Published:Updated:

ரகசியமாக காஷ்மீர் பற்றி விவாதிக்க வேண்டும் - ஐ.நா-வில் முறையிட்ட சீனா!

ஜெனிஃபர்.ம.ஆ

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீர் பிரிப்பு விவகாரம் பற்றிய விவாதத்தை நடத்துவதாக அறிவித்திருக்கிறது.

Jammu Kashmir Border
Jammu Kashmir Border

இந்திய அரசு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து கொடுத்த சட்டப்பிரிவு 370-ஐச் செயலிழக்கச்செய்தும், பிரிவு 35 A வை நீக்கியும் எடுத்த முடிவு, இந்தியாவைத் தாண்டி, சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. பாகிஸ்தான், சீனா ஆகிய அண்டை நாடுகள் நேரடியாக இதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில், இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்குப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

Kashmir
Kashmir
AP

ஐ.நா. சபையில், சிம்லா ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி, இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகள் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையிட முடியாது எனவும், இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாடுகளோடு இந்த விஷயத்தை அணுக வேண்டும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போலந்து அரசு சுற்றுமுறையில் தற்போது தலைமை வகிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீர் பிரிப்பு விவகாரம் பற்றிய விவாதத்தை, இந்திய நேரப்படி இன்று இரவு நடத்துவதாக அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டுடன் நெருக்கமாக இருக்கும் சீனா அரசு சார்பில், முன்கூட்டியே இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையிடப்பட்டது. இந்த விஷயத்தை, 'Closed Door Meeting' எனப்படும் ரகசிய விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது சீனா. அதை ஏற்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதற்கு ஒப்புதலளித்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் குறித்தான இந்த முடிவு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்.
- இந்தியா

இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் முகமது குரேஷி, "சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் காஷ்மீர், இரு நாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும் ஒரு துண்டுநிலம் மட்டுமல்ல... மாறாக, அது மனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து இந்தியா பேசுகையில், ஜம்மு காஷ்மீர் குறித்தான இந்த முடிவு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், பாகிஸ்தான் உண்மை நிலவரத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் சர்வேதேச நாடுகளுக்குத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு
இந்திய சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலை அணுகுவதற்கு முன், பாகிஸ்தான் தரப்பில் சீனா சென்று பேச்சுவார்த்தை நடத்திய அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர், சீனாவிடம் ஆதரவு கோரினார். அதே சமயம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து சீனாவிற்கு அளித்த விளக்கத்தில், "இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்ட முடிவு. இதனால் இந்தியாவின் சர்வேதச எல்லைகளும், சீனாவுடன் காஷ்மீர் பகுதியில் இருக்கும் LOC (Line of actual control) இந்தியா - சீனா கட்டுப்பாடு எல்லையில் எந்த மாற்றமும் நேராது. இதில் இந்தியாவிற்கு எல்லை விரிவாக்கும் நோக்கம் எதுவுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் என்று ஆசிய கண்டத்தின் பெரும் சக்திவாய்ந்த நாடுகள் சம்பந்தப்பட்டிருப்பதால், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெறும் இந்தக் கூட்டம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.