Published:Updated:

புல்வாமா தாக்குதல்: ``காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்!" - பிரகாஷ் ஜவடேகர்

பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்

``காங்கிரஸும் அதன் தலைவர்களும் மோடி மீதான வெறுப்பில் இந்தியாவுக்கு எதிரானவர்களாக மாறிவிட்டனர் என்பதை இது காட்டுகிறது" என்று பா.ஜ.க குற்றம்சாட்டியது!

கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் 14-ம் தேதி, ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து பிப்ரவரி 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. இதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில் இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதியின் எல்லையோர கிராமத்தில் விழுந்தது. அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைதுசெய்தது. அபிநந்தன் வர்தமானை விடுவிக்குமாறு பல உலக நாடுகள் அழுத்தம் கொடுத்த நிலையில், மார்ச் 1-ம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார்.

அபிநந்தன்
அபிநந்தன்

இதையடுத்து, சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML-N) தலைவர் அயாஸ் சாதிக், 2019-ம் ஆண்டு இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டபோது, பாகிஸ்தானில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ``ஒருவேளை பாகிஸ்தான், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை விடுவிக்காவிட்டால் இன்று இரவு 9 மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும்’’ என்று கூறினார். அப்போது, பாகிஸ்தான் ராணுவ தலைமை ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் கால்கள் நடுங்கின என்று நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சௌத்ரி, ``நாம் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் நுழைந்து தாக்கியிருக்கிறோம். புல்வாமாவில் நமது வெற்றி என்பது பிரதமர் இம்ரான் கானின் தலைமையிலான பாகிஸ்தான் அரசின் வெற்றி. நாம் அனைவரும் இந்த வெற்றியில் பங்குபெற்றவர்கள். புல்வாமாவில் நடந்ததை நாம் பெருமையாகக்கொள்ள வேண்டும்" என்றார்.

இந்தியாவை நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிவைக்கும் பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ஊக்குவித்து ஆதரிக்கிறது என்று நீண்டகாலமாக கருத்து இருந்துவந்ததை, பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புக்கொண்டது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

இதற்கிடையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது போன்ற தாக்குதல்களால் பா.ஜ.க அரசுக்கு ஆதாயம் இருப்பதாக விமர்சித்தார். இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத், ``பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது பாகிஸ்தான் எதிரணியான இம்ரான் கானுக்கும் இடையே `மேட்ச் ஃபிக்ஸிங்’ (Match Fixing) இருப்பதால் மட்டுமே புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது'' என்று விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சியினரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த, பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ``உலகின் பயங்கரவாதம் அத்தனையும் அதன் வேர்களை பாகிஸ்தானில் கொண்டிருக்கிறதுது. ஆனால் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவரது கூட்டாளிகளும் புல்வாமா தாக்குதலில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இம்ரான் கானுக்கும் இடையே கூட்டு இருப்பதாகக் கூறியது தவறு. காங்கிரஸும் அதன் தலைவர்களும் மோடி மீதான வெறுப்பில், இந்தியாவுக்கு எதிரானவர்களாக மாறிவிட்டனர் என்பதை இது காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சௌத்ரி நாடாளுமன்றத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து ஒப்புதல் தெரிவித்திருக்கும் நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``புல்வாமா தாக்குதலுக்குப் பின்னே பாகிஸ்தான் இருப்பதாக நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அமைச்சர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுவரை காங்கிரஸ், இதர கட்சிகள் அனைத்தும் மோடி அரசின் சதி என்று பேசிவந்த நிலையில், அவர்கள் கட்டாயம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு