Published:Updated:

ஸ்டார் தொகுதிகள்: சேப்பாக்கத்தில் சிக்ஸர் அடிப்பாரா உதயநிதி?

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இங்கு வென்று எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன் மறைந்துவிட்ட நிலையில், தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் களம்காண்கிறார்.

தி.மு.க-வுக்கு செல்வாக்கான தொகுதிகளில் ஒன்று, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி. மூன்று முறை சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று, அதன் மூலமாக இரண்டு முறை முதல்வர் அரியணையில் அமர்ந்திருக்கிறார் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

2011-ல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருவல்லிக்கேணி தொகுதியின் சில பகுதிகளை இணைத்துக்கொண்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியாக மாறிய பிறகும், தொகுதியைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. இங்கு வென்று எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன் மறைந்துவிட்ட நிலையில், தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் களம்காண்கிறார்.

தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவான உடனேயே உதயநிதியின் முதல் விருப்பமாக இருந்தது, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிதான். ‘‘சிறிய தொகுதி என்பதால், பிரசாரத்தை எளிதில் முடித்துக்கொண்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யலாம் என்பது உதயநிதியின் கணக்கு. தவிர, சிறுபான்மையினர் கணிசமாக வசிப்பதால், அவர்களின் ஓட்டுகளைக் குறிவைத்து இந்தத் தொகுதியை வசதியாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார் உதயநிதி’’ என்கிறார்கள் விஷயம் அறிந்த உடன்பிறப்புகள்.

ஏ.வி.ஏ.கஸ்ஸாலி
ஏ.வி.ஏ.கஸ்ஸாலி

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் அனலாக வீசுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உதயநிதிக்கு எதிராக அ.தி.மு.க கூட்டணியில் நிறுத்தப்பட்டிருக்கும் பா.ம.க வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்; தொகுதியில் பா.ம.கவுக்கும் பெரிதாக பரிச்சயம் இல்லை. தொகுதியை பா.ம.க-வுக்கு தள்ளிவிட்டதால், இங்கு உதயநிதிக்கு எதிராகப் பெரிதாக மெனக்கெடாது அ.தி.மு.க. இவையெல்லாம் உதயநிதிக்கு ப்ளஸ்.

அதேசமயம், தி.மு.க-வின் சில சீனியர் நிர்வாகிகளே, “உதயநிதிக்கு சீட் கொடுப்பதும் கொடுக்காததும் கட்சித் தலைமையின் விருப்பம். ஆனால், கடைசி நாள்களில், ‘உதயநிதி போட்டியிட மாட்டார்... இல்லையில்லை, போட்டியிடுவார்’ என்றெல்லாம் திடீர் நாடகமாடியது இந்தத் தொகுதியில் போட்டியிட ஆசைப்பட்ட கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ‘ஸ்டாலினைத் தோற்கடிப்பேன்’ என்று சொல்லியே தி.மு.க-வைக் கடுமையாக விமர்சனம் செய்துவரும் சீமானின் திருவொற்றியூர் தொகுதியில் உதயநிதி போட்டியிட்டால், அவரது துணிச்சலைப் பாராட்டலாம். ஆனால், முதல் தேர்தலிலேயே சவாலைத் தவிர்த்துவிட்டு, பாதுகாப்பான தொகுதியில் செல்வாக்கு இல்லாத வேட்பாளரை எதிர்கொள்வது உதயநிதியின் பயத்தையே காட்டுகிறது” என்கிறார்கள். இதெல்லாம் உதயநிதிக்கு மைனஸ்.

எல்.ராஜேந்திரன்
எல்.ராஜேந்திரன்

எஸ்.டி.பி.ஐ மற்றும் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகள் அ.ம.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கின்றன. இங்கு அ.ம.மு.க சார்பில் எல்.ராஜேந்திரன் போட்டியிடுகிறார். எஸ்.டி.பி.ஐ கட்சிக்குத் தமிழ் பேசும் இஸ்லாமியர்களிடமும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு உருது பேசும் இஸ்லாமியர்களிடமும் குறிப்பிடத்தக்க வாக்குகள் உள்ளன. இவை அ.ம.மு.க-வுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஸ்டார் தொகுதிகள்: சேப்பாக்கத்தில் சிக்ஸர் அடிப்பாரா உதயநிதி?

இன்றைய சூழலில், ஹாயாக தொகுதியில் வலம்வருகிறார் உதயநிதி. தாத்தாவின் தொகுதி, பேரனுக்கு எளிதாகக் கைவசமாகும் என்றே சொல்லலாம்.

அடுத்த கட்டுரைக்கு