இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் ராணி தனது 96-வது வயதில் காலமானார். அதைத் தொடர்ந்து, எலிசபெத்தின் 76 வயது மகன் மூன்றாம் சார்லஸ் அதிகாரபூர்வ மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் சர்ச்சில் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை, பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் செய்திருந்தது. இந்த விழாவின் தலைவரான மூன்றாம் சார்லஸ் தங்க சாரட் குதிரை வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டார். அதைத் தொடர்ந்து, மன்னராக பதவியேற்பதற்கான உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு சார்லஸ், கையெழுத்திட்டார்.

மேலும், தங்க அங்கி அணிந்திருந்த சார்லஸ், அரியணையில் அமரவைக்கப்பட்டார். மேலும், மன்னருக்கான எட்வர்டு கிரீடம் சூட்டப்பட்டது. இந்த கிரீடம் 1661-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. மன்னர் சார்லஸின் மனைவி கமிலா பிரிட்டனின் ராணியாக முடிசூடினார் . ராணி கமிலாவுக்கு வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் சூட்டப்பட்டது. இந்த விழாவில் இளவரசர் வில்லியம்ஸ், அவரின் சகோதரி ஹாரி உள்ளிட்ட அரச குடும்பத்தினரும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட முக்கிய அரசியலாளர்களும் கலந்துகொண்டு மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.