போது நாங்கள் அதை எதிர்த்தோம். இந்த முறையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கூறினோம். ஜி.எஸ்.டி முறை தோல்வியடைந்ததென்றால், அதை அகற்ற வேண்டும். பழைய வரி வசூல் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வருமாறு மற்ற மாநிலங்களின் முதல்வர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.

மேலும், ``சமீபத்தில் யாரோ ஒருவர், மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pok) போன்றது என்று சொன்னார். அவர்கள் வேலைக்காக மும்பைக்கு வந்து பின்னர் இந்த நகரத்தை அவதூறு பேசுகிறார்கள். இது `உண்ட வீட்டுக்கே ரெண்டகம்’ செய்வதற்குச் சமம்" என்று கங்கனா ரணாவத் பெயரை குறிப்பிடாமல் உத்தவ் தாக்கரே விமர்சித்துப் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு