Published:Updated:

`அமித் ஷாவால்தான் எல்லாம் நடந்தது’- பா.ஜ.க ரகசியத்தைப் போட்டு உடைத்த எடியூரப்பா?

எடியூரப்பா
எடியூரப்பா

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் தொடர்பாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா பேசியுள்ள ஆடியோ வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அங்கு மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி - காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. ஆனால், அந்தக் கூட்டணி ஆட்சி வெறும் பத்து மாதங்கள் மட்டுமே நீடித்தது. ஆளும் கட்சியைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்டது.

குமாரசாமி
குமாரசாமி

கர்நாடகாவில் `ஆபரேஷன் கமாலா’ என்ற ஒன்றை நடத்தி அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் பணம் கொடுத்து பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டதாகக் காங்கிரஸ் அப்போதிலிருந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், காங்கிரஸின் குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்துள்ள பா.ஜ.க, `எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' எனக் கூறி வருகிறது.

இதற்கிடையில், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கொறடாவின் உத்தரவை மீறியதாகக் கூறி அவர்களைத் தகுதி நீக்கம் செய்து, இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு அவர்கள் எந்தத் தேர்தலிலும் போட்டியிடக்கூடாது என கர்நாடக முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். சபாநாயகரின் தகுதி நீக்க நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் காலி இடங்களில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் 5-ம் தேதி கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இந்த மாதம் 11-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அந்தத் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் சில நாள்களுக்கு முன்பு கர்நாடக பா.ஜ.க ஈடுபட்டிருந்தது.

அந்தக் கூட்டத்தில் தன் கட்சி நிர்வாகிகளிடம் எடியூரப்பா பேசிய விஷயங்கள் அடங்கிய சில நிமிட ஆடியோ தற்போது வெளியாகி தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், ``கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த பிறகு, அவர்களை பா.ஜ.க தேசியத் தலைவர் தன் கட்டுப்பாட்டின் கீழ் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைத்திருந்தார். ராஜினாமா செய்யவுள்ள எம்.எல்.ஏ-க்களைப் பற்றி அவர் முன்னதாகவே அறிந்திருந்தார்.

எடியூரப்பா
எடியூரப்பா

இந்த முடிவை நான் எடுக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். பா.ஜ.க தேசிய தலைவர்தான் இதில் தலையிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இது உங்களுக்குத் தெரியுமா? முன்னதாக ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்களின் நிலை எப்படி இருந்தது என உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் 2-3 வாரங்கள் மும்பையிலேயே தங்கியிருந்தனர். வெளியில் கூட வரமுடியாத நிலையிலிருந்தனர். அவர்களால் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க முடியவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

எடி 4.0... இப்போது என்ன செய்யக் காத்திருக்கிறார் எடியூரப்பா?!

தற்போது அவர்கள் அனைவரும் நம் எதிர்க்கட்சியினராக இருக்க வேண்டியவர்கள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக நமக்கு உதவியுள்ளனர். அவர்களால்தான் நாம் ஆளும் கட்சியாக மாறமுடிந்தது. தங்கள் பதவி பறிபோனதால் அவர்கள் அனைவரும் தற்போது உச்சநீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனர். இவை அனைத்தும் தெரிந்த நாம் அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். ஆனால், நீங்கள் இப்படி அவர்களை குறை கூறுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் மூன்று, நான்கு முறை முதல்வராக இருந்துள்ளேன். இந்த இடத்தை நான் முன்னரே பார்த்துவிட்டேன். ஆனால், தற்போது அவர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்த பிறகு நான் முதல்வர் இருக்கையில் அமர்ந்திருப்பதை ஒரு குற்றமாகக் கருதுகிறேன்” என்று அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளார்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

இது பற்றி என்.டி.டி.வி ஊடகம் எடியூரப்பாவிடம் கேட்டதற்கு, ``அந்த ஆடியோவின் உண்மைத் தன்மை பற்றி எனக்குத் தெரியவில்லை. அதைச் சோதனையிடவும் நான் விரும்பவில்லை. எங்கள் கட்சியின் நலனுக்காகவே பேசினேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடக காங்கிரஸாரை கொதிப்படைய வைத்துள்ளது.

எடியூரப்பாவின் ஆடியோ அடங்கிய பென் ட்ரைவை, அம்மாநில ஆளுநரிடம் வழங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர் காங்கிரஸார். மேலும், எடியூரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் அம்மாநில அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு