சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ``தற்போது அனைத்து மாநிலங்களுக்குமான ஜிஎஸ்டி வரியில், ரூபாய் 78 ஆயிரம் கோடியை மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது. இது விரைவில் அந்தந்த மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும். ஆனால் தமிழகத்துக்கு மட்டும் பணம் கொடுக்கவில்லை எனக் கூறுவது மிகவும் தவறான கருத்து. பாஜக கட்சி என்றால் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களுக்கான கட்சி, பணக்காரர்களுக்கான கட்சி, வட மாநிலக் கட்சி, இந்திக்காரர்கள் கட்சி, பாஜக-வில் ஏழைகளுக்கு இடமில்லை, இப்படிப் பல்வேறு வகையில் பாஜக பற்றி தமிழகத்தில் தவறான பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மத்திய அரசு தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்யவில்லை.

பிரதமர் மோடி தனது உரைகளில் தமிழ் மொழியை மேற்கோள்காட்டிப் பேசுகிறார். அவர்தான் தமிழ்மொழியை வளர்க்கிறார். கடந்த எட்டு ஆண்டுகளில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி பெற்றுள்ளோம். முன்னேற்றம் அடைந்த நாடுகளைவிட இந்தியா பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் தேசியக் கட்சிகள் கண்டிப்பாகத் தேவை. ஆனால் காங்கிரஸ் கட்சி தேவையில்லை. காங்கிரஸ் என்றால் கரப்ஷன். என்னுடைய தாய்மொழி தமிழ். என்னால் ஆங்கிலம் பேசும் அளவுக்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது'' என்றார்.
