Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: சரத் பவார் கலந்துகொண்ட விவசாயிகள் பேரணி; புறக்கணித்த உத்தவ் தாக்கரே! - என்ன நடந்தது?

மும்பை நோக்கி வந்த விவசாயிகள்
மும்பை நோக்கி வந்த விவசாயிகள்

மும்பையில் நடந்த விவசாயிகள் பேரணியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அந்தக் கூட்டத்துக்கு மூன்றாம்கட்ட கட்சித் தலைவரை அனுப்பிவைத்திருப்பது விவாதமாகியிருக்கிறது.

மும்பையில் நேற்று விவசாயிகள் கலந்துகொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது. இந்தப் பேரணிக்குப் பிறகு பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொள்வதற்காக மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாகனங்களில் வந்து சேர்ந்திருந்தனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த இந்தப் பேரணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று முன்பே அறிவிக்கப்பட்டது.

மும்பையில் விவசாயிகள் பேரணி
மும்பையில் விவசாயிகள் பேரணி

ஆனால், நேற்று நடந்த பேரணியில் முதல்வர் உத்தவ் தாக்கரே கலந்துகொள்ளவில்லை. சரத் பவார், மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாஹேப் தோரட் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சிவசேனா தரப்பில் இளைஞரணி நிர்வாகி என்று கூறப்படும் ராகுல் லோண்டேயை உத்தவ் தாக்கரே அனுப்பிவைத்திருந்தார்.

உத்தவ் தாக்கரே நேற்று தனது வீட்டில் இருந்துகொண்டு கல்யாண் என்ற இடத்தில் கட்டப்பட்டிருக்கும் ரயில்வே மேம்பாலத்தை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடங்கிவைத்தார். விழா நடைபெறும் இடத்துக்குத் தன் மகன் ஆதித்ய தாக்கரேயை அனுப்பிவைத்தார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருக்கும் சிவசேனா, நாசிக்கிலிருந்து மும்பை நோக்கிப் பேரணியாக வந்த விவசாயிகளுக்கும் ஆதரவு தெரிவித்தது.

Live Updates: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை

ஆனால், கடைசி நேரத்தில் விவசாயிகள் பேரணியில் கலந்துகொள்ளாமல் இருந்து, தான் இன்னும் பா.ஜ.க-வின் விசுவாசிதான் என்பதை மறைமுகமாகக் காட்டிவிட்டார் உத்தவ் என்கிறார்கள் சில மும்பைவாசிகள். விவசாயச் சட்டங்கள் மீது நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடந்தபோது சிவசேனா வெளிநடப்பு செய்தது. மும்பையில் விவசாயிகள் பேரணியில் சிவசேனாவின் பெரிய தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளாதது குறித்து கருத்து கேட்டபோது அக்கட்சியின் எம்.பி அர்விந்த் சாவந்த், `நான் மும்பையில் இல்லை’ என்று கூறிவிட்டார். ஆதித்ய தாக்கரேயிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

``விவசாயிகளுக்கு சிவசேனா முழு ஆதரவு கொடுக்கிறது. கடந்த 60 நாள்களாகப் போராடும் விவசாயிகள் கோரிக்கையை ஏன் ஏற்கவில்லை என்று மீடியா மத்திய அரசைக் கேள்வி கேட்க வேண்டும். போராட்டக்களத்துக்கு யார் சென்றார்கள் என்று பார்ப்பதைவிட மத்திய அரசு மகாராஷ்டிரா விகாஷ் அகாடியின் கோரிக்கைக்குச் செவி சாய்க்கிறதா என்று பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் இந்த விவகாரத்தில் வாயே திறக்கவில்லை. நேற்றைய மும்பை விவசாயிகள் கூட்டத்தில் பேசிய சரத் பவார், `நடிகை கங்கனா ரணாவத்தைச் சந்திக்க ஆளுநருக்கு நேரம் இருக்கிறது. ஆனால், விவசாயிகளைச் சந்திக்க மட்டும் நேரம் இல்லை’ என்று சாடினார். ``விவசாயிகள் பேரணியின் இறுதியில் ஆளுநரைச் சந்தித்து மனுக்கொடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஆளுநர் கோவாவுக்குச் சென்றுவிட்டதாக என்னிடம் சொல்கிறார்கள். மகாராஷ்டிரா வரலாற்றில் இது போன்ற ஓர் ஆளுநரை நான் பார்த்ததே இல்லை. அவருக்கு நடிகையைச் சந்திக்க நேரம் இருக்கிறது. ஆனால், விவசாய சகோதரர்களைச் சந்திக்க நேரம் இல்லை. நாட்டு மக்களுக்கு உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் கோரிக்கையை பெறுவதற்காகவாவது ஆளுநர் இருந்திருக்க வேண்டியது தார்மிகக் கடமை” என்று சரத் பவார் சாடினார். நேற்றைய பேரணிக்குப் பிறகு பெரும்பாலான விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு