Published:Updated:

``அமைச்சர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை!" - உதயநிதியின் உள்ளரசியல் திட்டம் என்ன?

உதயநிதி ஸ்டாலின்
News
உதயநிதி ஸ்டாலின் ( Twitter/@Udhaystalin )

உதயநிதி ஸ்டாலின் பேச்சிலிருக்கும் அரசியல் உள்நோக்கம் என்ன? கடந்த காலப் பேச்சுகள் போல இதுவும் பின்னாளில் மாறுமா? வாரிசு அரசியலில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது தி.மு.க?

``அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பின்மீதும் எனக்கு ஆசை இல்லை. மக்கள் பணியில் என்றும் உங்களுள் ஒருவராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். முதல்வர் ஸ்டாலினுக்கும், மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” எனக் கோவையில் நடந்த தி.மு.க உறுப்பினர் சேர்க்கை முகாம் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பதுதான் தற்போது தமிழ்நாடு அரசியல் பேசு பொருளாகியிருக்கிறது. ``பத்து ஆண்டுகளுக்கு முன்பு உதயநிதி சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தபோது ‘அரசியலில் வருவதற்காகத்தான் சினிமாவுக்குள் வந்தீர்களா?’ எனக் கேட்ட போது, `அரசியலில் எனக்கு ஆர்வமில்லை. கட்சியிலிருந்து கொண்டுதான் அரசியல் செய்ய வேண்டும் என இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன்’ என்றார். ஸ்டாலினும் தன்னுடைய குடும்பத்திலிருந்து அரசியலுக்கு யாரும் வர மாட்டார்கள் என்றார். தேர்தல் நேரத்திலேயே உதயநிதி போட்டியிடப் போவதில்லை என்றார்கள். ஓர் அனுபவத்துக்காக நேர்காணலில் கலந்து கொள்கிறார் என்றார்கள். ஆனாலும் இப்போது எல்லாம் அதற்கு நேர் எதிராகச் சென்று கொண்டிருக்கிறது" எனப் பழைய விஷயங்களை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ``உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும்” எனத் தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அமைச்சர்கள் குரல் கொடுத்து வரும் சூழலில், உதயநிதி ஸ்டாலின் இப்படிப் பேசியிருப்பதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.

உதயநிதி
உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் பேச்சிலிருக்கும் அரசியல் உள்நோக்கம் என்ன? கடந்த காலப் பேச்சுகள் போல இதுவும் பின்னாளில் மாறுமா? வாரிசு அரசியலில் தி.மு.க சிக்கிக் கொண்டிருக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை தி.மு.க எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அரசியல் தலைவர்களிடம் பேசினோம்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உதயநிதியின் பேச்சு குறித்து பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜனிடம் கேட்டோம். ``எனக்கு ஆசை இல்லை, அமைச்சர் பதவி வேண்டும் எனச் சொல்வது, எனக்கு வேண்டும் எனக்கு ஆசை இருக்கிறது என்பதாகத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனக்குப் பதவி ஆசை இல்லை என்று சொல்லும்போது எத்தனை பேர் நம்மைப் பதவி ஏற்கச் சொல்லிப் பேசுகிறார்கள். யாரெல்லாம் ஆதரவு தருகிறார்கள் என்பதைக் கண்காணிப்பார்கள். இதெல்லாம் ஓர் அரசியல் நாடகம்தான். அரசியலுக்கு வர மாட்டேன் என்றவரைக் கட்சியின் இளைஞரணித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியவர்கள் தொண்டர்களா அல்லது ஸ்டாலினின் குடும்பத்தினரா? ஏனெனில் நான் அரசியலுக்கே வர மாட்டேன் என்றார் உதயநிதி. இதையே முதல்வர் ஸ்டாலினும் சொன்னார். ஆனால், தேர்தலில் போட்டியிட்டு, சட்டமன்றத்துக்கே சென்றுவிட்டார். சட்டமன்றத்தில்கூட முதல்வர் பேசும்போதெல்லாம் உதயநிதியும் தெரிய வேண்டும் என கேமரா வைக்கப்படுகிறது. சட்டமன்ற படிக்கட்டுக்கு வந்தவர் அமைச்சர் அறைக்குச் செல்ல எவ்வளவு நேரமாகும். பின்னாளில் அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது கட்சியின் முடிவு என்பார் அவ்வளவுதான். அரசியலில் எப்போதும் பேசு பொருளாக இருக்க வேண்டும். உதயநிதியின் இந்தப் பேச்சும் சிலருக்கு அவல் கொடுத்தது மாதிரிதானே தவிர, பெரியளவில் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கத் தேவையில்லை.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதி, அவருக்குப் பிறகு ஸ்டாலின். இப்போது ஸ்டாலின் குடும்பத்தில் இருப்பவர்கள்தான் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். உதயநிதியை மட்டும் எப்படி வெறுமனே சட்டமன்ற உறுப்பினராகவே வைத்திருப்பார்கள். விரைவில் உதயநிதி அமைச்சர் ஆவார். அதை நாம் பார்க்கத்தான் போகிறோம்” என விமர்சனம் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதயநிதி பேச்சின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் கேட்டோம். ``தி.மு.க-வில் கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் கட்சியில் முக்கிய இடத்துக்கு வந்தார். ஆனால், அவர் ஆரம்பக்கட்டத்திலிருந்து கட்சியில் பல்வேறு பணிகள் செய்து, சிறைக்குச் சென்று படிப்படியாக மேலே வந்தார். ஒரு கட்டத்தில் பேராசிரியர் அன்பழகனே கட்சியின் தலைமைப் பொறுப்பை ஸ்டாலின் ஏற்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அவரது கட்சிப் பணி இருந்தது. அந்தளவுக்குக் கட்சியில் இயல்பானதாக இருந்தது. ஆனால், உதயநிதி இப்போது இருக்கும் இடம் கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைத்ததுதான். ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் கட்சியில் முக்கியப் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற பேச்சும், அமைச்சராக்க வேண்டும் என்ற பேச்சும் இருக்கிறது. உதயநிதி இப்போதைக்குத் தனக்கு ஆசை இல்லை என்று சொன்னாலும் எதிர்காலத்தில் நிச்சயம் அமைச்சர் ஆகிவிடுவார். அது கட்சி எடுத்த முடிவா, தொண்டர்கள் எடுத்த முடிவா, குடும்பத்தினர் எடுத்த முடிவா என்பதல்ல முக்கியம். ஆனால், உதயநிதி நிச்சயம் அமைச்சராவார். தி.மு.க தவிர பிற கட்சியினர் நிச்சயம் இதை விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். ஆனால், தி.மு.க-வுக்குள் இதை ஏற்றுக் கொள்வார்கள். எனவே, இதில் நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ப்ரியன்
ப்ரியன்

