Published:Updated:

`மெர்சல்’ முதல் திருவள்ளுவர் வரை... தமிழக அரசுக்குத் தொடர்பில்லாத `தமிழக' சர்ச்சைகள்!

மத்திய அரசு அமல்படுத்த விரும்பும் சர்ச்சைக்குரிய திட்டங்களை அமல்படுத்திய போதும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், அதுதொடர்பாக இல்லாமல், அவரது அரசுக்குத் தொடர்பில்லாத சர்ச்சைகளே அதிகம் நிகழ்ந்து வருகின்றன. அவற்றின் தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் இல்லாத அளவுக்கு, அரசுக்குத் தொடர்பில்லாத சர்ச்சைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலா முதல்வராகப் பதவியேற்கத் திட்டமிட, கட்சியை விட்டு வெளியேறி `தர்மயுத்தம்' தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி, சசிகலா சிறைத்தண்டனை பெற்றார். சிறை செல்வதற்கு முன், கூவத்தூரில் நடந்த கட்சிக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க, `சின்னம்மா!' என்றபடி, சசிகலா கால்களில் விழுந்தார் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் காவல்துறையின் அராஜகம், சசிகலாவின் `முதலமைச்சர்' ஃபோட்டோஷூட், ஓ.பி.எஸ் நடத்திய `தர்மயுத்தம்', கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் எனத் தொடர் சர்ச்சைகளின் வரிசையில் நிகழ்ந்தது எடப்பாடி பழனிசாமியின் பதவியேற்பு. மத்திய அரசு அமல்படுத்த விரும்பும் சர்ச்சைக்குரிய திட்டங்களை அமல்படுத்திய போதும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், அவை தொடர்பாக இல்லாமல் அவரது அரசுக்குத் தொடர்பில்லாத சர்ச்சைகளே அதிகம் நிகழ்ந்து வருகின்றன. அவற்றின் தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

2
மெர்சல்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே! - `மெர்சல்' Vs ஹெச். ராஜா

`தெறி' படத்திற்குப் பிறகு, மீண்டும் அட்லீயுடன் இணைந்து `மெர்சல்' படத்தில் நடித்தார் நடிகர் விஜய். அதுவரை, `இளைய தளபதி' என்று அழைக்கப்பட்டவர், 'மெர்சல்' படத்தில் முதல்முறையாகத் 'தளபதி' என்ற அடைமொழியோடு களமிறங்கினார். தனியார் மருத்துவமனைகள் மீதான விமர்சனத்தைப் பேசிய `மெர்சல்', மோடி அரசின் ஜி.எஸ்.டி திட்டத்தை நேரடியாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.

தமிழ்நாடு பி.ஜே.பியின் அன்றைய தலைவர் தமிழிசை `மெர்சல்' பட வசனத்தைக் கண்டித்துப் பேசினார். அவருக்கு ஒருபடி மேல் சென்ற, தமிழ்நாடு பி.ஜே.பி.யின் `தளபதி' ஹெச்.ராஜா ட்விட்டரில் களமிறங்கினார். ``ஜோசப் விஜய் கிறித்துவர் என்பதால் மோடிக்கு எதிராகச் செயல்படுகிறார்" எனக் கூறி, நடிகர் விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டார். ஹெச்.ராஜாவுக்கு எதிராக எதிர்வினையாற்றிய விஜய் ரசிகர்கள், #MersalVsModi என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்தனர். 'மெர்சல்' படத்தை ஆன்லைனில் பார்த்ததாக, நேர்காணல் ஒன்றில் ஹெச்.ராஜா கூற, தயாரிப்பாளர் சங்கம் சார்பில், நடிகர் விஷால் கொந்தளித்தார். இறுதியாக, 'மெர்சல்' வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கடிதத்தில், 'ஜோசப் விஜய்' என்ற தனது பெயருடன் வெளியிட்டிருந்தார். அதோடு சர்ச்சை ஓய்ந்தது.

அரசியல் அஸ்திவாரமா... `No' அவசரமா! - 'பிகில்' விழாவுக்கு விஜய் மூட் என்ன?! #BigilAudioLaunch
ஜோசப் விஜய் கடிதம்!

தற்போது வெளியான 'பிகில்' படத்தில், மைக்கேல் என்ற கிறித்துவ பெயருடன், சிலுவை அணிந்து நடித்தார் நடிகர் விஜய். ஹெச்.ராஜா தரப்பில் எந்தச் சத்தமும் எழவில்லை!

3
ஹெச்.ராஜாவின் `அட்மின்' செய்த பதிவு!

`எல்லாம் அட்மின் செயல்!' - பெரியார் Vs ஹெச்.ராஜா

2018-ம் ஆண்டு, திரிபுரா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றி பெற்றது. தேர்தல் வெற்றிபெற்று, 48 மணி நேரங்களுக்குள் திரிபுராவில் இருந்த ரஷ்யப் புரட்சியாளர் லெனின் சிலையை உடைத்தனர் பி.ஜே.பியினர். நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்ப, பி.ஜே.பி.யினர் கொண்டாடிக் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் பி.ஜே.பி பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், லெனின் சிலை உடைக்கப்பட்டது போல பெரியார் சிலை உடைக்கப்படும் எனப் பதிவுசெய்திருந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டு, ஹெச்.ராஜாவை எதிர்க்க, உடனடியாக அந்தப் பதிவு நீக்கப்பட்டது. இந்தச் சர்ச்சை முடிவதற்கு முன்பே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு, ஹெச்.ராஜா தன் ஃபேஸ்புக் பதிவைத் தான் போடவில்லை எனவும், தனது அட்மின் தவறுதலாகப் பதிவேற்றிவிட்டதாகவும் கூறி வருத்தம் தெரிவித்தார். மேலும், அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பில் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.

4
எஸ்.வி.சேகர்

`சைபர் சைக்கோக்கள் ஜாக்கிரதை!' - ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் Vs பெண்கள்

ஆளுநர் மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பேராசிரியை நிர்மலாதேவி குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதைப் புறந்தள்ளிய ஆளுநர், கேள்வியெழுப்பிய பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டிவிட்டுச் சென்றார். அந்தப் பெண் பத்திரிகையாளர் அதைப் பற்றிச் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் சர்ச்சை எழுந்தது. அவருக்கு ஆதரவாகத் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டார். கனிமொழியின் பதிவை விமர்சித்த ஹெச்.ராஜா, அவரை இழிவாக எழுதினார். இது பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இதே பின்னணியில் பி.ஜே.பியின் மற்றொரு பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை இழிவாகச் சித்திரித்துப் பதிவிட்டார். எஸ்.வி.சேகர் மீது பெண் பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவரது வீடு முற்றுகையிடப்பட்டு, கற்கள் வீசப்பட்டன. அப்போதைய தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகிய இருவரையும் கண்டித்தார்.

ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகிய இருவரும் சைபர் சைக்கோக்கள். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டுக்கே கேடு. இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
அமைச்சர் ஜெயக்குமார்
ஹெச்.ராஜா
Vikatan

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகிய இருவரும் சைபர் சைக்கோக்கள். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டுக்கே கேடு. இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று கூறினார். எனினும், அவர் சொன்னதுபோல, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தலைமறைவாக இருக்கிறார் என அரசுத் தரப்பில் கூறப்பட்ட எஸ்.வி.சேகர் சுதந்திரமாக உலவிக் கொண்டிருந்தார். அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

5
தி.மு.க நிர்வாகிகள் தாக்குதல்! - பிரியாணி கடை ஓனரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்

