Published:Updated:

உக்ரைன் - ரஷ்ய போர்: `எங்கள் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்!’ - தமிழக பெற்றோர்கள் கண்ணீர்

தமிழக பெற்றோர்கள் கண்ணீர்

``போர் வருவதற்குச் சில நாள்களுக்கு முன்பே `இந்தியாவுக்கு வந்துவிடு’ என்று அவனிடம் சொன்னோம். `போர் வராது, கவலைப்பட வேண்டாம்’ என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாகச் சொன்னான்.”

உக்ரைன் - ரஷ்ய போர்: `எங்கள் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்!’ - தமிழக பெற்றோர்கள் கண்ணீர்

``போர் வருவதற்குச் சில நாள்களுக்கு முன்பே `இந்தியாவுக்கு வந்துவிடு’ என்று அவனிடம் சொன்னோம். `போர் வராது, கவலைப்பட வேண்டாம்’ என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாகச் சொன்னான்.”

Published:Updated:
தமிழக பெற்றோர்கள் கண்ணீர்

``உக்ரைனில் படிக்கச் சென்றுள்ள எங்கள் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்" என்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெற்றோர்கள் பதறியபடி அரசிடம் முறையிட்டுவரும் சம்பவங்கள் வேதனையை ஏற்படுத்திவருகின்றன.

மாவட்ட அதிகாரியிடம் மனு கொடுக்கிறார்கள்
மாவட்ட அதிகாரியிடம் மனு கொடுக்கிறார்கள்

உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் அங்குள்ள மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அங்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகிவருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் வந்துவிட்ட நிலையில் பலர் அங்கு சிக்கிக்கொண்டு உறவினர்களைத் தொடர்புகொண்டு பதற்றத்துடன் பேசிவருகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உக்ரைனில் படிக்கும் தங்கள் மகனை மீட்டுத்தரவேண்டி, மதுரை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த சகஜெயந்திரன்-விஜயலட்சுமி தம்பதியிடம் பேசினோம். ``எங்கள் மகன் பங்கஜநாபன், ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை உக்ரைனில் படித்துவருகிறார். இதுதான் ஃபைனல் இயர்.

உக்ரைன் : தாக்குதல் நடைபெற்ற இடம்
உக்ரைன் : தாக்குதல் நடைபெற்ற இடம்

இப்போது அங்கு போர் நடப்பதாகக் கேள்விப்பட்டதிலிருந்து பதறிப்போனோம். போர் வருவதற்குச் சில நாள்களுக்கு முன்பே `இந்தியாவுக்கு வந்துவிடு’ என்று அவனிடம் சொன்னோம். `போர் வராது, கவலைப்பட வேண்டாம்’ என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாகச் சொன்னான்.

தற்போது அங்கு போர் தொடங்கிவிட்டதால், அவனைப்போல் கல்லூரியில் படிக்கும் பல மாணவர்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல முயன்றுவருகிறார்கள். ஆனால், எப்போது, எப்படி வருவார்கள் என்று தெரியவில்லை.

பங்கஜநாபன்
பங்கஜநாபன்

அவனிடம் போனில் பேசியபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பதுங்குகுழியில் தங்கியிருப்பதாகவும், `எங்களை எப்படியாவது மீட்க முயற்சி செய்யுங்கள்’ என்றும் சொன்னான். அதைக் கேட்டபோது எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

அதற்குப் பிறகு அவனுடன் போனில் பேச முடியவில்லை. அதனால்தான் மகனைக் காப்பாற்றித் தாருங்கள் என்று கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம். மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்" என்றார்கள்.

சஜூ குமார்
சஜூ குமார்

மதுரை வில்லாபுரம், வைகை வீதி ராஜீவ்குமார் - லீலா தம்பதியரின் மகன் சஜூ குமாரும் உக்ரைனில் எம்பிஏ படிக்கச் சென்று போர்ச்சூழலில் சிக்கியுள்ளார். அவரை மீட்டுத்தரவும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்கள். "எங்கள் மகன் ஊருக்கு வர விமான டிக்கெட் புக் செய்திருந்தான். போர் மூண்டுவிட்டதால் விமானம் ரத்தாகிவிட்டது. தற்போது உயிரை காப்பாற்றிக்கொள்ள நண்பர்களுடன் பதுங்குகுழியில் தங்கியிருக்கிறான்.

இந்திய தூதரகம் மூலம் நாடு திரும்ப ஏற்பாடு நடப்பதாகச் சொன்னான். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றனவா என்று தெரியவில்லை. அங்கு ஏடிம் எல்லாம் முடங்கிவிட்டதால் பணம் எடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாகக் கூறினான். அரசு எங்கள் மகனை மீட்டுத் தர வேண்டும்" என்றார்கள்.

இதேபோல் உக்ரைனில் எம்.பி.பி.எஸ் படிக்கச் சென்ற உசிலம்பட்டியைச் சேர்ந்த தங்கள் மகன்கள் கபில்நாத், தீபன் சக்கரவர்த்தி இருவரையும் மீட்டுத்தரும்படி அவர்களின் பெற்றோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மனு கொடுத்த பெற்றோர்கள்
மனு கொடுத்த பெற்றோர்கள்

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு சிக்கித் தவித்துவருகிறார்கள். அவர்களை விரைந்து மீட்டு வர மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் தமிழகம் திரும்பும் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் வெளியுறவுத்துறை, மாணவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு மீட்டுவர ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.