தி.மு.க வாரிசுக் கட்சி என்ற விமர்சனம் வரத்தான் செய்யும். அதைக் கடந்த காலங்களைப் போல இப்போதும் தி.மு.க எதிர்கொள்ளத்தான் வேண்டும். அமைச்சராகவோ, துணை முதல்வராகவோ, கட்சியின் தலைமைக்கோ உதயநிதி வரத்தான் செய்வார். அதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துகொண்டும் தி.மு.க-வினர் ஏற்றுக்கொண்டும்தான் கடந்து செல்வார்கள். இந்த விஷயத்தில் வேறு என்ன செய்ய முடியும்?” எனத் தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம். ``உதயநிதி பேசியது அவர் மனதில் இருப்பது. அதற்கு யாரும் என்ன காரணமும் சொல்லலாம். தன்னிலை விளக்கம் கொடுத்த பின்னர் அதில் ஏன் அரசியல் இருக்க வேண்டும் என நாம் தேட வேண்டும். பத்து ஆண்டுகளுக்குமுன்பு அரசியலில் விருப்பம் இல்லை என உதயநிதி சொல்லியிருக்கிறார். அதை நாம் மறுக்க முடியாது. ஆனால், சூழல் நிலை மாறும்போது, இயக்கம் சார்ந்து சில முடிவுகள் எடுக்கும் போது அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒருவரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை இயக்கம்தான் முடிவு செய்ய வேண்டும். இயக்கம் முடிவு செய்யும்போது அதன் அங்கத்திலிருப்பவர்கள் அதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். காஷ்மீரிலிருந்து கர்நாடகா வரை அரசியலில் எந்தத் தொடர்பும் இல்லாத தன் மகன்களை அரசியலில் நுழைத்திருப்பார்கள். ஆனால், தி.மு.க-வில் அது சாத்தியமில்லை. இதற்கு நல்ல உதாரணம் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். உழைத்து உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். கட்சி வெற்றி பெற்று அவருக்கு முதல்வர் பதவி கொடுக்கவில்லை. அவர் தன்னை முன்னிறுத்தி, மக்களின் நம்பிக்கையைப் பெற்று இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார். வாரிசு அரசியல் ஸ்டாலினுக்குப் பொருந்தாது என எங்களின் எதிர்க்கட்சிகளே சொல்லியிருக்கின்றன.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

என்ன நடந்தாலும் அதை விமர்சனம் செய்வார்கள். நாம் எடுக்கும் முடிவு மக்களுக்கும் நாம் சார்ந்த இயக்கத்துக்கும் நல்லதாக அமையுமானால் அந்த முடிவை எடுக்கத் தயங்கக் கூடாது. விமர்சனங்களுக்குப் பயந்தால் நாம் ரோட்டிலேயே நடக்க முடியாது. முடிவுகள் நன்மை நோக்கித்தான் இருக்க வேண்டுமே தவிர விமர்சனங்களை மையமிட்டதாக இருக்கக் கூடாது” என விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசினார்.