Published:Updated:

கடுகடுத்த உதயநிதி... கலக்கத்தில் உடன்பிறப்புகள்! - கோவை திமுக கூட்டம் ரிப்போர்ட்

கோவை திமுக கூட்டத்தில் உதயநிதி
News
கோவை திமுக கூட்டத்தில் உதயநிதி

``ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பூத் கமிட்டி கூட்டம். ஆனால், அந்த ஒருங்கிணைப்புதான் இல்ல.” என்று உடன்பிறப்புகளின் கோஷ்டி மல்லுக்கட்டுக்கு டோஸ் விட்டார் உதயநிதி ஸ்டாலின்.

கோவை மாவட்டத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, அங்கு திமுகவை கரைசேர்க்க பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் என்று அடுத்தடுத்து அழைத்து வந்து கூட்டம் நடத்தி வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மதியம் கோவை வந்த உதயநிதி, காளப்பட்டியில் நடந்த புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி வரை, ``விரைவில் நீங்க அமைச்சர், துணை முதல்வர் ஆகனும். தலைவருக்கு உறுதுணையா இருக்கனும்” என்று பேசினார்கள். அங்கு மைக் பிடித்த உதயநிதி, ``கோயம்புத்தூர்காரங்க குசும்பு பிடிச்சவங்க. அது மட்டுமல்ல.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அப்பப்ப ஏமாத்தவும் செஞ்சுடுவிங்க. மீண்டும் எங்களை ஏமாத்திடாதீங்க” என்று நக்கலடித்தவர், ``நான் பதவி, பொறுப்புகளுக்கு எல்லாம் ஆசைப்படாதவன். தலைவருக்கும், உங்களுக்கும் பாலமாக தான் இருக்க நினைக்கறேன்” என்று பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாலை கொடிசியா மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஸ்டாலின் கூட்டத்துக்கு 1 லட்சம் பேர் இறக்க டார்கெட் செய்த செந்தில் பாலாஜி, உதயநிதி கூட்டத்துக்கு 25,000 பேரை இறக்க டார்கெட் வைத்தார். ஒரு பூத்துக்கு 10 பேர், என கவனித்து டார்கெட்டை நெருங்கி கூட்டத்தை கூட்டிவிட்டனர்.

கோவை திமுக கூட்டம்
கோவை திமுக கூட்டம்

வாகனங்கள் எல்லாம் ஸ்பான்சர் பிடித்து கொடிசியா மைதானம் முழுவதுமாக நிரம்பியது. மைக் செட் முதல் கவனிப்புகள் வரை கரூர்காரர்களின் கையே ஓங்கியதால் கோவை உடன்பிறப்புகளின் மனக்குமுறல்களை அதிகம் கேட்க முடிந்தது.

பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் கட்அவுட்கள் மின்விளக்கில் மிளிற, அதற்கு அருகில் சற்றே சிறிய அளவில் உதயநிதி கட்அவுட்டும் வைத்திருந்தனர். பேனர், போஸ்டர்களில் ஸ்டாலின், உதயநிதி, செந்தில் பாலாஜி படங்களே இடம்பெற்றிருந்தன. மாவட்ட பொறுப்பாளர்கள் படங்கள் கூட இடம் பெறவில்லை என்பது உடன்பிறப்புகளை கூடுதலாக புலம்ப வைத்தது.

கட்அவுட்
கட்அவுட்

கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், பொங்கலூர் பழனிசாமி, செந்தில் பாலாஜி, உதயநிதி மட்டுமே பேசினர். கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், “தேர்தல்ல நம்மை தோற்கடிச்ச நம் கறுப்பு ஆடுகளை கட்டம் கட்டி தூக்கனும்.” என்று போட்டு உடைத்தார்.

செந்தில் பாலாஜி பேசும்போது, ``நாளைய தமிழகத்தை தளபதிக்கு அரணாக இருந்து வழிநடத்தக் கூடிய இளைஞரணி செயலாளர் உதயநிதி” என்று மெகா சைஸ் ஐஸ் கட்டியை இறக்கி ஆரம்பித்தார். “கோவையில் 2 நாள்கள் தங்கி பிரசாரம் செய்தேன். இங்கு நம்மால் வெற்றிபெற முடியவில்லை என்று உதயநிதி கூறினார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கடந்த காலத்தை போல இங்கு மீண்டும் நடக்கும் என சில மாய தோற்றத்தை சிலர் உருவாக்குகின்றனர். அது கானல் நீர். வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கோவை முழுவதும் திமுக வென்றது என்கிற நிலையை உருவாக்குவோம் என உறுதியை அளிக்கிறோம்.” என்று பேசினார்.

கடைசியாக மைக் பிடித்த உதயநிதி ஸ்டாலின் வழக்கத்தைவிட சற்று கடுப்புடன் பேசினார். எப்போதும் பேசும் நக்கல் நையாண்டி மிஸ்ஸிங். எடுத்த எடுப்பிலேயே, ``ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பூத் கமிட்டி கூட்டம். ஆனால், அந்த ஒருங்கிணைப்புதான் இல்ல.” என்று உடன்பிறப்புகளின் கோஷ்டி மல்லுக்கட்டுக்கு டோஸ் விட்டார்.

உதயநிதி செந்தில் பாலாஜி
உதயநிதி செந்தில் பாலாஜி

தொடர்ந்து பேசிய உதயநிதி, ``சட்டசபை தேர்தலில் கோவை நம் காலை வாரிவிட்டது. வேலுமணி கொள்ளையடித்த பணத்தை இறக்கியது ஒரு காரணம் என்றால், நம்மிடம் ஒற்றுமை இல்லாததும் தோல்விக்கு ஒரு காரணம்தான்.

ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கூறியிருந்தார். அதன்படி விரைவில் வேலுமணி உள்ளே செல்வது உறுதி.” என்று ஸ்டாலின் மற்றும் ஆட்சியின் பெருமைகளை பட்டியலிட்டார். உதயநிதி கோவை, கொங்கு மண்டல பொறுப்பாளராக வரப்போகிறார் என்று ஆரம்பத்தில் இருந்து பரவி வந்த தகவல்களுக்கும் கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைத்தார்.

உதயநிதி
உதயநிதி

``இனி நான் மாதம் ஒருமுறை கோவை வருவேன். உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் வெற்றி பெற வைத்தால், மாதம் 10 நாள் கோவையிலேயே தங்கி உங்களுடன் பணியாற்றுவேன்” என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் பேசி முடித்து புறப்படும்போது, அவருடன் போட்டோ எடுக்க மேடையில் உடன்பிறப்புகளிடம் மிகப்பெரிய தள்ளுமுள்ளு நடந்தது. மேடையில் இருந்து சிலர் கீழே விழுந்து, மைக் போடியும் சரிந்து களேபரம் ஆகிவிட்டது. “கூட்டத்தின் கருவே பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை.

போட்டோ எடுக்க தள்ளு முள்ளு
போட்டோ எடுக்க தள்ளு முள்ளு

ஆனால், அது தொடர்பாக ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்கப்படவில்லையே.. பிறகு எதற்கு இந்த கூட்டம்.” என்று உடன்பிறப்புகளே புலம்பி சென்றனர்.