Published:Updated:

நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா - பாஜக தீவிரம் காட்டுவதன் பின்னணி என்ன?!

நாடாளுமன்றம்

பொது சிவில் சட்டம் தொடர்பான முக்கிய மசோதா நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பாஜக தீவிரம் காட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா - பாஜக தீவிரம் காட்டுவதன் பின்னணி என்ன?!

பொது சிவில் சட்டம் தொடர்பான முக்கிய மசோதா நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பாஜக தீவிரம் காட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

Published:Updated:
நாடாளுமன்றம்

இந்தியாவைப் பொறுத்தவரை கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு ஒரே மாதிரியான சட்டத்தைப் பின்பற்றித்தான் தண்டனை வழங்கப்படுகிறது. இதுவே திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு உள்ளிட்ட விஷயங்கள் சிவில் சட்டங்களில் வருகின்றன. இதில், ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு சட்டங்களைப் பின்பற்றிவருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் பின்பற்றப்பட்டுவரும் பல்வேறு சிவில் சட்டங்களை நீக்கிவிட்டு, அனைத்துத் தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பாஜக கட்சியினர் உள்ளிட்டோர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

மறுபுறம் இந்தச் சட்டத்துக்கு கம்யூனிஸ்ட், திமுக, சமாஜ்வாடி, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில்தான் தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் குளிர்காலக் கூட்டத்தொடரில், பாஜக எம்.பி கிரோடி லால் மீனா, மாநிலங்களவையில் பொது சிவில் சட்டம் தொடர்பாகத் தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார். இந்த மசோதா, "நாடு முழுவதும் செயல்படுத்தும் வகையில் ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்" என வலியுறுத்துகிறது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் கொடி
கம்யூனிஸ்ட் கொடி

நாடாளுமன்றத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "தேசபக்தி என்பது உங்கள் உரிமை அல்ல. நாம் நாட்டைப் பேரழிவை நோக்கி, சிதைவை நோக்கி இட்டுச் செல்கிறோம். சிறுபான்மையினர் மோசமாகப் புண்படுகின்றனர். எனவே, இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படக் கூடாது. இது போன்ற விவகாரத்தை எதிர்கொள்ளவேண்டியிருப்பதால் இந்த நாள் ஒரு அவமானமான, துயரமான நாளாகும்" என்று கூறினார்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், "அரசியலமைப்பு வழிகாட்டுதல் கொள்கையின் கீழுள்ள ஒரு பிரச்னையை எழுப்புவதற்கு எம்.பி-க்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது. இந்த மசோதா குறித்து அவை விவாதிக்கட்டும். இந்த நேரத்தில் அரசுமீது அவதூறு எழுப்புவது, அரசை விமர்சிக்க முயல்வது தேவையற்றது" என்று தெரிவித்தார்.

வைகோ
வைகோ

பிறகு இந்தத் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்ய அனுமதிக்கலாமா என்று மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 23 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வரும் நாள்களில் இது விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்த்த லெனின், "சிவில் சட்டம் என்பது திருமணம், விவாகரத்து போன்ற விஷயங்களில் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. மதங்களை மீறித் திருமணம் செய்துகொள்வோருக்காகவும் பிரத்தியேகமான சிவில் சட்டம் இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மட்டும் எதிரானதாக இருக்காது. இந்துக்களுக்கும் எதிராக இருக்கிறது. தமிழகத்தில் மாமா மகளைத் திருமணம் செய்துகொள்ள முடியும். இதுவே வட இந்தியாவில், இது உறவு மீறிய திருமணம்.

லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மேலும் பழங்குடியின மக்களுக்குக் கூடுதல் பிரச்னையை ஏற்படுத்தும். இஸ்லாமியர்கள் நான்கு திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறது. நடைமுறையில் அவ்வாறு நடப்பது கிடையாது. நான்கு பேருக்கும் சமமான வாழ்க்கையைக் கொடுப்பதாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும். கேரளாவில் திருமணம் முடிந்ததும் பெண்கள்தான் வீட்டில் இருப்பார்கள். ஆண்தான் அவர்களின் வீட்டுக்குச் செல்ல வேண்டும். எப்படி இஸ்லாமியர்களுக்கு எதிராகக் குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்தார்களோ, அதேபோல இன்னொரு நெருக்கடிக்குத்தான் இந்தச் சட்டத்தைக் கொண்டுவருகிறார்கள்.

இதற்கு அரசின் சாசனத்தில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வாதமாக வைக்கிறார்கள். அதில், 14 வயதுக்குட்பட்ட அனைத்து இந்தியக் குடிமகனுக்கும் தரமான கல்வி இலவசமாக வழங்க வேண்டும். 100 ஆண்டுகள் பழைமையான கட்டடங்கள் இந்தியாவின் நாகரிகத்தைக் காட்டக்கூடிய ஒன்று. அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. அவர்களுக்குச் சாதகமான விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். இது பிரித்தாளும் சூழ்ச்சி" என்றார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "அனைவரும் சமம், அனைவருக்கும் சமநீதி, அனைவருக்கும் சம வாய்ப்பு என்று சொல்பவர்கள்தான் மதரீதியாக நாட்டு மக்களைப் பிளவுபடுத்தும் செயலில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அனைவரும் ஒன்று என்று சொன்னால், ஒரே சட்டம் இருக்கத்தானே செய்ய வேண்டும்... இதில் என்ன பாரபட்சம்... பொது சிவில் சட்டம் வேண்டும் என்று குரல் கொடுத்தவர் அம்பேத்கர். அவருடைய கருத்துக்கும், கொள்கைக்கும் எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.