மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங், ``மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்த சட்டம் விரைவில் கொண்டுவரப்படும்" எனக் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பரோண்டா கிராமத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, நேற்று ராய்ப்பூர் வந்திருக்கிறார் மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங். அப்போது பத்திரிகையாளர்கள், மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் பற்றி பிரஹலாத் சிங்கிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரஹலாத் சிங், ``விரைவில் இந்தச் சட்டம் கொண்டுவரப்படும். இது போன்ற வலுவான, பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதால் இதுவும் நடக்கும்" என்று கூறினார்.

முன்னதாக கரிபா கல்யாண் சம்மேளன நிகழ்ச்சியில், மோடியின் எட்டு ஆண்டுக்கால ஆட்சி குறித்துப் பேசிய பிரஹலாத் சிங், ``சேவை, நல்ல நிர்வாகம் மற்றும் ஏழைகளின் நலனே மத்திய அரசின் அடிப்படை மந்திரம்" எனக் கூறியிருந்தார்.
உலக மக்கள்தொகை கணக்குப் பட்டியலில், 138 கோடி மக்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் 140 கோடி மக்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், 2024-ம் ஆண்டு வாக்கில் உலக மக்கள்தொகையில் இந்தியா, சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
