டெல்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சத்யேந்தர் ஜெயின், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து கடந்த செவ்வாயன்று, சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ரூ.2 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் 1.8 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``சிசோடியாவும் சத்யேந்தரும் ஊழல் செய்ய முடியுமா... தொடர்ந்து இப்படி விசாரணை செய்தால், எப்போது நாங்கள் வேலை செய்வோம்..." என மத்திய அரசை சாடியிருந்தார்.
அதைத்தொடர்ந்து தற்போது இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.

சத்யேந்தர் ஜெயினிடம் நடத்தப்பட்ட சோதனை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அனுராக் தாகூர், ``ஊழலுக்கு எதிரானவர் என்று சொல்லிக்கொள்பவரே தற்போது தனது ஊழல் அமைச்சரைப் பாதுகாத்து வருகிறார். கெஜ்ரிவால் இதுபோன்ற நாடகத்தை மட்டுமே நடத்துகிறார். அதுமட்டுமல்லாமல், தீவிர பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பவும், தன்னுடைய அரசாங்கத்தில் நிகழும் ஊழலை மறைக்கவுமே கெஜ்ரிவால் இப்படி செய்கிறார் என்பது அனைவருக்குமே தெரியும். கெஜ்ரிவால் ஜி, சத்யேந்தர் ஜெயின் இப்படி முக்கியமானவராக இருக்கவேண்டிய கட்டாயம் தான் உங்களுக்கு என்ன? நேற்றுவரை ஊழலுக்கு எதிராகச் செயல்பட்டேன் என்று நீங்கள் கூறியதையும், உங்கள் அமைச்சர்கள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையும் இந்த நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது" என கெஜ்ரிவாலைக் கடுமையாகச் சாடினார்.
