Published:Updated:

உதயநிதியின் தீபாவளிப் பட்டாசு முதல் டிஜிபி அலுவலகத்தின் வெடிச் சத்தம் வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

``தீபாவளிக்குப் பட்டாசு வாங்க தீவுத்திடல் வரைக்கும் செல்கிறேன்... இன்னொரு முறை ஹேப்பி தீபாவளி’’ என்று வாட்ஸ்அப் தகவலுடன் மத்தாப்பு சிம்பலையும் அனுப்பியிருந்தார் கழுகார்... தீபாவளி ஜோர் என்பதால் அவர் அனுப்பிய ஒவ்வொரு தகவலும் `பட்டாசு’ ரகம்!

உதயநிதியின் தீபாவளிப் பட்டாசு! பற்றவைக்கத் தயாராகும் பா.ஜ.க

நவம்பர் 11-ம் தேதி, சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் சேப்பாக்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்வீட் மற்றும் பட்டாசு பாக்ஸ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை போட்டோ எடுத்துவைத்திருக்கும் பா.ஜ.க., இதையும் தங்களுக்குச் சாதகமாகக் கிளறப்போகிறதாம். இது பற்றிப் பேசிய தாமரை முகாம் ஆட்கள், “வெளியேதான் பெரியார் கொள்கைகளைப் பேசுகிறார்கள். ரத யாத்திரையை விமர்சிக்கிறார்கள். ஆனால், இந்துக்களின் சென்டிமென்ட் என்றால் இவர்களுக்கு ஜுரம் வந்துவிடுகிறது.

பா.ஜ.க
பா.ஜ.க

அதனால்தான், ஏற்கெனவே தீபாவளியை விடுமுறை தினமாகக் கொண்டாடுபவர்கள், இப்போது ஸ்வீட், பட்டாசு பொருள்களையும் கட்சியினருக்கு அதிகாரபூர்வமாக வழங்கி குஷிப்படுத்துகிறார்கள். இவையெல்லாம் பா.ஜ.க மீதான பயத்தைத்தான் காட்டுகின்றன. இந்தப் பிரச்னையை முன்வைத்து தேர்தல் நேரத்தில் பட்டாசு வெடிக்கவும் தயாராகிவருகிறது கமலாலயம்.

பார்த்து... ரெண்டு தரப்புமே பட்டாசை வெடிக்கிறேன்னு கையைச் சுட்டுக்காதீங்க!

பதிவுத்துறையில் பணவசூல்!

பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் பெண் கண்காணிப்பாளர்கள் சிலர், தமிழகம் முழுவதுமுள்ள சார்-பதிவாளர்களிடமிருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைக் கட்டாய வசூல் வேட்டை நடத்துகிறார்களாம். தீபாவளியை முன்வைத்து ஒரு மாதத்துக்கு முன்பாகவே மாவட்டவாரியாக பெரும் தொகையாக டார்கெட்-ஆக நிர்ணயித்துவிட்டார்களாம். பணம் தருவதற்கு முரண்டு பிடிப்பவர்களை அந்த நேரத்தில் எதுவும் செய்யாமல், பாதியில் அணைந்துபோன பட்டாசுத் திரியைப்போல அமைதிகாக்கிறார்களாம். ஆனால், அடுத்தடுத்த சில தினங்களில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் ஏதாவது ஒரு சிறு சர்ச்சையில் சிக்கிவிட்டால் போதும்... விசாரணை என்கிற பெயரில் தேரைத் தெருவில் இழுத்து வேலைக்கே `வெடி’ வைத்துவிடுகிறார்களாம்.

பணம்
பணம்

இதற்குப் பயந்துகொண்டே, பெரும்பாலான சார்-பதிவாளர்களும் கப்பம் கட்டிவிடுவதாகக் கூறப்படுகிறது. இப்படித்தான் அல்வா நகரத்தைச் சேர்ந்த சார் பதிவாளர் ஒருவர் கப்பம் கட்ட மறுத்ததால், அவர் சம்பந்தப்பட்ட விசாரணை ஃபைல் ஒன்று நீண்டநாள்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்ததாம். வேறு வழியில்லாமல் அவர் கப்பம் கட்ட முன்வந்தபோது, மூன்று மடங்கு கூடுதலாக டிமாண்ட் செய்திருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்த சார் பதிவாளர் தரப்பு விசாரித்தால், ``அது அப்போ... ஒழுங்கா கட்டியிருந்தா அதோட போயிருக்கும்...” என்றார்களாம் எகத்தாளமாக. ஒருவழியாக மூன்று மடங்கு தொகையை கப்பம் கட்டிய பிறகுதான் மின்னல் வேகத்தில் ஃபைல் மூவ் செய்யப்பட்டு, அவருக்கு ரூட் கிளியர் ஆனதாம்.

