Published:Updated:

"வெளிப்படையாக இருக்கலாமே!" - காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அமெரிக்க செனட்டர்!

Chris Van Hollen
Chris Van Hollen

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு, மத்திய அரசால் நீக்கப்பட்ட பிறகு, உலக நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மனித உரிமை மீறல் செய்வதாகக் கூறின. தற்போது அமெரிக்க செனட்டர் ஒருவர் காஷ்மீரை ஆய்வுசெய்ய விரும்பியபோது, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிகாரச் சபையான செனட்டின் உறுப்பினர்களுள் ஒருவர் க்றிஸ் வான் ஹோலன். இவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்தவர். இவரது தந்தை அமரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவர். வான்ஹோலன் கொடைக்கானலில் கல்வி கற்றவர் என்பதால், அவருக்கு இந்திய அரசியல் குறித்தும் பரிச்சயம் உண்டு.

Chris Van Hollen
Chris Van Hollen

கடந்த ஆகஸ்ட் 05 அன்று, மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ நீக்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்த காஷ்மீர் அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இணையம், செல்போன் வசதிகளும் பல பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் காஷ்மீர் மக்களின் நிலையைப் பார்வையிட விரும்பியும், மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

ஐ.நா சபையில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்தியா காஷ்மீர் மீது அத்துமீறல் நிகழ்த்துவதாகக் கூறியபோது, இந்திய அரசு காஷ்மீர் பிரச்னையை 'உள்நாட்டு விவகாரம்' என்று அறிவித்தது. இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க செனட்டர் க்றிஸ் வான் ஹோலன் சமீபத்தில் இந்தியா வந்துள்ளார். இந்திய - அமெரிக்க உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய வான் ஹோலன், காஷ்மீர் சென்று அந்தப்பகுதி மக்களின் நிலையை நேரடியாக அறிவதற்கு அனுமதி கேட்டார். ஆனால், அவருக்கு மத்திய அரசு காஷ்மீர் செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளது.

Chris Van Hollen with Prakash Javadekar
Chris Van Hollen with Prakash Javadekar

வான் ஹோலனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இந்தச் சூழல், சர்வதேச அளவில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. பிரதமர் மோடி அமெரிக்காவில் 'ஹௌடி மோடி' கொண்டாட்டங்களை முடித்துவிட்டு, இந்தியா திரும்பிய நான்காவது நாள், அமெரிக்க செனட்டர் லின்ட்ஸே கிரஹாம் அமெரிக்க நிர்வாகம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.

கிரஹாம் தாக்கல் செய்த அறிக்கை தெற்கு ஆசிய நாடுகளைப் பற்றிக்குறிப்பிடுகிறது. இதில், 2020ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு 120 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக, "காஷ்மீரில் நிலவும் மனித உரிமை நெருக்கடி" என்ற தலைப்பில், இந்திய அரசு காஷ்மீரில் தொலைத்தொடர்பு, இணையம் ஆகியவற்றை மீண்டும் அளிக்க வேண்டும்; ஊரடங்கு உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்; மத்தியஅரசின் முடிவுக்கு எதிராக போராடியவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

அமெரிக்க அறிக்கை
அமெரிக்க அறிக்கை

"காஷ்மீரில் நிலவும் மனித உரிமை நெருக்கடி" என்ற தலைப்பில், இதனை எழுதியவர் வான் ஹோலன் என்றும் கூறப்படுகிறது. இது இந்திய - அமெரிக்க உறவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும், சர்வதேச நாடுகள் இந்தியா காஷ்மீரில் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

காஷ்மீருக்கு அனுமதிக்கப்படாதது குறித்து ஊடகங்களிடம் பேசிய வான்ஹோலன், "இந்தியா மீது மிகுந்த மதிப்பு எனக்கு உண்டு; மேலும் இந்திய அமெரிக்க உறவுகள் சுமூகமாக நீடிப்பதை நான் எப்போதும் விரும்புகிறேன்.

`பாகிஸ்தானை நம்புகிறேன்; காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்!’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப்
‘‘காஷ்மீர் சென்று, மக்களின் நிலையை நேரில் கண்டு முடிவு செய்யலாம் என நினைத்தேன். எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில், மறைப்பதற்கு எதுவும் இல்லையெனில், வெளிப்படையாக என்னை அனுமதிக்கலாம் என்பதுதான். இல்லாவிட்டால் இந்தியஅரசு எதையோ மறைக்கிறது என்றுதான் என்னால் பொருள்கொள்ள முடியும்.’’
க்றிஸ் வான் ஹோலன், அமெரிக்க செனட்டர்.
`ஐ.நா சறுக்கல்; உதவிக்கு வராத உலக நாடுகள்!' - காஷ்மீர் விவகாரத்தில் இம்ரான் கான் போடும் புதுக்கணக்கு
Jaishankar
Jaishankar

டெல்லியில் நடந்த பொருளாதாரக் கூட்டம் ஒன்றில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க அறிக்கையை எழுதிய செனட்டர்கள், அந்நாட்டு ஊடகங்கள் வெளியிடும் 'தவறான' செய்திகளால் இவ்வாறு எழுதியதாகவும், கடந்த சில வாரங்களாக, அமெரிக்க செனட்டர்கள் பலரையும் சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து விளக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு