Published:Updated:

`இளைஞர்களுக்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் தி.மு.க!' - உதயநிதி ஸ்டாலின்

கலிலுல்லா.ச

தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டபின் முதல்முறையாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க இளைஞரணி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். ``நாங்கள் நடந்துகொண்டே இருப்போம்; எங்கள் கால்கள் நடையை நிறுத்தா. நாங்கள் எழுதிக் கொண்டே இருப்போம்; எங்கள் கைகள் எழுதுவதை நிறுத்தா. நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம்; எங்களுடைய உதடுகளும் நாவுகளும் பேசுவதை நிறுத்தா. காரணம், நாங்கள் ஆழமான கொள்கைக்குச் சொந்தக்காரர்கள். நாங்கள் பெரியாரின் தொண்டர்கள். அறிஞர் அண்ணாவின் தம்பிமார்கள். அந்தத் தொண்டர் படையிலேதான், அந்தத் தம்பிமார்களின் வரிசையிலேதான், இன்று இளைஞரணியும் சேர்ந்திருக்கிறது.’’ என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர்.

தி.மு.க இளைஞரணி
தி.மு.க இளைஞரணி

1980-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள், மதுரை ஜான்சி ராணி பூங்கா திடலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணியை முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்தார். இயக்கத்தின் இதயமாகச் சொல்லப்படும் இளைஞரணி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. 40 வது ஆண்டை இளைஞரணி தொடும்போது, அதனுடைய செயலாளர் பொறுப்பை சுமக்கும் கடமை, எனக்குக் கிடைத்திருப்பதை நினைத்து, ஒரு பக்கம் பெருமைப்படுகிறேன். இன்னொரு பக்கம் மலைப்பாகவும் இருக்கிறது.

பெருமைக்கு என்ன காரணம் என்பதை நான் சொல்லத் தெரியவில்லை. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், இருந்து செயல்பட்ட பொறுப்பு இது. இதைவிட பெருமை எனக்கு என்ன வேண்டும்? ஏன் மலைப்பாக இருக்கிறது என்றேனென்றால், கடந்த 40 ஆண்டுக்காலமாக இளைஞரணியைக் கட்டுக்கோப்புடன் வழிநடத்தி, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைச் செதுக்கி, அசைக்க முடியாத கற்கோட்டையாக உருவாக்கிக் கொடுத்துள்ளார். அதை, மேலும் கட்டிக்காக்கும் பொறுப்பு, என் கையில் வந்து சேர்ந்துள்ளது. மு.க.ஸ்டாலின், பரபரப்புடனும் எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சகோதரர் வெள்ளக்கோயில் சுவாமிநாதன், இளைஞரணியை நடத்திச் சென்று, எனக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். இவர்களது வழிகாட்டுதலுடனும், இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஒத்துழைப்புடனும் எனது பயணம் தொடங்குகிறது.

உதயநிதி
உதயநிதி

தி.மு.க என்ற இயக்கமே, இளைஞர்களுக்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான். 1949-ம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்டபோது, பேரறிஞர் அண்ணாவின் வயது 40. முத்தமிழறிஞர் கலைஞரின் வயது 25. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியருக்கு அப்போது வயது 27. இப்படி ஒவ்வொரு முன்னணியினரையும் வரிசைப்படுத்த முடியும். அதனால்தான், இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இளைஞர் இயக்கம் என்கிறேன்.

இந்த இளைஞர் சக்திதான், கொட்டும் மழையில் உருவான இயக்கத்தை நாடு முழுவதும் வளர்த்து அசைக்க முடியாத ஆலமரமாகக் காட்சியளிக்க வைத்துள்ளது. இயக்கத்தின் வேர் ஆழமானது. கிளைகள் விரிந்து பரந்தது. யாராலும் எளிதில் அசைக்க முடியாதது. அதனால்தான், இன்று பலருக்கும் நம் கழகத்தைப் பார்த்தால், வயிற்றெரிச்சல்.

இளைஞரணியின் அலுவலகம் செயல்படுவது `அன்பகம்’ கழகத்தின் தலைமையகம் செயல்படுவது `அறிவாலயம்’. அன்பும் அறிவும் நம் இரு கண்கள்.
உதயநிதி

பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றவை. மனதைத் திடப்படுத்துபவை. இந்த விமர்சனங்களுக்கான ஒரே பதில் ``செயல்’’ மட்டுமே என்று ஸ்டாலின் அடிக்கடி சொல்வார். அந்த அடிப்படையில் எங்களது இளைஞரணி தனது அர்ப்பணிப்புடன்கூடிய செயல்பாட்டின் மூலமாக இந்த விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்வோம்.

நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞரணிக்கு இலக்கு என்பது ஒன்றுதான். தமிழ்நாட்டில் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது. அந்த இலக்கை அடைய இரவுபகல் பாராது உழைக்கக் கிளம்பியிருக்கும் இளம்படையினருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.