Published:Updated:

`தமிழகத்தில் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!’ - அமைச்சர் கே.என்.நேரு

ஆய்வில் அமைச்சர்கள் நேரு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்
ஆய்வில் அமைச்சர்கள் நேரு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்

``தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அடிப்படைப் பணிகள் நடைபெற்றுவருகின்றன” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக உள்ளாட்சித்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ’ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மற்றும் குளம் புனரமைப்பு பணிகளை’ ஆய்வுசெய்தார். மீளவிட்டான் அருகே 132 ஏக்கர் பரப்பளவுள்ள ’சி.வ’ குளத்தில் ரூ.11.5 கோடி செலவில் நடைபெற்றுவரும் புனரமைப்புப் பணிகளான கரைகளை பலப்படுத்துதல், வரத்துக் கால்வாயைச் சீர்செய்தல், தூர்வாருதல் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையப் பகுதியில் சுமார் ரூ.50 கோடி செலவில் நடைபெற்றுவரும் ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வில் அமைச்சர்கள் நேரு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்
ஆய்வில் அமைச்சர்கள் நேரு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்

அத்துடன், திட்டம் நிறைவு பெறும் காலம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ``முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் தற்போது வரையிலும் முடிக்கப்படாமல் உள்ளன. அவற்றை விரைவாக முடிக்கும் வகையில் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் மற்றும் உள்ளாட்சித்துறை வளர்ச்சித் திட்டப் பணிகளையும் இன்று ஆய்வு செய்திருக்கிறோம். தூத்துக்குடியில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்கவும், சாலைகளைச் சீர்செய்யவும் திட்டப்பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் ’சி.வ’ குளம்
புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் ’சி.வ’ குளம்

வரும், டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அடிப்படைப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதைப்போல சில நகராட்சிகள், மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார். அதைத் தொடர்ந்து அங்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு ஏன் முக்கியம்? தரவுகள் சொல்லும் உண்மை!
அடுத்த கட்டுரைக்கு