உத்தரகாண்ட் மாநில அரசானது பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஐந்து பேர்கொண்ட குழுவை நியமிப்பதாகக் கூறியதையடுத்து, இந்த முடிவுக்கு எதிராக ஜமியத் உலெமா-இ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு உத்தரப்பிரதேசத்தில் நேற்று தீர்மானங்களை நிறைவேற்றியது. அதாவது, நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வளர்ந்துவரும் வெறுப்பை அடக்குதல், இஸ்லாமிய வெறுப்பை ஒழித்தல் உட்பட மூன்று முக்கியத் தீர்மானங்களை இந்த அமைப்பு நிறைவேற்றியது. மேலும், இந்த நிகழ்ச்சியின்போது கூட்டத்தில் பேசிய இதன் தலைவர் மௌலானா அர்ஷாத், ``எங்களின் இந்தப் போராட்டம், நாட்டைப் பிளவுபடுத்தும் அரசாங்கத்தோடுதான். எந்தவோர் இந்துவோடும் அல்ல" எனக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, இந்த அமைப்பின் இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே, ``பொது சிவில் சட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல" என உத்தரப்பிரதேச மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறியுள்ளார்.

இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய டேனிஷ் ஆசாத், ``பொது சிவில் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இதில் யாருடைய அரசியலமைப்பு உரிமைகளும் மீறப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், பொதுஜன முஸ்லிம்களின் குரலுக்கும் நாம் செவிசாய்க்க வேண்டும். இதற்கு முன்னிருந்த சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் போன்ற அரசுகள் செய்யாத முன்னேற்றத்தை இஸ்லாமியர்கள் இன்று விரும்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் முந்தைய அரசுகள், இஸ்லாமியர்களை வெறும் வாக்குவங்கியாக மட்டுமே பயன்படுத்தின. ஆனால், இஸ்லாமியர்களின் முன்னேற்றத்துக்காக நாங்கள் எல்லா வகையிலும் பாடுபடுகிறோம். அதுமட்டுமல்லாமல் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றங்களை அரசாங்கம் கொண்டுவரும்" எனக் கூறினார்.
