Published:Updated:

`வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க இதுதான் காரணம்!' - விளக்கும் டி.கே.ரங்கராஜன் எம்.பி

``மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொருள்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் 45 ஆண்டுகளுக்கு பின்பு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது” என சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

திறப்பு விழாவில் ரங்கராஜன் எம்.பி
திறப்பு விழாவில் ரங்கராஜன் எம்.பி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில், சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

டி.கே.ரங்கராஜன் எம்.பி
டி.கே.ரங்கராஜன் எம்.பி

இதில் டி.கே.ரங்கராஜன் எம்.பி கலந்துகொண்டு வகுப்பறைகளை திறந்துவைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``திருவள்ளுவர், வ.உ.சி, பாரதியார் போன்றவர்களையெல்லாம் அந்தக் காலகட்டத்தை வைத்துப் பார்க்காமல் வேறுவிதமாகப் பார்ப்பது சட்டவிரோதமானது என்பது எனது கருத்து.

நீட் தேர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.எம் கட்சி சார்பில் தொடர்ந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை வழங்க மறுத்துவிட்டது. நீட் தேர்வும் இன்று சட்டபூர்வமாக ஆகிவிட்டது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடாத காரணத்தினால் நம்மால் மூச்சுவிட முடிகிறது.

மரக்கன்று நடும் ரங்கராஜன்
மரக்கன்று நடும் ரங்கராஜன்

கையொப்பமிட்டிருந்தால் சிறு தொழில்கள், விவசாயம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, பொருள்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. படித்தவர்களுக்கான வேலையின்மை என்பதும் 45 ஆண்டுகளுக்குப் பின்பு அதிகமாக உயர்ந்துள்ளது ” என்றார்.