உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோவின் மதுரா நகர், நிகாமில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்களைக் குப்பைவண்டியில் எடுத்துச் சென்றிருக்கிறார். இதைச் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த நிலையில், இது தொடர்பாகக் குப்பைவண்டியில் அரசியல் தலைவர் படங்களை எடுத்துச்சென்ற ஒப்பந்தத் தொழிலாளி, "இந்தியத் தலைவர்களின் படங்கள் குப்பையில் கிடப்பதைப் பார்த்தேன். அதனால் அவற்றை நான் எடுத்துச் சென்றேன்" எனக் கூறியிருக்கிறார்.
ஆனாலும், அந்த ஒப்பந்தத் தொழிலாளியைப் பணிநீக்கம் செய்து அரசு நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. அந்த ஊழியரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள், "அதிலிருந்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்களை, அதன் பின்னர் நாங்கள் எடுத்துச் சென்றோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, மதுரா-பிருந்தாவனின் கூடுதல் நகராட்சி ஆணையர் சத்யேந்திர குமார் திவாரி, "அந்த ஊழியர் தவறுதலாக அரசியல் தலைவர்களின் படங்களைக் குப்பைவண்டியில் எடுத்துச் சென்றிருக்கிறார். இது திட்டமிட்டு நடந்ததல்ல" என விளக்கமளித்திருக்கிறார்.
