30 ஆண்டுகளாக ஸ்டாலின் வசம் இருந்த அதிகாரம் மிக்க பதவியான இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் உதயநிதி. நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலின்போது தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அவருடைய பிரசாரத்துக்குக் கிடைத்த ரெஸ்பான்ஸுக்குப் பலனாக இந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இளைஞரணிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட பின் முதல்முறையாக பேட்டியளித்த உதயநிதி, ``தி.மு.க-வில் நான் எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை; தி.மு.க-வில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களுக்கான அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன்.

வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என்னுடைய செயல்பாடு தக்க பதிலடியாக இருக்கும்" என்று கூறியுள்ளார். உதயநிதியின் நியமனத்தால் நேற்று தமிழகத்தின் அரசியல் களம் எப்படி பரபரப்பாக இருந்ததோ அதே அளவுக்கு, நேற்று கர்நாடக அரசியலிலும் பரபரப்பு தென்பட்டது. அதற்குக் காரணம், கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கும் மத சார்பற்ற ஜனதா தளத்தில் முக்கியமான பதவி கொடுக்கப்பட்டது தான்.
ஜே.டி.எஸ்ஸின் யூத் விங் தலைவராக நிகிலை அவரது தாத்தாவும் கட்சித் தலைவருமான தேவ கவுடா நியமித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதுமே நிகிலுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. வாரிசு அரசியலால்தான் அவருக்கு இந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், ``முதலில் வேறு ஒருவருக்குதான் இந்தப் பதவி கொடுப்பதாக இருந்தது. ஆனால், அவர் அதை ஏற்க மறுத்ததால் நிகிலுக்குக் கொடுத்தோம். நிகில், கட்சிக்காக உழைத்துள்ளார்" என்ற் தேவ கவுடா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நியமனத்துக்குப் பின் பேசிய நிகில், ``எந்தப் பதவி கொடுத்தாலும் உண்மையான தொண்டனாக கட்சிக்காக உழைப்பேன். கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனையுடன்தான் எனக்கு இந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வாரிசு அரசியல் எனக் கூறுவதைக் கேட்கும்போது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பை தாத்தா கொடுப்பார் என நினைக்கவில்லை. தாத்தாவை பின்பற்றி கட்சியை வளர்க்கப் பாடுபடுவேன்" என்று கூறியுள்ளார்.
உதயநிதியைப் போலவே நிகில் குமாரசாமியும் ஒரு நடிகர்தான். 'ஜாகுவார்', 'சீதாராம கல்யாணா' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். நடிப்போடு நின்றுவிடாமல், நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக மாண்டியா தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால், வாரிசு அரசியல் உள்ளிட்ட எதிர்த்தரப்பினரின் பல்வேறு பிரச்சாரங்களால் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகை சுமலதா அம்பரீஷிடம் தோல்வியுற்றார். இதற்காகத்தான் இந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக எதிர்க்கட்சிகள் பேசிவருகின்றன. கூடுதல் தகவல்... தேவ கவுடாவின் இன்னொரு பேரன் ப்ரஜ்வால் ரேவண்னாவும் ஹாசன் தொகுதி எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.