Published:Updated:

குஜராத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் சிவசேனாவுக்குச் சவால்விடத் துணிந்துவிட்டார்! - உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே, அமித் ஷா
உத்தவ் தாக்கரே, அமித் ஷா

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் சாம்னா இதழின் தலையங்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, தன் தொண்டர்களுக்கு சாம்னா இதழில் கடிதம் எழுதியிருக்கிறர். சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து விமர்சித்துப் பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும்விதமாக உத்தவ் தாக்கரே, சிவசேனா தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் (Sindhudurg ) மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தார். இந்த விழாவில் பேசிய அமித் ஷா,``மகாராஷ்டிராவில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) கட்சிகள் இயற்கைக்கு மாறான ஒரு கூட்டணியை வைத்திருக்கின்றன. இது ஒரு முறையற்ற கூட்டணி. முதலமைச்சர் பதவியைப் பகிர்வது தொடர்பாக பா.ஜ.க சிவசேனாவுக்கு எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை" என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசியவர், ``தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க அரசுக்கே மக்கள் வாக்களித்தனர். பிரதமர் மோடியின் பெயரால் நீங்கள் வாக்குகளை வாங்கிவிட்டீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் எதுவும் பேசவில்லை. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி அரசு ஓர் ஆட்டோ ரிக்‌ஷாவைப் போன்றது. இதன் மூன்று சக்கரங்களும் வேறு வேறு பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன" என்று அமித் ஷா விமர்சித்திருந்தார்.

நான் மூடிய அறைகளில் வாக்குறுதிகளை வழங்கவில்லை. நான் என்ன செய்தாலும் அதை வெளிப்படையாகச் செய்கிறேன். மூடிய அறைக்குள் அரசியல் செய்ய மாட்டேன் - அமித் ஷா

அமித் ஷாவின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் உத்தவ் தாக்கரே, தனது கடிதத்தில், ``சிவசேனா கட்சி வெளிப்படையாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும் காங்கிரஸுடனும் கைகோத்து ஆட்சியமைத்தது. அதேநேரத்தில், பா.ஜ.க அனைத்தையும் மிக வெளிப்படையாகச் செய்கிறது என்றால், தேவேந்திர ஃபட்னாவிஸ் அதிகாலை நேரத்தில் ரகசியமாகப் பதவியேற்றது ஏன் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். குஜராத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர், சிவசேனாவுக்குச் சவால்விடத் துணிந்துவிட்டார்" என்று எழுதியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு