உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க 47 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். இதனால் அந்த மாநிலத்தில் புதிய முதலமைச்சர் குறித்து குழப்பம் நீடித்துவந்தது. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் உத்தரகாண்ட்டில் உள்ள டேராடூனில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

முதல்வராக கட்சித் தலைமையால் தேர்வு செய்யப்பட்ட பிறகு புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``நாங்கள் வெளிப்படையான ஆட்சியை வழங்குவோம். நாங்கள் மக்களுக்காக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநில வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வைகொண்ட திட்டத்தை வழங்கியுள்ளார். அவரது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்றவாறு செயல்பட்டு, உத்தரகாண்ட் மாநிலத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவோம். பொது சிவில் சட்டம் முக்கியமானது. அதையும் அமல்படுத்துவோம்'' என்றார்.