லஞ்சப் பேர்வழிகளின் சீட்டுக்கு `வேட்டு’ வைக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை?

ஐ.பி.எஸ் ஈகோ யுத்தம்!
டி.ஜி.பி ஆபிஸ் வரை கேட்குது சத்தம்!

சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கும், அவருக்குக் கீழ் பணிபுரியும் டி.ஐ.ஜி அந்தஸ்துள்ள ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்குமான `வெடிச் சத்தம்’ டி.ஜி.பி அலுவலகம் வரைக்கும் காதைப் பிளக்கிறது. உயரதிகாரியின் எந்த உத்தரவையும் டி.ஐ.ஜி அந்தஸ்து அதிகாரி மதிப்பதில்லையாம். `இன்னும் சில மாதங்களில் நானும் ஐ.ஜி-யாகப்போகிறேன்.

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

அவர் சொல்றதையெல்லாம் நான் கேட்கணும்னு அவசியமில்லை’ என்று சொல்லித் திரிகிறாராம் அந்த டி.ஐ.ஜி அதிகாரி. ஒருவரைப் பற்றி மற்றொருவர் ரிப்போர்ட்களை டி.ஜி.பி அலுவலகத்துக்கு மாறி மாறி அனுப்புவதால், விழிபிதுங்கி நிற்கிறது டி.ஜி.பி அலுவலகம்.

`திரி’யைக் கிள்ளுவாரா திரிபாதி?!

சிக்கிக்கொண்ட `குண்டு'கள்
சிக்கலில் மயூரா ஜெயக்குமார்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், நவம்பர் 11-ம் தேதி காலை கோவைக்குச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திருக்கிறார். அவர் தனது பையில், துப்பாக்கிக் குண்டுகளை (குண்டுகள் மட்டும்) வைத்திருப்பது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்திருக்கிறது. உஷாரான பாதுகாப்புப் படையினர் அவரிடம் சோதனை நடத்தி, 17 குண்டுகளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். `என்னிடம் இருப்பது உரிமம் பெற்ற துப்பாக்கிதான்.

மயூரா ஜெயக்குமார்
மயூரா ஜெயக்குமார்

வீட்டிலிருந்து கிளம்பும்போது, தவறுதலாக துப்பாக்கிக் குண்டுகளை எடுத்து வந்துவிட்டேன்’ என்று மயூரா ஜெயக்குமார் விளக்கம் அளித்தாராம். ஆனாலும், மயூராவுக்கு எதிர்க் கோஷ்டியில் இருக்கும் கதர்கள், வேறுவிதமாக இதை போலீஸில் `பற்ற’வைத்துவிட்டார்களாம். இதையடுத்து இந்த விவகாரத்தை `திரி’சூலம் காவல் நிலைய போலீஸ் தீவிரமாக விசாரிப்பது கதர்க் கட்சியில் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது.

பத்தவெச்சிட்டியே பரட்டை!

`ஐந்து பர்சென்ட்’
எதிர்க்கட்சி பிரமுகர் ஆட்டம்

அரசுப் பணியை ஒப்பந்தம் எடுத்திருக்கும் தனியார் ஒப்பந்ததாரர்களிடம், சென்னை எழும்பூரைச் சேர்ந்த எதிர்க்கட்சிப் பிரமுகர் ஒருவர் வசூல் வேட்டையில் `பட்டாசு’ கிளப்புகிறாராம். எழும்பூர் தொகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று கட்டுவதற்கு குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பணியில், `எனக்கு ஐந்து பர்சென்ட் வந்துவிட வேண்டும்’ என்று கறாராகக் கூறிவிட்டாராம் அந்த எதிர்க்கட்சிப் பிரமுகர். இப்படி இவர் அடிக்கும் கொள்ளையில் கட்சிக்காரர்களுக்குக் கிள்ளிக்கூட கொடுப்பது இல்லை என்கிற பொருமலும் தொகுதிக்குள் கேட்கிறது.

பணம்
பணம்

``கட்சிக்காக ஒரு பைசாவைக்கூடச் செலவிடுவதில்லை, ஆனால், விதவிதமான கார்களை வாங்கிக் குவிப்பதில் ஆர்வம்காட்டுகிறார். கட்சிக்கு வருவதற்கு முன்னர், அவர் இருந்த நிலையை நினைத்துப் பார்த்தால் நல்லது” என்று ‘வெடி’க்கிறார்கள் உடன்பிறப்புகள். அறிவாலயத்துக்கும் புகார் பட்டியல் அனுப்பப்பட்டிருக்கிறதாம்.

அச்சச்சோ... இந்தத் தகவலை கேள்விப்பட்டா `தீப்பொறி திருமுகம்’ ஆகிடுவாரே கட்சித் தலைவர்... அடப்போங்கப்பா!

`அடிமாட்டு’ மோசடி...
நீலகிரி பெண் அதிகாரி அடாவடி

நீலகிரியில் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இலவசமாகக் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 1,000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த வாரம் 600 பேருக்கு மாடுகள் வழங்கப்பட்டன. இதில் விநியோகிக்கப்பட்ட பெரும்பாலான மாடுகள் கறவைக்குத் தகுதியானவை அல்ல என்பதுதான் அதிரவைக்கும் தகவல். `அடிமாடுகள்’ எனப்படும்‌ இறைச்சிக்கு அனுப்பப்படும் வயது முதிர்ந்த மாடுகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதை வாங்கிய பயனாளிகள் என்ன செய்வது எனத் தெரியாமல், பாலும் கறக்க முடியாமல், மாட்டுக்குத் தீனியும் போட முடியாமல் திணறிவருகிறார்களாம். இவற்றில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துவிட்டதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

மாடுகள்
மாடுகள்

பழங்குடியினர் நலத்துறையில் மாவட்டப் பொறுப்பிலிருக்கும் பெண் அதிகாரி ஒருவர்தான், தன் கணவருடன் கைகோத்துக்கொண்டு இந்த மோசடியைச் செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தக் கொள்ளை போதாதென்று, பயனாளிகளிடம் 5,000 ரூபாய் தனியாக வேறு வசூலித்திருக்கிறாராம். இவற்றையெல்லாம் பயனாளிகள் சிலர் நேரில் சென்று அவரிடம் கேட்டபோது, ``நீ எங்க வேணாலும் போய்ப் புகார் பண்ணிக்கோ... என்னை ஒண்ணும் பண்ண முடியாது’’ என்று எகத்தாளமாக வெடித்தாராம் அந்தப் பெண் அதிகாரி.

ஊழல் `அடிமாடு’ சீக்கிரமே `பிடிமாடு’ ஆகட்டும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`அம்மா’ன்னா சும்மாவா?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் சக்திவேல் என்பவர் டிராவல்ஸ், சினிமா தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களைச் செய்துவருகிறார். கொரோனா சமயத்தில் தொடங்கி தற்போது வரை அவர் பெருந்துறைப் பேருந்து நிலையம் அருகே `சக்தி அம்மா உணவகம்’ என்கிற பெயரில் 10 ரூபாய்க்குக் குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கிவருகிறார். இதில் ஆதரவற்றோர் உட்பட ஏழை, எளியவர்கள் பலரும் வயிறார உணவு உண்டுவருகின்றனர். இந்தநிலையில்தான் பெருந்துறை எம்.எல்.ஏ-வான தோப்பு வெங்கடாசலம், `அம்மான்னா உங்களுக்கெல்லாம் சும்மா போயிடுச்சா... அம்மா பெயரில் நீ எப்படி உணவகம் நடத்தலாம்?’ என்று பொங்கி எழுந்து, தொழிலதிபருக்கு ஏகத்துக்கும் குடைச்சல் கொடுக்கிறாராம். நிலைமை கைமீறிச் சென்றதில், உணவகத்தின் சமையல் மாஸ்டரை எம்.எல்.ஏ-வின் ஆட்கள் தாக்கியிருக்கிறார்கள். போலீஸிலும் புகார் பதிவாகியிருக்கிறது. தொழிலதிபர் சக்திவேல் மீதும் எம்.எல்.ஏ தரப்பு புகார் அளித்து, வழக்கு பதிவு செய்யவைத்திருக்கிறது.

தோப்பு வெங்கடாசலம்
தோப்பு வெங்கடாசலம்

இதற்கிடையே, `சமீபத்தில், 30 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நான்கு பஸ் ரூட்டுகளை தோப்பு வெங்கடாசலம், தன் மனைவியின் பெயரில் பதிவுசெய்திருக்கிறார்’ என்ற ரகசியத் தகவலை கட்சி மேலிடத்தில் யாரோ பற்றவைத்துவிட... உளவுத்துறையை முடக்கிவிட்டிருக்கிறாராம் எடப்பாடி. தகவல் பட்டாசைப் பற்றவைத்தது தொழிலதிபர் தரப்பாக இருக்குமோ என்று உறுமுகிறதாம் தோப்பு தரப்பு.

தோப்புக்குத் தயாராகுமா ஆப்பு?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு