Published:Updated:

`யோகி ஆட்சியில் இருமடங்கு; திரிபுராவில் உச்சம்!’- வேலையின்மையும் சி.எம்.ஐ.இ புள்ளிவிவரமும்!

இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று `இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்’ புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

யோகி ஆதித்ய நாத்
யோகி ஆதித்ய நாத்

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என்கிற செய்திகளும், அதற்கு ஆதாரமான புள்ளிவிவரங்களும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. கடந்த பல மாதங்களாக இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இத்தகைய சூழலில், வேலையின்மைப் பிரச்னை மேலும் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் 2017-ல் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும் இந்தியப் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், பொருளாதார நிபுணர்கள் பலரும் குற்றம்சாட்டிவருகிறார்கள்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகிய நடவடிக்கைகளால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் உட்பட ஒட்டுமொத்த தொழில்துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் முக்கியக் குற்றச்சாட்டு. தொழில்துறை கடுமையமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் பலரும் பகிரங்கமாகவே குமுறலை வெளிப்படுத்தினர்.

தற்போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 5 சதவிகிதத்துக்கும் கீழே போய்விட்டது. இந்த நிலையில், தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்னைகளைச் சரிசெய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக எடுத்துவருகிறது. ஆனாலும், அது உடனடி பலனைத் தரவில்லை என்று பொருளாதார அறிஞர்கள் சொல்கிறார்கள்.

இந்தநிலையில், இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான சி.எம்.ஐ.இ-யின் அறிக்கையில், ``இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் 7.48 சதவிகிதமாக இருந்த வேலையின்மை, கடந்த டிசம்பரில் 7.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் நவம்பர் மாதம் வேலையின்மை விகிதம் 8.81 சதவிகிதமாக இருந்தது. அது, டிசம்பரில் 8.89 சதவிகிதமாக அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், ``கிராமப்புறங்களில் நவம்பர் மாதம் 6.82 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம், டிசம்பர் மாதத்தில் 7.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளது” என்றும் சி.எம்.ஐ.இ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. உ.பி-யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் வேலையின்மை விகிதம் இரண்டு மடங்களாக உயர்ந்துள்ளதாகவும் இந்தப் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. உ.பி-யில், 2018-ம் ஆண்டு 5.91 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம், 2019-ம் ஆண்டு 9.95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

திரிபுரா, ஹரியானா, இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேலையின்மை விகிதம் 20 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. ஹரியானாவில் வேலையின்மை விகிதம் 27.6 சதவிகிதமாகவும் இமாசலப் பிரதேசத்தில் 20.2 சதவிகிதமும் ஜார்க்கண்ட்டில் 17.7 சதவிகிதமும் ராஜஸ்தானில் 15.9 சதவிகிதமும் என வேலையின்மை அதிகரித்துள்ளது.

பீகாரில் 2018-ம் ஆண்டு 7.84 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் தற்போது, 11.47 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 3.9 சதவிகிதமும் மகாராஷ்டிராவில் 4.7 சதவிகிதமும் குஜராத்தில் 4.4 சதவிகிதமும் வேலையின்மை அதிகரித்துள்ளது.

பிப்லப் குமார் தேவ்
பிப்லப் குமார் தேவ்

அஸ்ஸாம், கர்நாடகா, தெலங்கானா, மேகாலயா, சிக்கியம் ஆகிய மாநிலங்களில் வேலையின்மை விகிதம் குறைவாக உள்ளது. டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் 16 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம், டிசம்பர் மாதத்தில் 11.2 சதவிகிதமாகக் குறைந்தது. இந்தியாவில் வேலையின்மை மிக அதிகமாக உள்ள மாநிலமாக திரிபுரா உள்ளது. அங்கு வேலையின்மை விகிதம் 28.6 சதவிகிதமாக உள்ளது.