பிரியாணிக் கடை முதல் பணமோசடி வரை! - லோக்கல் தி.மு.க அட்ராசிட்டி Vs பொதுமக்கள்

எடப்பாடி பழனிசாமி அரசின் சட்ட ஒழுங்குப் பிரச்னையாகவும் பிரசாரத்தில் தி.மு.கவை விமர்சிப்பதற்காகவும் லோக்கல் தி.மு.க பிரமுகர்கள் செய்யும் பிரச்னைகள் மாறியுள்ளன. அரசியல் ரீதியாக இது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. 2018-ம் ஆண்டு, சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை ஒன்றில், இலவசமாகப் பிரியாணி கேட்டு தகராறு செய்தனர் லோக்கல் தி.மு.க பிரமுகர்கள் யுவராஜ், திவாகர் ஆகியோர். இதில் தி.மு.க பிரமுகர்களால் பிரியாணி கடை ஓனர் தாக்கப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, தி.மு.க மீது விமர்சனங்கள் எழுந்தன. தாக்கப்பட்டவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

`ஃபீஸ் கட்டலன்னா படிக்க முடியாது!'‍- சினிமா ஆசைகாட்டி மாணவரிடம் லட்சத்தைச் சுருட்டிய நடிகர், தந்தை

பிரியாணிக் கடை என்று இல்லாமல் பியூட்டி பார்லர், செல்போன் கடை, பெட்ரோல் பங்க் முதலான பகுதிகளில் அட்ராசிட்டி நிகழ்த்தி வரும் லோக்கல் தி.மு.க பிரமுகர்களைப் பற்றிச் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமீபத்தில், சென்னை சேப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் கண்ணனும் அவரது மகனும் கல்லூரி மாணவர் ஒருவரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து, சமூக வலைதளங்களில் அதிகமாகப் பேசப்பட்டது.

பேராசிரியையை ஆம்புலன்ஸில்  கடத்திய அதிமுக நிர்வாகி...  ஊதிப் பெரிதாக்கும் கோஷ்டி அரசியல்!
6
சூர்யா

`ஜன கன மன.. ஜனங்களை நினை!' - சூர்யா Vs பி.ஜே.பி அரசு

அகரம் என்ற கல்வி அறக்கட்டளை நடத்தி வரும் நடிகர் சூர்யா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நீட் தேர்வை எதிர்த்துக் கட்டுரை எழுதினார். அது அப்போது பலரால் பேசப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி வெற்றிபெற்ற பிறகு, புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் வரைவுக் கொள்கை, மக்களிடம் கருத்துபெறுவதற்காக வெளியிடப்பட்டது. மொழிக் கொள்கை, தேர்வு முறை, இட ஒதுக்கீடு, நிதி முதலானவற்றில், புதிய கல்விக் கொள்கை மக்கள் விரோதமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள், கல்வி சார்ந்த செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

அப்போது நடிகர் சூர்யா, புதிய கல்விக்கொள்கை தொடர்பாக தனது 10 கேள்விகள் எனப் பட்டியல் ஒன்றை வெளியிட்டார். ``30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விஷயத்தில் ஏன் இவ்வளவு அவசரம்?" என பி.ஜே.பி அரசை நோக்கிக் கேள்வி எழுப்பினார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த உள்ளிட்டோரும், பல்வேறு அரசியல் தலைவர்களும் சூர்யாவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறினர். பிஜேபியினரும், அ.தி.மு.க அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட தலைவர்களும் சூர்யாவின் கருத்தை எதிர்த்துப் பேசினர்.

காப்பான்

சமீபத்தில் நடந்த `காப்பான்' பட ஆடியோ லான்ச்சில், நடிகர் சூர்யா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே வெறும் கருவிதான் எனவும், கோட்சேவின் கருத்தை எதிர்க்க வேண்டும் என்று பெரியாரைச் சுட்டிக் காட்டியும் பேசினார். அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

7
அசுரன் படத்தைப் பார்க்கும் ஸ்டாலின்

`வா அசுரா வா அசுரா வா' - மு.க.ஸ்டாலின் Vs மருத்துவர் ராமதாஸ்

`அசுரன்' படத்தைப் பார்த்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``அசுரன் படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!" என்று ட்விட்டரில் பதிவிட்டார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ``ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!" என்று பதிவிட்டார். இது இருதரப்பினருக்கிடையில் வாக்குவாதமாக மாறியது.

`முரசொலி' இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை" என்றும், ``அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?"என்று மு.க.ஸ்டாலின் பத்திர நகல் ஒன்றைப் பதிவிட, விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

``முரசொலி அலுவலகம் மட்டுமல்ல; எல்.ஐ.சி பில்டிங்கூட பஞ்சமி நிலம்தான்.. நிரூபிக்கவா?”-'தடா' பெரியசாமி
ராமதாஸ்

ராமதாஸ் இதற்குப் பதிலளிக்கும் விதமாக ``முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும் மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?" என்று கேட்க, அரசியல் வட்டாரங்கள் சூடுபிடித்தன. ராமதாஸுக்குத் தான் ஏற்கெனவே விடுத்த சவாலுக்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை என்றது ஸ்டாலின் தரப்பு.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் இரு தரப்புகளும் அமைதியாகியுள்ளன.

8
காரப்பன்

`இந்த தீபாவளி நம்மள்து!' - காரப்பன் சில்க்ஸ் Vs ஹெச்.ராஜா

வழக்கம் போல, தமிழ்நாட்டின் சமீபத்திய சர்ச்சைகளில் சிக்கிய அதே ஹெச்.ராஜாதான் இதிலும் தொடர்புடையவர். கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையான காரப்பன் சில்க்ஸில் ```இந்து உணர்வாளர் யாரும் எந்தப் பொருளையும் வாங்க மாட்டோம். இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் இயக்கத்தைச் சேர்ந்த அவரது வர்த்தக ஸ்தாபனங்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஆயிரங்களில் நடந்துகொண்டிருந்த வியாபாரம், இப்போது லட்சங்களில் சென்றுகொண்டிருக்கிறது. ஆன்லைனில் அதிகளவு 5 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துக்கொண்டிருக்கிறது
காரப்பன்
``ஆயிரங்களிலிருந்து லட்சத்துக்கு விற்பனை... மோடி செய்த நல்லவை..!"  - `காரப்பன் சில்க்ஸ்' காரப்பன்

காரப்பன் சில்க்ஸ் கடையின் நிறுவனர் காரப்பன் சமீபத்தில் திராவிட இயக்கம் ஒன்றின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், இந்துக் கடவுள்களைப் பற்றி இழிவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் நீட்சியாகத்தான், ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பதிவும் வெளியாகியது. ஆனால், ஹெச்.ராஜா காரப்பன் சில்க்ஸ் நிறுவனத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியதைப் பின்னுக்குத் தள்ளி, காரப்பனுக்கு அதிக லாபத்தைக் கொடுத்தது தமிழகம். ``ஆயிரங்களில் நடந்துகொண்டிருந்த வியாபாரம், இப்போது லட்சங்களில் சென்றுகொண்டிருக்கிறது. ஆன்லைனில் அதிகளவு 5 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துக் கொண்டிருக்கிறது" என்று நமக்களித்த பேட்டியில் கூறினார் காரப்பன்.

9
சீமான்

ராஜீவ் காந்தியைக் கொன்றது யார்? - சீமான் Vs காங்கிரஸ்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், ``அமைதிப்படை எனும் அநியாயப் படையை இலங்கைக்கு அனுப்பி, எம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜீவ் காந்தி என்கிற என் இனத்தின் எதிரியை, தமிழர் தாய் நிலத்திலேயே கொன்று புதைத்தோம்" என்று உணர்ச்சிவசமாகப் பேசினார். அது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

`எச்சரிக்கிறோம் ராஜபக்‌ஷேவை’ முதல் இன்றுவரை சீமான் ஈழப்பேச்சுகளின் தாக்கம் என்ன?

