மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அரசாங்கத்தால் இதுவரையில் 1,254 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
மோடியின் ஆட்சி குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், `` `ஏழைகளின் நலனுக்காக சேமிக்கப்படும் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே அவர்களைச் சென்றடைகிறது' என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியிருந்தார்.

ஆனால், இன்று அதன் 100 சதவிகிதமும் வங்கி மூலம் நேரடியாக (Direct Bank Transfers) அதன் பயனாளிகளைச் சென்றடைகிறது. அதேபோல் முன்பு, 85 சதவிகித திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை என்பதாக ராஜீவ் காந்தி சொல்லியிருந்தார். ஆனால், இன்று 26 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. அதன் சேமிப்பு 2.25 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
எனவே நீங்கள் எண்ணிப்பாருங்கள், பெரும்பாலான சேமிப்பு முழுவதும் மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும். மேலும், 2014 முதல் 2022 வரையில், 1,254 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் மீட்கப்பட்டிருக்கிறது. அதோடு 4,300 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், நாடு குறுக்குவழி அரசியலை நோக்கிச் செல்லாமல், நல்லாட்சியை நோக்கி நகர வேண்டும் என்பதில் பிரதமர் மோடிக்குத் தெளிவான பார்வை இருக்கிறது. மோடி எப்போதுமே திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறார். அதனால்தான் ஒவ்வொரு மாதமும் முன்னேற்றக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன" என்று தெரிவித்தார்.