Published:Updated:

`அவர் ஆங்கிலத்தில் நன்றாக பேசுவார்; ஆனால், பேசவிரும்புவதில்லை’ - மோடி - ட்ரம்ப் சந்திப்பு சுவாரஸ்யம்

கலிலுல்லா.ச

``இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பார்கள் என்பதே தன் நிலைப்பாடு"

Narendra Modi with trump
Narendra Modi with trump

ஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பியாரிட்சில் இன்று நடைபெற்றது. ஜி-7 மாநாட்டில் இந்தியா உறுப்பினராக இல்லை. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, உச்சி மாநாட்டுக்கு வருகைதந்தார்.

talking each other
talking each other

அப்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை மோடி சந்தித்துப்பேசினார். மாநாட்டின் இடையே பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையேயான சந்திப்பு நிகழ்ந்தது. காஷ்மீர் விவகாரம் குறித்து இரண்டு நாட்டு தலைவர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்.``காஷ்மீர் இரு நாட்டுப்பிரச்னை. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, மற்ற நாடுகளை தொந்தரவு செய்ய இந்தியா விரும்பவில்லை.

மேலும், காஷ்மீர் தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று மோடி தெரிவித்தாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ``இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பார்கள் என்பதே தன் நிலைப்பாடு. நாங்கள் வர்த்தகம், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினோம்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

Modi - Trump
Modi - Trump

இருவருக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது, ட்ரம்ப் வழக்கம்போல ஆங்கிலத்தில் பேச, மோடி இந்தியில் பேசினார். அவரது பேச்சு மற்றவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. `எங்கள் இருவரையும் பேசவிட்டால், நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருப்போம்’ என்று இந்தியில் பிரதமர் மோடி கூற, உடனே ட்ரம்ப், ``பிரதமர் மோடி ஆங்கிலத்தில் நன்றாக பேசுவார். ஆனால், அவர் பேச விரும்புவதில்லை” என்று கூற அங்கே சிரிப்பலை எழுந்தது. இருவரும் சிரித்துக்கொண்டிருந்தனர்; அப்போது மோடி, ட்ரம்ப் கையைப் பிடித்து விளையாட்டாக அடித்தார்.