தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறைக்கு மத்திய அரசு சமீபகாலமாக மிகக்குறைந்த அளவில் நிதி ஒதுக்கிவருவது ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் கார்த்திக், ``சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்காக மாநில அளவிலும், தேசிய அளவிலும் நலத்துறைகள் செயல்பட்டுவருகின்றன. மாநில அளவிலான சிறுபான்மை நலத்துறைக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி அளிப்பது வழக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சமீப வருடங்களாக மத்திய அரசு மாநில சிறுபான்மை நலத்துறைக்கு ஒதுக்கும் நிதி மிகக்குறைவாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதைச் சம்பந்தப்பட்ட துறை மூலம் தெரிந்துகொள்ள ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டிருந்தேன்.

கடந்த 2011-12 முதல் 2015-16 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ரூ.172,43,10,000 தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கிய நிலையில், கடைசி நான்கு வருடங்களான 2018-19 முதல் 2020-22 வரையில் ஆண்டுக்கு ரூ. 3,000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு வெறும் ரூ.12,000 மட்டுமே நிதி ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் மத்திய அரசு சிறுபான்மையினருக்கான நலத்திட்ட நிதி ஒதுக்கீட்டை அடியோடு புறக்கணித்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவ்வாறு நிதி ஒதுக்கீடுகளை தவிர்ப்பதால் மாநிலத்தில் பல வருடங்களாக சிறுபான்மையினர் மக்கள் நலனுக்காக பிரத்யேகமாக வழக்கத்தில் இருந்துவந்த கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுப் பணிகள் பாதியிலேயே முடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி வரை நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசிடம் கூடுதல் நிதியைப் பெற தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.