Published:Updated:

`காவலரை மிரட்டி துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்!’ - பற்றி எரியும் டெல்லி போராட்டக்களம்

துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்
துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்

அமைதியான முறையில் சனிக்கிழமை அன்று இந்தப் பகுதிகளில் பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தைத் தொடர்ந்து நேற்று நடந்தப் பேரணிகளில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

குடியிரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஷஹீன் பாக் பகுதியில் பல நாள்களாகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மஜ்பூர், ஜாஃப்ராபாத், யமுனா விஹார் போன்ற பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் இறங்கினர். தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.

போராட்டங்களுக்கு மத்தியில், ஜாஃப்ராபாத் பகுதியில் வன்முறைகளில் வீசப்பட்ட கற்கள் நிறைந்த சாலையின் நடுவில் நின்றபடி சிகப்பு சட்டையணிந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் காவல்துறை அதிகாரியை நோக்கி கையை உயர்த்தி பின்னோக்கிச் செல்லுமாறு மிரட்டுகிறார். பின்னர், கைகளை உயர்த்தி வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த கட்டடத்திலிருந்து ஒருவர் மொபைல் வழியாகப் படம்பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அமைதியான முறையில் சனிக்கிழமை அன்று இந்தப் பகுதிகளில் பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தைத் தொடர்ந்து நேற்று நடந்த பேரணிகளில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. ஜாஃப்ராபாத் பகுதியிலுள்ள வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இந்த வன்முறைகளில் காவலர் ஒருவர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து மஜ்பூர், ஜாஃப்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அகமதாபாத்திலிருந்து டெல்லிக்கு வந்துள்ள நிலையில் அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில், மர்ம நபர்கள் தொடர்ந்து துப்பாக்கியுடன் வந்து அச்சுறுத்திச் செல்லும் சம்பவம் சமூகத்தில் அதிகமான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

`நள்ளிரவில் வந்த மர்மநபர்கள்; போராட்டக் களத்தில் பதற்றம்!’- ஜாமியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
அடுத்த கட்டுரைக்கு