Election bannerElection banner
Published:Updated:

`உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் செங்கல்லைத் திருடிவிட்டார்’ - பாஜக நிர்வாகி புகார்!

உதயநிதி ஸ்டாலின் கையில் செங்கல்
உதயநிதி ஸ்டாலின் கையில் செங்கல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல்லை உதயநிதி ஸ்டாலின் திருடிவிட்டதாக பா.ஜ.க நிர்வாகி புகார் அளித்துள்ளார்.

தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரிக்கும் பணியில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவீரமாக ஈடுபட்டுவருகிறார். அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக பல்வேறு யுக்திகளைத் தனது பரப்புரையின் மூலம் வெளிப்படுத்தும் அவர், சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை மையமாகவைத்துச் செய்த பரப்புரை வைரலானது.

`` மதுரையில் மூன்று வருஷத்துக்கு முன்னாடி அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகள் மதுரையில எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிக் கொடுத்தாங்க. உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அதை நான் கையோட எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்” என்றவர், செங்கல் ஒன்றை எடுத்துக் காட்டினார். `` இதுதான் அவங்க கட்டிக் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை” என்று கூற கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

எய்ம்ஸ் செங்கல் - உதய்நிதி ஸ்டாலின்
எய்ம்ஸ் செங்கல் - உதய்நிதி ஸ்டாலின்

இந்தநிலையில், எய்ம்ஸ் கட்டப்படவிருக்கும் வளாகத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் செங்கல்லைத் திருடிவிட்டார் என்று பா.ஜ.க நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து கோவில்பட்டி காவல் நிலையத்தில் பா.ஜ.க நிர்வாகி நீதிப்பாண்டியன் என்பவர் கொடுத்துள்ள புகாரில், `` மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்க்காக பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் கடந்த 27.01.2019-ம் தேதியில் அடிக்கல் நாட்டப்பட்து. அதைத் தொடர்ந்து கடந்த 01.012.2020-ம் தேதியன்று பூமி பூஜையுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோமீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது.

சொத்தின் பாதுகாப்புக்காக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச்சுவர் வளாகத்துக்குள்ளிருந்து செங்கல்லை தி.மு.க-வின் மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருடியிருக்கிறார். இந்த உண்மையை அவரே நேற்று (25.03.2021) விளாத்திகுளம் பேருந்து நிலையத்துக்கு முன்பு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தான் திருடிக்கொண்டு வந்த அந்தச் செங்கலையும் அங்கே கூடியிருந்த பொதுமக்களிடத்தில் எடுத்துக் காண்பித்தார்.

ஸ்டார் தொகுதிகள்: சேப்பாக்கத்தில் சிக்ஸர் அடிப்பாரா உதயநிதி?

அவரின் இத்தகையை செயல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு

380-ன் படி தண்டிக்கத்தக்க குற்றச் செயலாகும். ஆகவே, இந்தப் புகார் மனு மீது விசாரணை செய்து அவர்மீது வழக்கு பதிவுசெய்து அவர் திருடிவந்த செங்கல்லைக் கைப்பற்றி சட்டப்படி தண்டனை பெற்று தந்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று புகார் தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு