Published:Updated:

`பன்றிக் காய்ச்சல்' வதந்தி டு கொரோனா தொற்று... எப்படியிருக்கிறார் அமித் ஷா?

அமித் ஷா
அமித் ஷா

`உண்மையில் அமித் ஷா எப்படியிருக்கிறார்?' என பா.ஜ.க முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்.

ஹரியானா, குருகிராமிலுள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்குச் சிகிச்சை எடுத்தபடியே, அரசாங்க அலுவல்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ` சர்க்கரைக் குறைபாட்டுடன் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் சிகிச்சையிலிருக்கிறார்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

ஆகஸ்ட் 2 ட்வீட்!

கொரோனா தொற்றின் தாக்கத்தால் வல்லரசு நாடுகளே திணறிவருகின்றன. இந்தியாவில், கொரோனா தாக்கத்தைக் குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்துவருகின்றன. மத்திய அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் எனப் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் பலரும் மிகுந்த எச்சரிக்கையுடன் சந்திப்புகளை நிகழ்த்திவந்தனர். அந்த வரிசையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டார்.

அதையும் மீறி அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார் அமித் ஷா. அந்தப் பதிவில், `தொடக்க நிலையிலேயே பரிசோதனை செய்துகொண்டேன். அதில் `கொரோனா பாசிட்டிவ்’ என வந்தது. என்னுடைய உடல்நிலை நன்றாக உள்ளது. ஆனால், மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்' என்று கூறியிருந்தார்.

பன்றிக் காய்ச்சல் வதந்தி!

அமித் ஷாவின் இந்த ட்வீட், பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பிருந்தே அமித் ஷாவின் உடல்நிலை குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகின. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டங்களில் அவர் சோர்வுடன் இருப்பது போன்ற படங்கள் வெளியாகின. இதைவைத்து, `அமித் ஷா பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை மோசமடைந்துவிட்டது' என்று தகவல் பரவியது. இது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளியானதால், கொதித்துப்போன அமித் ஷா, இந்தியில் ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.

அமித் ஷா
அமித் ஷா

அதிர்ச்சி ட்வீட்!

அதில், `எனது உடல்நிலை குறித்துப் பலரும் ட்வீட் செய்திருந்தார்கள். நான் சாக வேண்டும் என்று சிலர் விருப்பம் தெரிவித்திருந்தனர்’ என்று பதிவிட்டவர், கூடவே கடிதம் ஒன்றையும் இணைத்திருந்தார். அந்தக் கடிதத்தில், `எனது உடல்நிலை குறித்த வதந்திகளில் நான் கவனம் செலுத்தவில்லை. ஓர் உள்துறை அமைச்சராக நான் எனது பணியில் ஆர்வம் காட்டினேன். எனது உடல்நிலை குறித்து லட்சக்கணக்கான பா.ஜ.க-வினர் கவலை தெரிவித்தனர். இதனால்தான் நான் விளக்கம் அளிக்க வேண்டிய சூழலுக்கு ஆளானேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட்டும் தேசிய அளவில் விவாதப் பொருளானது.

எப்படி வந்தது கொரோனா?

`உண்மையில் அமித் ஷா எப்படியிருக்கிறார்?' என பா.ஜ.க முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். `` அமித் ஷாவுக்கு இப்போது 55 வயதாகிறது. அவருக்கு சர்க்கரைக் குறைபாடு இருக்கிறது. அதற்கான தினசரி மருந்துகளை உட்கொண்டு வருகிறார். `பொதுவாக, சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், சற்று சிக்கலான நிலையை ஏற்படுத்தும்’ என மருத்துவர்கள் சொல்கின்றனர்.

`அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையைத் தவிர்த்தது ஏன்?’ - கேள்வி எழுப்பும் சசி தரூர்

இதன் காரணமாக, அரசு அலுவல்களை மிகுந்த எச்சரிக்கையுடன்தான் அவர் கையாண்டார். அதையும் மீறி அவருக்கு எப்படித் தொற்று ஏற்பட்டது என்று தெரியவில்லை. அவருடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடைசியாக அவரைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

மருத்துவமனையில் 10 நாள்கள்!

மெதந்தா மருத்துவமனையில் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். அதனால்தான், கோழிக்கோடு விமான விபத்து ஏற்பட்டவுடன், தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினரை உடனடியாக சம்பவ இடத்துக்குச் செல்லுமாறு உத்தரவிட்டார். அவர் `கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டார்’ என பா.ஜ.க எம்.பி மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

’எனக்கு எந்த நோயும் இல்லை; நான் நல்லா இருக்கேன்!” - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித் ஷா

ஆனால், இந்தத் தகவலை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. `அப்படி எந்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை' என விளக்கமும் அளித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமையோடு அமித் ஷா மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு வாரம் ஆகிறது. அன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம்" என்றார் உறுதியான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு