Election bannerElection banner
Published:Updated:

குமரி: `மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கையோடு கொண்டுவந்துவிட்டேன்!' - கலாய்த்த உதயநிதி

நாகர்கோவிலில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
நாகர்கோவிலில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

`மதுரையில் அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டியதைக் கையோடு கொண்டுவந்துவிட்டேன். ஒரே ஒரு கல்லுதான் இருந்தது. அதையும் தூக்கிட்டு வந்துட்டேன். இப்போது மருத்துவமனையைக் காணோம் எனத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம்' என்றார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டியிருக்கிறது. நாகர்கோவில் வந்த உதயநிதி ஸ்டாலின், வடசேரி அண்ணா சிலை முன்பு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ``நாகர்கோவில் சட்டசபைத் தொகுதியில் சுரேஷ்ராஜனுக்கு உதயசூரியன் சின்னத்திலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் விஜய் வசந்துக்கு கை சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தீர்கள். தமிழகத்தில் 40-க்கு 39 சீட்களில் ஜெயித்தோம். இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய இயக்கம் தி.மு.க என்ற பெருமையைத் தேடிக்கொடுத்தீர்கள். அதனால்தான் மோடிக்கு உங்கள் மேல் கோபம். திடீர்னு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். ஏ.டி.எம் வாசலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தார்கள். பழைய ஆயிரம் ரூபாய் நோட்டை நான் ஞாபகார்த்தமாக வைத்திருக்கிறேன். பண மதிப்பிழப்புக்கு மோடி சொன்ன காரணம் புதிய இந்தியா பிறக்கப்போகுது என்றார். நான் மூன்று வருஷமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். இந்தியாவை எங்கும் காணவில்லை. நீங்க எங்கேயாவது பார்த்தீங்களா... “ என்றார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து மத்திய அரசை விளாசிய உதயநிதி, ``பிரதமர் 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவதாகச் சொன்னார், 15 பைசாவையாவது போட்டாரா... தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி பங்குத்தொகை வரவில்லை. சென்னையில் வெள்ளம், ஒகி, கஜா புயல்களுக்கு இழப்பீடு கேட்டோம், தரவில்லை. 40,000 கோடி கேட்டதற்கு ஆயிரம் கோடி கொடுத்தார்கள். மதுரையில் அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டியதைக் கையோடு கொண்டுவந்துவிட்டேன். ஒரே ஒரு கல்லுதான் இருந்தது, அதையும் தூக்கிட்டு வந்துட்டேன். இப்போ மருத்துவமனையை காணோம்னு தேடிக்கிட்டிருக்காங்களாம். ஒரோ ஒரு கல் நாட்டிய இந்த மருத்துவமனைக்கு 72 கோடி ரூபாய் செலவு” என கலாய்த்தார்.

தொடர்ந்து, ``நம் உரிமையை விட்டுக்கொடுத்தாகிவிட்டது. கொஞ்சம் அசந்தால் தமிழ்நாட்டை விற்றுவிடுவார் மோடிகிட்ட. அதற்கு நாம் விட்டுவிடக் கூடாது. சுரேஷ்ராஜனைக் கடந்த முறை 21,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். போனமுறை நாம ஆட்சியில் இல்லை. இந்த முறை நம்ம ஆட்சிதான். எனவே இந்த முறை அதைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும். நான் என் தொகுதியில் பிரசாரத்துக்குப் போகலை. என் வெற்றியைவிட மற்ற தொகுதியிலுள்ள வேட்பாளர்கள் வெற்றிதான் முக்கியம் என நான் பிரசாரத்துக்குப் போய்கிட்டிருக்கிறேன்.

நாகர்கோவில் பிரசாரத்தில் கலந்துகொண்டவர்கள்
நாகர்கோவில் பிரசாரத்தில் கலந்துகொண்டவர்கள்

திமுக ஆட்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும். மாணவர்களின் எதிர்காலம் கல்வி. அந்த மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் கருணாநிதி. ஜெயலலிதாவும் நுழைவுத்தேர்வை அனுமதிக்கவில்லை. இந்த இரண்டு அடிமைகள் சேர்ந்து நீட் தேர்வை கொண்டுவந்து நுழைத்துவிட்டார்கள். அதற்கு முதல் தற்கொலை அரியலூர் அனிதா. மூணு வருஷத்தில் 14 குழந்தைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். நீட் தேர்வு ரத்து செய்வது, மாணவர்களின் கல்விக்கடன் ரத்துச்செய்யப்படும் என தலைவர் அறிவித்திருக்கிறார்.

தி.மு.க ஆட்சியில் காஸ் 480 ரூபாய் விலை, இப்போது 900-க்கு மேல் விலை அதிகரித்துவிட்டது. 7,000 கோடி விவசாயக் கடனை ரத்துசெய்வதாக கருணாநிதி சொன்னார். கருணாநிதி கோட்டைக்குப் போகும் முன் அந்தக் கடனை ரத்து செய்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது எனப் பல திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார் கலைஞர். இங்கு போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் டெப்பாசிட் வாங்கக் கூடாது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத ஆட்சி. ஜெயலலிதாவுக்கே பாதுகாப்பு இல்லை. சின்னப் பொண்ணுங்களை பொள்ளாச்சியில் வன்கொடுமை செய்தார்கள். முதல் குற்றவாளி அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில பட்டப்பகல்ல 13 பேரை சுட்டுக்கொன்றாங்க. நான் கலைஞரின் பேரனாக கேட்கிறேன் உதயசூரியன், கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு