அமெரிக்கா, தென்கொரிய உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சத்தைக் கொடுக்கும் வகையில் அவ்வப்போது வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. இதற்கிடையில் கடந்த 13-ம் தேதி அமெரிக்கா - தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி தொடங்கியது. இந்தப் பயிற்சி வரும் 23-ம் தேதி வரை நடக்கிறது.

இது வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. எனவே, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குறுகிய தொலைவு சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் செலுத்தி வடகொரியா சோதனை செய்தது. இதற்கு அமெரிக்காவும், தென்கொரியவும் கடும் கண்டம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி தென்கொரியா-ஜப்பானுக்கிடையிலான உச்சி மாநாடு நடைபெற்றது. இதற்காக தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக்-இயோல், ஜப்பானுக்குச் சென்றார்.
அங்கு அந்த நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தென்கொரியா, ஜப்பானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். அதன்படி இரு நாடுகளுக்கும் இடையேயான உச்சி மாநாடு தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் கிழக்குக் கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. குறுகிய இலக்குகொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை கிழக்குக் கடல் பகுதியில் செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்திருக்கிறது. வடகொரியாவின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தென்கொரிய அரசு கூறியிருக்கிறது.
இந்த ஏவுகணை சிலோவிலிருந்து சோதிக்கப்பட்டிருக்கிறது. இது எதிர்காலத்தில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் (ICBM) சோதனைகளில் வேகத்தையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்த உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் வடகொரியா கடந்த 18, 19-ம் தேதிகளில் `போர்த் தடுப்பு மற்றும் அணுசக்தி எதிர்த்தாக்குதல் திறனை’ உயர்த்தும் வகையில் பயிற்சியில் ஈடுபட்டது.

இது குறித்து அந்த நாடு, "உண்மையான போருக்கு பதிலடி கொடுப்பதற்கும், ஆக்கிரமிப்புக்காக தங்கள் போர்ப் பயிற்சிகளை விரிவுபடுத்தும் எதிரிகளுக்கு வலுவான எச்சரிக்கையை அனுப்புவதற்கும் எங்கள் கடுமையான விருப்பத்தை வெளிப்படுத்துவதையும் இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பயிற்சியில், ஒரு போலி அணு ஆயுதம் பொருத்தப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை 800 கி.மீ (497 மைல்) தூரம் பறந்து ஓர் அணுசக்தித் தாக்குதலின் சூழ்நிலையில் இலக்கைத் தாக்கியது" என்று தெரிவித்திருக்கிறது.
அப்போது கிம் தன் மகளுடன் மீண்டும் சோதனையில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதுவரை, வடகொரியா ஏவுகணைகளை ஏவுவதற்கு மொபைல் லாஞ்சர்களையே பயன்படுத்திவந்தது. ஆனால், அதன் மோசமான சாலை மற்றும் அமைப்பு நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றங்களைச் செய்திருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கிம், "இந்தப் பயிற்சிகள் ராணுவத்தின் போர்த்திறனை மேம்படுத்தின. கொரியா ஜனநாயக மக்கள் குடியரசின் அணுசக்தி, எதிரியின் பொறுப்பற்ற நகர்வுகள் மற்றும் ஆத்திரமூட்டல்களை, அதன் உயர் போர் தயார்நிலையை வலுவாகத் தடுக்கும். எந்தவொரு சூழ்நிலையிலும் தயக்கமின்றி அதன் முக்கியப் பணியை மேற்கொள்ளும்" என்றார்.