விடுதலைப் புலிகள் அமைப்பு ராஜீவ் காந்தி கொலை குறித்து மறுப்பு தெரிவித்துள்ள போது, சீமானின் பேச்சு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் கண்டிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்க, மிகப்பெரிய விவாதங்கள் இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன. சீமான் மீது வன்முறையைத் தூண்டுதல், தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகியப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எனினும், சீமான் தான் பேசிய கருத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என அறிவித்தார். இந்தப் பின்னணியில், ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

10
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு!

திருவள்ளுவருக்கே விபூதியா? - தமிழக அரசு அங்கீகரித்த வெள்ளுடை திருவள்ளுவர் Vs பி.ஜே.பி வெளியிட்ட காவியுடை  திருவள்ளுவர்!

வட இந்தியாவில் காந்தி, அம்பேத்கர் ஆகியோருக்குக் காவி நிற உடை அணிவித்த பி.ஜே.பியினர், தமிழ்நாட்டின் திருவள்ளுவருக்குக் காவியுடையும், மத அடையாளங்களையும் அணிவித்த படம் ஒன்றை, பி.ஜே.பி-யின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்ற, நெட்டிசன்களுக்கிடையில் சண்டை தொடங்கியது. வள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என பி.ஜே.பி தரப்பு கூற, மறுபுறம் அவர் சமண மதத்தவர் என்றும், பௌத்த மதத்தவர் என்றும், மதமற்றவர் என்றும் மாறிமாறி எதிர்த்தரப்பில் கூறப்பட்டன. ஒட்டுமொத்த எதிர்த்தரப்பும், வள்ளுவரின் மதத்தின் மீது முரண்பாடுகளை முன்வைத்தாலும், அவர் இந்து மதத்தின் வர்ணாசிரமத்திற்கு எதிரானவர் என்று விவாதங்களை முன்வைக்கின்றனர்.

இந்த விவகாரத்திலும் ட்விட்டரில் ஆஜரானார் ஹெச்.ராஜா. `திருக்குறள் என்பதே சனாதன இந்து தர்மக் கோட்பாட்டின் அடிப்படையில் இயற்றப்பட்டிருப்பதாகப்' பதிவிட்டார். சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வெடித்த இந்த நிகழ்வு, தஞ்சையின் பிள்ளையார்பட்டியில் எதிரொலித்தது. பிள்ளையார்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த வள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் மாட்டுச் சாணத்தை வீசி விட்டுச் சென்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் இதைக் கண்டித்துள்ளனர். மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். எனினும், திருவள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்ற விவாதம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

விஜய்யின் 'சர்கார்' திரைப்படத்துக்கு எதிராக அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

`சர்கார்' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த வரலட்சுமியின் கதாபாத்திரத்தின் பெயர் `கோமளவல்லி' என்று சூட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அ.தி.மு.கவினர் தியேட்டர்களை முற்றுகையிட்டு பேனர்களைக் கிழித்தனர். இதை `பிகில்' ஆடியோ லான்ச்சில் நடிகர் விஜய் சுட்டிக்காட்டிப் பேசினார். அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இணக்கமான பேச்சால், `பிகில்' சர்ச்சையில்லாமல் வெளியானது.

இதில் பெரும்பாலான சர்ச்சைகள் பி.ஜே.பியினரைச் சுற்றியே நிகழ்பவை. மத்திய அரசோடு இணக்கமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்தச் சர்ச்சைகளை வேடிக்கை பார்த்து வருகிறார். இவற்றில் அ.தி.மு.கவினர் கருத்துகள் கூறியபோதும், சர்ச்சைகளுக்குள் தலையிடவில்லை. மாநிலத்தின் ஆளுங்கட்சி மீதான அதிருப்திகளும் விமர்சனங்களும் பரவாமல் இருக்க, மத்தியில் ஆளுங்கட்சி ஏற்படுத்தும் சர்ச்சைகளுக்கு இடம் தந்து வருகிறார் எடப்பாடி. ஒவ்வொரு நாளும், புதிய சர்ச்சைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு