மத்திய அமைச்சராக இருக்கும் நாராயண் ராணே, ஆரம்பத்தில் சிவசேனாவில் இருந்தார். அங்கிருந்து காங்கிரஸ் கட்சிக்குச் சென்றார். காங்கிரஸ் கட்சியிலிருந்தபோது அவர் சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியில் வந்து சொந்தக்கட்சி ஆரம்பித்தார். தற்போது அவர் பா.ஜ.க-வில் இருக்கிறார். அவரைப் பாரதிய ஜனதா கட்சி ராஜ்யசபை உறுப்பினராக்கி மத்திய அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறது.

நாராயண் ராணே தொடர்ந்து உத்தவ் தாக்கரேயை விமர்சனம் செய்துவருகிறார். தற்போது உத்தவ் தாக்கரே மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அவர் மும்பையிலுள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``உத்தவ் தாக்கரே என்னைக் கொலைசெய்ய கூலிப்படையை நியமித்தார். மர்ம நபர்கள் என்னைத் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். சிலர் என்னைத் தொடர்புகொண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். என்னைக் கொலைசெய்ய உத்தவ் தாக்கரே கூலிப்படையை நியமித்திருப்பதாகத் தெரிவித்தனர். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது மாநிலத்துக்காகவும், மக்களுக்காகவும் என்ன செய்தார். வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை. மாறாக கொரோனா காலத்தில் மருந்து கொள்முதல் செய்ததில் ஊழல் நடக்கக் காரணமாக இருந்தார். உத்தவ் தாக்கரேவுக்கு அடுத்தவர்களைக் குறை கூற மட்டுமே தெரியும். நல்லது செய்பவர்களைப் பாராட்ட மாட்டார்.

துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது கடின உழைப்பால் அடிமட்டத்திலிருந்து முன்னேறி வந்திருக்கிறார். அவர் நல்ல அரசியல்வாதி என்பது அனைவருக்கும் தெரியும். உத்தவ் தாக்கரேயின் கட்சியைப் பற்றிக் கூற ஆரம்பித்தால் உத்தவ் தாக்கரேயால் வெளியில் முகத்தைக் காட்டமுடியாது. நான் பால் தாக்கரேயின் கட்சியோடு நீண்ட தொடர்பில் இருந்தவன். பல உண்மைகளை மறைத்துக்கொண்டிருக்கிறேன். பால் தாக்கரேவுக்காக மாதோஸ்ரீ பற்றி விமர்சிக்காமல் இருக்கிறேன்” என்று தெரிவித்தார். உத்தவ் தாக்கரே சமீபத்தில் தேவேந்திர பட்னாவிஸ் குறித்தும், அவர் பயனற்ற துணை முதல்வர் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ராணே இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார்.