Published:Updated:

``அமித் ஷா பயந்துவிட்டார்; விரைவில் முதல்வராவார் ஸ்டாலின்!” - உதயநிதி

``இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க அறிவித்த போராட்டத்தைப் பார்த்து அமித் ஷா பயந்துவிட்டார். அதனால்தான், தன் கருத்தை அவர் மாற்றிக்கொண்டுள்ளார். தமிழகத்தில் விரைவில் தி.மு.க ஆட்சி அமைக்கும். தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர்வது உறுதி" என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டம், ஜெகதாபி அருகே உள்ள முத்துகாபட்டி சொட்டைக்குளம், அப்பகுதியில் உள்ள விவசாய தேவையையும், குடிநீர்த் தேவையையும் பூர்த்திசெய்யும் குளமாக உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
நா.ராஜமுருகன்

இந்தக் குளத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தூர்வாரும் பணியைக் கரூர் மாவட்ட தி.மு.க, கடந்த இரண்டு நாள்களாக மேற்கொண்டு வருகிறது. இதைக் கரூர் வருகைதந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது, அவரோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மாநில நெசவாளர் அணிச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உட்பட தி.மு.க நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

தூர் வாரப்படும் குளம்
தூர் வாரப்படும் குளம்
நா.ராஜமுருகன்
"எனக்கு இளைஞரணியா... சிரிப்புதான் வருது!" - 'அப்போ - இப்போ' உதயநிதி #21YearTimeline

அதைத்தொடர்ந்து, வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் தி.மு.க இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம், இளைஞரணி அமைப்பாளர் இளவரசு தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ``பொதுவாக ஆளுநர்கள், முதலமைச்சர்களைத்தான் அழைத்துப் பேசுவது வழக்கம். ஆனால், தமிழக ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவரை அழைத்துப் பேசியுள்ளார். இது தி.மு.க-வுக்கு கிடைத்த வெற்றி. `அமித் ஷா பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது' என்று ஆளுநர் தி.மு.க தலைவரிடம் கூறியுள்ளார். அதற்கு தி.மு.க தலைவர், 'இது உங்களுடைய கருத்தா அல்லது அமித் ஷாவின் கருத்தா?' என்று கேட்டுள்ளார். உடனே ஆளுநர், `அமித் ஷா சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இது அவருடைய கருத்துதான்' என்று சொல்லியுள்ளார். இதுவே தி.மு.க-வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்தியை தமிழகத்தில் திணிப்பதை எதிர்த்து, தி.மு.க அறிவித்த போராட்டத்தைக் கண்டு அமித் ஷா பயந்துவிட்டார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
நா.ராஜமுருகன்

அதனால்தான், தன் கருத்தை மாற்றிக் கொண்டுவிட்டார் அமித் ஷா. தமிழகத்தில் தி.மு.க விரைவில் ஆட்சி அமைக்கும். தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது உறுதி. இந்தியை எதிர்த்து தி.மு.க போராட்டத்தைத் தற்காலிகமாகத்தான் ஒத்திவைத்துள்ளது. தலைமைக்கழகம் அறிவித்தால், இந்தியை எதிர்த்து இளைஞரணி மிகப்பெரிய போராட்டத்தைத் தமிழகத்தில் நடத்தும். தி.மு.க இளைஞரணி சார்பில் கரூர் மாவட்டத்தில் குளங்களைத் தூர்வாரி வருவது வரவேற்கத்தக்கது. ஆனால், அதைப் பார்வையிட நான் போனபோது என்னை வரவேற்று பட்டாசுகளை வெடித்தீர்கள். அது தவறு. பட்டாசு வெடிப்பதால், பறவைகள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இனி பட்டாசு வெடிப்பதைத் தவிருங்கள்" என்றார்.