Published:Updated:

`பிரதமர் உட்பட அனைத்து எம்.பி-களுக்கும் 30% ஊதியம் குறைப்பு!’ - மத்திய அமைச்சரவை முடிவு

மத்திய அமைச்சர் ஜவடேகர்
மத்திய அமைச்சர் ஜவடேகர்

எம்.பி களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியும் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தப்படுகிறது. இதன்மூலம் மிச்சமாகும் ரூ.7,900 கோடி மத்திய தொகுப்பு நிதிக்குச் செல்லும்.

ஒட்டு மொத்த நாடும் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் செயலாற்றி வருகிறது. தங்களின் வருமானத்தை இழந்தும் நாட்டுகள் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால் இந்தியப் பொருளாதாரத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதுதான் நிலையாக உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

பல தனியார் நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவிகளை அரசுக்கு அளித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் உட்பட அனைத்து எம்.பிகளுக்கும் ஓராண்டு ஊதியம் 30% குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்தார். இன்று வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், ``கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றிணைந்து போராடி வருகிறோம். இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மத்திய அமைச்சர் ஜவடேகர்
மத்திய அமைச்சர் ஜவடேகர்

அதன்படி நாட்டில் தற்போது நிலவும் சூழலில் இந்த ஆண்டு ஏப்ரல் 1 -ம் தேதி தொடங்கி அடுத்த ஓராண்டுக்கு மத்திய அமைச்சர்கள், பிரதமர் உட்பட அனைத்து எம்.பிகளின் ஊதியம் 30% குறைக்கப்படுகிறது. அமைச்சரவையின் இந்த முடிவை அடுத்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, அனைத்து மாநில ஆளுநர்கள் என அவர்களும் தாங்களாகவே முன்வந்து தங்களது சம்பளத்தை 30% குறைத்துள்ளனர்” என்றார்.

`21 நாள்களுக்குப் பிறகு வேண்டாம்; இப்போதே சொல்லிவிடுங்கள்!’ -பிரதமரிடம் வலியுறுத்தும் திருமாவளவன்

மேலும் எம்.பிகளுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியும் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் மிச்சமாகும் ரூ.7,900 கோடி மத்திய தொகுப்பு நிதிக்குச் செல்லும் எனவும் ஜவடேகர் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில் நாட்டில் உள்ள லாக் டவுன் உத்தரவு நீக்கப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

`தொற்று கண்டறியப்படாத மாவட்டங்கள்..!’ -ஏப்ரல் 14-க்குப் பிறகு லாக்-டவுண் உத்தரவு தளர்த்தப்படுமா?

அப்போது பேசிய அமைச்சர் ஜவடேகர், ``ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் விஷயங்கள் ஆராய்ந்து வருகிறோம். தேசத்தின் நலன் கொண்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தகுந்த நேரத்தில் அது குறித்து அறிவிக்கப்படும். தகுதி வாய்ந்த குழு, இது தொடர்பாக சிறப்பாக ஆய்வு செய்து கண்காணித்து வருகிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு