மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளைச் சந்தித்தல், காரியகர்த்தாக்கள் ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மக்களின் முன்னேற்றத்துக்காக வகுக்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்துப் பேசினார். மேலும் கட்சிக்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, அடுத்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக-வை பலப்படுத்தி வெற்றிபெறச் செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.

முன்னதாக, விருதுநகர் மாவட்டம், சின்னமூப்பன்பட்டியில் வாழும் பழங்குடியினச் சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை அமைச்சர் எல்.முருகன் தொடங்கிவைத்துப் பேசினார். கூட்டத்தில், காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் தாய் மொழியான தெலுங்கில் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்போது அவர் பேசுகையில், "எனக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் பேச வாய்ப்பளித்தது மிக்க மகிழ்ச்சி. நாம் படும் கஷ்டத்தை நம் பிள்ளைகள் படக் கூடாது என்பதற்காக இங்கு உழைக்கிறோம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் மக்களின் முன்னேற்றத்துக்காகவே பாடுபடுகிறார். மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு உதவுவது அவரின் கனவாக உள்ளது.
அவரின் அந்தக் கனவை நோக்கித்தான் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். பிரதமரைப் பொறுத்தவரை சிறியவர்கள், பெரியவர்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரின் முன்னேற்றத்துக்கான தேவைகளை அறிந்து அதைச் செயலாக்கிவருகிறார். நிச்சயம் உங்களின் தேவைகளை அறிந்து அதை நிவர்த்தி செய்ய அரசு தயாராக உள்ளது" என தெலுங்கு மொழியில் பேசினார்.