சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

ஆளுநருக்கு எதிராக பூச்சாண்டி காட்டுகிறார்கள்! - தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்பது கட்டுக்கதை...

எல்.முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
எல்.முருகன்

- சொல்கிறார் எல்.முருகன்

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை, தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் எனப் பரபரப்பாக வலம்வந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சரான பிறகு சைலன்ட் மோடுக்குப் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜூ.வி-க்காக, அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்...

“மத்திய இணை அமைச்சராக ‘டெல்லி வாழ்க்கை’ எப்படி இருக்கிறது?”

“சிறப்பாக இருக்கிறது. வரும் 2047-ல் இந்தியாவின் நூறாவது சுதந்திர தினத்தின்போது, ‘உலக நாடுகளுக்கு வழிகாட்டும் தேசமாக இந்தியா இருக்க வேண்டும்’ என்பதற்காக, பல செயல்திட்டங்களைத் தீட்டிவருகிறார் நம் பிரதமர் மோடி. அவரின் அமைச்சரவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக இருப்பது மிகப்பெரிய சந்தோஷம்.”

“தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனிநபர் ஆவர்த்தனம் செய்கிறார்... மகளிரணியினரைப் புறக்கணிக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் வருகின்றனவே?”

“அப்படி ஏதும் இல்லை. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை எல்லோருமே கூட்டாக இணைந்துதான் செயல்படுகிறோம். மூத்தவர்களுடன் ஆலோசித்துதான் முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. இது போன்ற விமர்சனங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை.”

“நீங்கள் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் காலத்திலேயே, தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படை துப்பாக்கி்ச்சூடு நடத்தியிருக்கிறதே?”

“அது குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தவறுதலாகத் தாக்குதல் நடத்தியதாக இந்தியக் கடற்படையினரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், `மீனவர்கள் இந்தியில் பேசாததால்தான் சுட்டார்கள்...’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பரப்பிவருவதெல்லாம் அப்பட்டமான பொய்.”

ஆளுநருக்கு எதிராக பூச்சாண்டி காட்டுகிறார்கள்! - தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்பது கட்டுக்கதை...

“ ‘இந்தித் திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு மொழிப் போர்’ என்ற குரல் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கிறதே?”

“இதை ஒரு கேலிக்கூத்தாகத்தான் பார்க்கிறேன். தி.மு.க 1967-ல் இந்தியைவைத்து ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு இருந்த காலம் வேறு... இன்றைய காலகட்டம் வேறு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில், யார்மீதும் எந்த மொழியையும் திணித்துவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால் தி.மு.க-வைவிட மொழிமீது பற்றுள்ளவர்கள் பா.ஜ.க-வினர்.”

“ஆனால், ‘தமிழுக்கு பா.ஜ.க முக்கியத்துவம் கொடுப்பதுபோல் நடிக்கிறது. பா.ஜ.க இந்த விஷயத்தில் செய்வதெல்லாம் கபட நாடகம்’ என்று விமர்சிக்கிறார்களே...”

“கடந்த மாதம் குஜராத்தில் சட்ட அமைச்சர்கள், சட்டத்துறைச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில், ‘அனைத்துத் தீர்ப்புகளையும் அந்தந்தத் தாய் மொழியில் எழுதுங்கள், வழக்காடுங்கள்’ என்று மத்திய அரசு வலியுறுத்தியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறோமே... ஆனால், இப்படி ஏதாவது பொய்ப் புகார் கூறி மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். அது இனி எடுபடாது.”

“ முன்பு, ‘குஜராத்போல் தமிழ்நாட்டையும் மதுவிலக்கு மாநிலமாக்க வேண்டும்’ என்றீர்கள். அதற்கான முன்னெடுப்புகள் ஏதும் எடுத்திருக்கிறீர்களா?”

“தமிழ்நாட்டில் மதுவிலக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் ஆலோசனைதான் சொல்ல முடியும். தி.மு.க அரசுதான் தன் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைக்க முன்வர வேண்டும். உண்மையான தமிழனாக இருந்தால், தமிழ் மக்கள்மீது அக்கறை உள்ளவர்களாக இருந்தால் சொன்னதைச் செய்வதற்கு முன்வாருங்கள் என்பதே தி.மு.க-வுக்கு என் வேண்டுகோள்.”

“வளர்ந்த மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் முக்கிய இடம் வகிப்பதாக மத்திய அரசின் பல்வேறு ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. ஆனால், திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டைப் பின்னுக்கு இழுத்துவிட்டதாக பா.ஜ.க சொல்வது ஏன்?”

“சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ்நாடு வளம் பொருந்திய நாடாகத்தான் இருந்திருக்கிறது. ஏதோ இவர்கள் வந்த பிறகுதான் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதை. மத்திய அரசுகள் கொண்டுவந்த திட்டங்களைப் பயன்படுத்தி, ஒவ்வொருவரின் கடின உழைப்பாலும், தனிநபர்களின் பங்களிப்பாலும் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. இதன் பலனையெல்லாம் இவர்களது திராவிட மாடல் கணக்கில் எழுத முடியாது. இது ஆன்மிக மாடல், ஆன்மிக பூமி. அதைத்தான் ஆளுநரும் சுட்டிக்காட்டி வருகிறார்.”

“ஆனால், ‘ஆளுநரின் கருத்துகள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன’ என்று விமர்சிக்கிறார்களே?”

“ஆளுநர் கருத்து சொல்லக் கூடாது என்று சட்டத்தில் ஏதும் சொல்லப்பட்டிருக்கிறதா... அப்படி அவர் சொல்லும் கருத்துகள் எப்படி ஆர்.எஸ்.எஸ் அல்லது ஓர் இயக்கத்தின் கருத்தாக இருக்க முடியும்... அவர், அவருடைய கருத்துகளை வெளிப்படையாகப் பேசுகிறார், அவ்வளவுதான்.”

“ஆளுநரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க கூட்டணிக் கட்சியினர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதும் அளவுக்குப் பிரச்னை முற்றியிருக்கிறதே?”

“இது சும்மா பூச்சாண்டி காட்ட, வேலையற்றவர்கள் செய்யும் வேலை. இதையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். சமூகநீதி பேசும் இவர்கள் ஆட்சியில்தானே பட்டியலின மக்களுக்குத் தனிச் சுடுகாடு இருக்கிறது. ஏன் இந்த வேறுபாடு... நான் தொடர்ந்து ‘சமத்துவச் சுடுகாடு கொண்டுவாருங்கள்...’ என்று சொல்லிவருகிறேன். அதுபோன்று ஒரு சமூகச் சீர்திருத்ததைக் கொண்டு வராமல் ஆளுநர் அரசியல் பேசுகிறார், இந்தித் திணிப்பு நடக்கிறது என்று ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?”

“இந்த ‘சாதி, மதக் கட்டமைப்புகளை உருவாக்கியதே சனாதனம்தான்’ என்கிற விமர்சனமும் இருக்கத்தானே செய்கிறது?”

“இல்லை. இதையெல்லாம் உருவாக்கியது ஆங்கிலேயர்களும், அவர்களுக்கு முன்பு இந்தியாவை ஆண்டவர்களும்தான். அதற்கு முந்தைய நம் அரசர்கள் ஆட்சியில் எங்கே தீண்டாமை இருந்தது... இந்தியாவின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது!”