ஜூலை 18-ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாகக் கூட்டத்தொடர் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டுவருகிறது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு காங்கிரஸ் எம்.பி-க்கள்மீதான உத்தரவும் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் முக்கிய ஆவணம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்தது. அதாவது மதம், இனம், பிறந்த இடம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குழுக்களுக்கிடையே பகைமையை ஊக்குவித்ததற்காகக் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியல் அது. 2018 முதல் 2020 வரையிலான இந்தத் தரவுகள் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இதில், 2018-ல் 1,716 பேரும், 2019-ல் 1,315 பேரும், 2020-ல் 1,763 பேரும் கைதுசெய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில், அதிகம் கைதானவர்கள் எண்ணிக்கையைவைத்து மாநிலவாரியாகப் பட்டியல் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக 628 கைதுகளுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 613 கைதுகளுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில், 552 மற்றும் 387 கைதுகளுடன் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. மேலும், லடாக், புதுச்சேரி, லட்சத்தீவு போன்ற யூனியன் பிரதேசங்களிலிருந்து ஒருவர்கூட கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.