நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பார்வையாளர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியில் மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 33 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். மகேஸ்வரன், தட்சிணாமூர்த்தி, லஷ்மி, அஜய் யாதவ், நிர்மல்ராஜ், கோவிந்தராஜ், மகேஷ்வரி ரவி குமார், ரத்னா, வளர்மதி, பிரதீப் குமார் ,கற்பகம் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனுத் தாக்கல் நேற்றிலிருந்து தொடங்கப்பட்டிருப்பதால், இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வேட்புமனுத் தாக்கல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என அனைத்துவிதமான தேர்தல் பணிகளையும் மாநகராட்சி, பேரூராட்சிவாரியாக மேற்பார்வையிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
