Published:Updated:

`அடுத்த முதல்வரே எனக் கூறி காலி செய்யாதீர்கள்!' - இளைஞரணிக் கூட்டத்தில் எச்சரித்த உதயநிதி

udhayanithi stalin
udhayanithi stalin

நான் உதயநிதி ஸ்டாலினாகவே இருக்க விரும்புகிறேன். பட்டங்களைக் கொடுத்து என்னைக் காலி செய்துவிடாதீர்கள். நான் இந்தப் பதவியைப் பெற்ற நேரத்தில், என்னுடைய தாத்தா இல்லாதது வேதனையை அளிக்கிறது

இளைஞரணி கூட்டத்தில் தன் மீதான விமர்சனங்களுக்கெல்லாம் நேற்று பதில் அளித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ` என்னை கலைஞரோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அவருடைய உழைப்பில் நான் கால்தூசிக்குக் கூட சமமில்லாதவன். பட்டங்களைக் கொடுத்து என்னைக் காலி செய்துவிடாதீர்கள்' என உருக்கமாக விவரித்திருக்கிறார் உதயநிதி.

youth wing meet
youth wing meet

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் துணைச் செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வழக்கறிஞர் ஜோயல், தாயகம் கவி, ஆர்.டி.சேகர், அசன் முகமது ஜின்னா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 18 வயது 35 வயதுள்ளவர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பது, அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேநேரம், உதயநிதி ஸ்டாலினின் பேச்சை பெரிதும் வரவேற்றுள்ளனர் இளைஞரணி நிர்வாகிகள்.

`` மிகுந்த கட்டுக்கோப்புடன் கூட்டம் தொடங்கியது. காமெடியாகவும் அதேநேரம் தான் சொல்ல வந்த விஷயத்தை மிகத் தெளிவாகவும் உதயநிதி முன்வைத்தார். 30 லட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பது இலக்கு எனக் கூறினாலும், இதற்கு முன்பு சேர்க்கப்பட்ட உறுப்பினர்களைப் பற்றியும் சுட்டிக் காட்டினார். எந்தெந்த மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர் என்ற விவரத்தைக் கூறும்போது, ` சிலர் 70,000 பேரையும் சிலர் 80,000 பேரையும் வேறு சிலர் 60,000 உறுப்பினர்களையும் சேர்த்துள்ளனர். சில மாட்டங்களில் 100 உறுப்பினர்கள் வரையில் சேர்க்கப்பட்டுள்ளனர்' எனக் கூறிவிட்டு, பின்புறத்தில் வீடியோ ஒன்றை ஓடவிட்டனர். அதில், வாக்காளர் பட்டியல் தொடர்பான பேப்பர்கள் தென்பட்டன. `இந்த ஸ்டைலில் நீங்கள் எல்லாம் உறுப்பினர்களைச் சேர்க்கக் கூடாது' எனக் கூற, கூட்டம் அதிர்ந்தது. ஏனென்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களையே கட்சியின் உறுப்பினர்களாகச் சேர்த்திருந்தனர். அதைச் சுட்டிக் காட்டினார் உதயநிதி.

youth wing meet
youth wing meet

தொடர்ந்து பேசியவர், ` நீங்கள் சேர்க்கும் உறுப்பினர்கள் உண்மையானவர்களா எனக் கண்டறிய கால் சென்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் உண்மைத்தன்மையைத் தொலைபேசியில் பேசி உறுதிப்படுத்திய பிறகே, அவர்கள் இளைஞரணியில் சேர்க்கப்படுவார்கள். திராவிடக் கொள்கைளையும் கலைஞரின் மக்கள் நலப் பணிகளைப் பற்றியும் தெளிவாக அறிந்தவர்களையே உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். கலைஞர் இறந்தபோது வந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை நம்மோடு இணைத்துக் கொள்ள வேண்டும்' என்றவர்,

` என் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கேற்ப என்னுடைய பணிகளைத் திறம்பட செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்னை நீங்கள் மூன்றாம் கலைஞர், அடுத்த தளபதி என்றெல்லாம் புகழ்கிறீர்கள். தயவுசெய்து கலைஞரோடு என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அவருடைய கால்தூசிக்குக் கூட நான் வர மாட்டேன். என் அப்பாவோடும் ஒப்பிடாதீர்கள். அவர் அளவுக்கு நான் இன்னமும் உழைக்கவில்லை. நான் உதயநிதி ஸ்டாலினாகவே இருக்க விரும்புகிறேன். பட்டங்களைக் கொடுத்து என்னைக் காலி செய்துவிடாதீர்கள். நான் இந்தப் பதவியைப் பெற்ற நேரத்தில், என்னுடைய தாத்தா இல்லாதது வேதனையை அளிக்கிறது' எனக் கலங்கியவர்,

` நான் பதவிக்கு வந்ததில் வரவேற்புகளும் விமர்சனங்களும் வந்து சேர்ந்தன. அதிலும், எதிர்க்கட்சிக்காரர்களிடம் இருந்துதான் எனக்கு அதிகளவில் வாழ்த்துகள் கிடைத்தன. அது யார் என்று சொல்வது நாகரிகமாக இருக்காது. உங்களில் ஒருவனாக இருக்க ஆசைப்படுகிறேன். இளைஞரணிக்கு 30 லட்சம் பேரைக் கொண்டு வரக் கூடிய பணியைத் திறம்பட செய்யுங்கள். அப்போதுதான் கட்சித் தலைவரிடம் நான் பாராட்டு பெற முடியும். இதுவரையில் என்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் செல்ஃபி எடுத்திருக்கிறேன். வேறு யாருடனும் எடுத்தது கிடையாது. உங்களையெல்லாம் என்னுடைய குடும்பமாக நினைத்து செல்ஃபி எடுத்துக்கொள்கிறேன்' எனக் கூறி அனைவருடனும் செல்ஃபி எடுத்துக்கொண்டார்" என விவரித்தவர்,

Udhaynanithi
Udhaynanithi

`` ஒவ்வொரு விஷயத்தையும் மிகுந்த கூர்மையோடு கவனித்துத் திருத்தங்களைச் சொன்னார் உதயநிதி. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி குறித்துப் பேசியபோது, ` 9 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். அதையும் சேர்த்துச் சொல்லுங்கள் என்றார். இன்னொரு நிர்வாகி, ` அடுத்த முதல்வரே' எனக் கூற, ` என்னை குளோஸ் செய்யாமல் விடமாட்டீர்கள் போல இருக்கிறதே' என்றார் சிரித்தபடியே.

கூட்ட நிறைவில் பேசும்போது, ` இப்போது இளைஞரணியில் இருந்து 3 எம்.பி-க்கள் வந்திருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் உங்களில் பலருக்கும் சீட் வாங்கிக் கொடுக்க முயற்சி செய்வேன். என்னுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் நீங்கள் உழைத்தால் போதும்' என உற்சாகத்தோடு பேசி முடித்தார். இதுவரையில் தன் மீது சொல்லப்படும் விமர்சனங்களுக்கெல்லாம் எந்தவிதக் குறிப்பும் இல்லாமல் தெளிவாகப் பேசினார் உதயநிதி. இளைஞரணி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை அளித்த கூட்டமாகவும் இருந்தது" என்கின்றனர் இயல்பாக.

அடுத்த கட்டுரைக்கு